இந்தியன் படத்துக்காக தேசிய விருது வாங்கிய கமல்ஹாசன்.. வீடியோ வெளியிட்ட லைகா.. புரமோஷன் ஸ்டார்ட்!
சென்னை: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 28 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு லைகா நிறுவனம் தொடர்ந்து பல போஸ்ட்களை வெளியிட்டு இந்தியன் 2 படத்திற்கான புரமோஷன் பணிகளை ஆரம்பித்துள்ளது.
ஐந்தாண்டுகளுக்கு முன்னதாக தொடங்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படம் ஒருவழியாக இந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாகும் என லைகா அறிவித்துள்ள நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போகும் என்றும் ஜூலை மாதம்தான் இந்தியன் 2 வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆனால், லைகா நிறுவனம் உறுதியாக இந்தியன் 2 படத்தை அடுத்த மாதமே வெளியிடும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. அதைக் குறிக்கும் விதமாக தற்போது கம்பேக் இந்தியன் பாடலுடன் புரமோஷன் பணிகளை ஆரம்பித்துள்ளது.
இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த இந்தியன்: 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படம் தமிழ் சினிமாவின் தலைசிறந்த படமாக இன்றுவரை மக்களால் பாராட்டப்பட்டு வருகிறது. அந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதை கமல்ஹாசன் பெற்றார். லஞ்சத்துக்கு எதிரான இந்தியன் தாத்தாவாக கமல்ஹாசன் நடிக்க, லஞ்சத்தில் ஊறிப்போய் கிடக்கும் மகன் சந்துருவாகவும் கமல் நடித்த கலக்கியிருந்தார். அவருக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா, சுகன்யா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கவுண்டமணி, செந்தில் காமெடி மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் அத்தனை பாடல்களும் மிகப் பெரிய வெற்றியை பெற்றது.
இந்தியன் 2: ஷங்கர், கமல்ஹாசன் மீண்டும் இணைந்து இந்தியன் 2 மற்றும் 3 படங்களை உருவாக்கியுள்ளனர். இந்த படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மானுக்கு பதிலாக அனிருத் இசையமைத்துள்ளார். அவரது இசையில் வெளியான கம் பேக் இந்தியன் பாடலுடன் தற்போது புரமோஷன் வேலைகளை லைகா நிறுவனம் ஆரம்பித்துள்ளது. இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். 90 வயது தாத்தாவாக கமல்ஹாசன் சேனாபதி கதாபாத்திரத்தில் மீண்டும் மிரட்ட காத்திருக்கிறார். கமல்ஹாசனின் பேரனாக சித்தார்த் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், பாபி சிம்ஹா, எஸ்.ஜே. சூர்யா, ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தேசிய விருது வாங்கும் வீடியோ: இந்தியன் திரைப்படம் வெளியாகி 28 ஆண்டுகளை கடந்த நிலையில் அந்தப் படத்திற்காக தேசிய விருதை உலக நாயகன் கமல்ஹாசன் பெற்ற வீடியோவை தற்போது லைகா நிறுவனம் ஷேர் செய்துள்ளது. இந்த மாத இறுதியில் இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்றும் விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 28 ஆண்டுகளுக்கு முன்பாக கமல் எப்படி க்யூட்டாக இருக்கிறார் பாருங்க என ரசிகர்கள் அந்த வீடியோவை அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.
ட்ரிபிள் ட்ரீட்: வரும் ஜூன் மாதம் திட்டமிட்டபடி இந்தியன் 2 திரைப்படம் வெளியானால் ஜூன் 28ம் தேதி கல்கி திரைப்படம் வெளியாகும். மேலும், தீபாவளிக்கு அல்லது டிசம்பர் மாதம் தக் லைஃப் படமும் வெளியாக போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு ரசிகர்களுக்கு கமல்ஹாசன் ட்ரிபிள் ட்ரீட் கொடுத்து ஹாட்ரிக் அடிக்க காத்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications