இளையராஜாவை நாம சரியா கொண்டாடல.. லிடியன் நாதஸ்வரம் வருத்தம்.. என்ன சொன்னாரு தெரியுமா?
சென்னை: இளையராஜாவை தமிழ் ரசிகர்கள் சரியாக கொண்டாடவில்லை என லிடியன் நாதஸ்வரம் தனது மன வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். இளையராஜாவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தனது மகள் பவதாரணி மறைந்த நிலையில் பிறந்தநாளை தான் கொண்டாடவில்லை என்று கூறிய இளையராஜா இந்த கொண்டாட்டம் உங்களுக்கானது என ரசிகர்களுக்காக கொண்டாடுவதாக கூறினார்.
இளையராஜாவை நேரில் சந்தித்து பலர் வாழ்த்துக்களை சொல்லி வரும் நிலையில் இளம் இசையமைப்பாளர் லிடியன் நாதஸ்வரம் இளையராஜாவை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது, இளையராஜாவை நாம் சரியாக கொண்டாடவில்லை என்று கூறினார்.

ஏ.ஆர். ரஹ்மானிடம் பாராட்டுக்களை பெற்ற லிடியன் நாதஸ்வரம் இளையராஜா இசை துறைக்கு செய்துள்ள மிகப்பெரிய சாதனைகளை புகழ்ந்து பேசியுள்ளார்.
இளையராஜா பிறந்தநாள்: இசைஞானி இளையராஜாவின் 81வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இயக்குநர் மணிரத்னம் மற்றும் இளையராஜா என இருவரும் இன்று பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், இருவருக்கும் கமல்ஹாசன் வாழ்த்துகளை தெரிவித்தார். சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து அவரது பாடல்களை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து வருகின்றனர்.
சிம்பொனி சாதாரண விஷயம்: இளையராஜா 35 நாட்களில் சிம்பொனியை முடித்து உள்ளதாக சமீபத்தில் தெரிவித்தார். அவருக்கு இருக்கும் இசை அறிவுக்கு இந்த சிம்பொனியெல்லாம் சாதாரண விஷயம். ஒவ்வொரு தலைமுறைக்கும் ஏகப்பட்ட இசை களஞ்சியத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறார் இளையராஜா. அவரிடம் நாம் இன்னமும் பல விஷயங்களை பெற்றுக் கொண்டே இருக்கிறோம் என்றார்.

இளையராஜாவை கொண்டாடவில்லை: ஐரோப்பிய நாடுகளில் மொசார்ட், பீத்தோவன் உள்ளிட்ட இசைக் கலைஞர்களை கொண்டாடும் அளவுக்கு இசைஞானி இளையராஜாவை நாம் இன்னமும் சரியாக கொண்டாடவில்லை. உலகளவில் உள்ள இசை மேதைகளுக்கு நிகரானவர் இளையராஜா நம்மிடையே அவர் இருக்கும் போது அவரை சரியாக நாம் கொண்டாட வேண்டும் அவர் வாழும் காலத்தில் நாம் வாழ்வது பெரிய விஷயம் என லிடியன் நாதஸ்வரம் பேசியுள்ளார். சமீப காலமாக இளையராஜா குறித்த ஏகப்பட்ட சர்ச்சைகள் வெடித்து வரும் நிலையில், லிடியன் நாதஸ்வரம் இப்படி பேசியுள்ளார்.
திருக்குறள் புராஜெக்ட்: லிடியன் நாதஸ்வரம் மலையாளத்தில் மோகன்லால் இயக்கி நடித்து வரும் பரோஸ் படத்திற்கு சேமித்து வருகிறார். மேலும், தமிழில் திருக்குறள் பாடல்களை பிரம்மாண்டமாக இசையமைத்து வருவதாகவும் இந்த ஆண்டுக்குள் அந்த இசை ஆல்பம் வெளியாகும் என்றும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











