ஏகே 62 - ஒருவழியாக மௌனத்தை கலைத்த லைகா.. நல்ல செய்தி எப்போ வருது தெரியுமா?
சென்னை: ஏகே 62 அப்டேட் எப்போது வரும் என்பது குறித்த தகவலை லைகா தமிழ்க்குமரன் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.
நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பிறகு ஹெச்.வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் அஜித் நடித்தார். வங்கிக் கொள்ளையையும், வங்கி மக்களிடம் அடிக்கும் கொள்ளையையும் வைத்து படம் உருவாகியிருந்தது. ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்று வசூலையும் வாரி குவித்தது.

அஜித்தின் 62ஆவது படம்
துணிவு படத்தின் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தபோதே அஜித் தனது 62ஆவது படத்தில் கமிட்டானார். அந்தப் படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் அவர் படத்திலிருந்து கழற்றிவிடப்பட்டார். இதனையடுத்து படத்தை இயக்குவதற்கு மகிழ் திருமேனி கமிட்டாகியிருக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகாமல் இருந்துவருகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் பொறுமையின் எல்லைக்கு சென்றிருக்கின்றனர்.

எதற்காக தாமதம்
ஏகே 62 படத்தின் அறிவிப்பை பிரமாண்டமாக அறிவிக்க் லைகா திட்டமிட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி டைட்டிலை ஒரு ப்ரோமோவுடன் அறிவித்தால் நன்றாக இருக்கும் என யோசித்த தயாரிப்பு நிறுவனம் அதற்கான வேலைகளில் இறங்குமாறு மகிழ் திருமேனி டீமை அறிவுறுத்தியிருக்கிறதாம். எனவே அதற்கான வேலைகளில் மகிழ் டீம் முழு மூச்சாக இருக்கிறது எனவும் அதனால்தான் இவ்வளவு தாமதம் எனவும் கூறப்படுகிறது.

அஜித் தந்தை மரணத்தால் மேலும் தாமதம்?
சென்ற வாரத்திலேயே படத்தின் அறிவிப்பை வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் எதிர்பார்க்காத விதமாக அஜித்தின் தந்தை சுப்ரமணியம் இறந்துவிட்டதால் படம் குறித்த அறிவிப்பை வெளியிட முடியவில்லை என கூறப்படுகிறது. மேலும் அஜித்தின் தந்தை மறைவுக்கு லைகா நிறுவனத்தின் தமிழ்க்குமரனும், இயக்குநர் மகிழ் திருமேனியும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

ஏகே 62; மௌனம் கலைத்த லைகா
இந்நிலையில் லைகா நிறுவனத்தின் ஹெட் தமிழ்க்குமரன் செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம், "அஜித்தின் தந்தை மறைவுக்கு நீங்களும், மகிழ் திருமேனியும் சேர்ந்து சென்றிருந்தீர்கள். ஏகே 62 படத்தின் அப்டேட் எப்போது வரும்" என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "நல்ல செய்தி அடுத்த மாதம் வரும்" என குறிப்பிட்டுள்ளார். ஏகே 62 குறித்த அறிவிப்பு அடுத்த மாதம் வரும் என லைகா தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டதால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அஜித்தின் வேர்ல்ட் டூர்
முன்னதாக, சில வாரங்களுக்கு முன்பு அஜித்தின் பிஆர்ஓ சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில், "அஜித்தின் இரண்டாவது கட்ட உலக பைக் சுற்றுப்பயணத்துக்கு பரஸ்பர மரியாதை பயணம் என பெயர் வைக்கப்பட்டிருக்கிறது" என்று குறிப்பிட்டிருந்தார். அதேசமயம் இந்தப் பயணத்தை அவர் படம் தொடங்குவதற்கு முன்னதாக தொடங்குவார் என முதலில் கூறப்பட்டது. ஆனால் இப்போது ஏகே 62 படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டுத்தான் அஜித் இந்த பைக் சுற்றுப்பயணத்தை ஆரம்பிப்பார் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











