பாடல்கள் எழுதி சிவகார்த்திகேயன் செய்யும் நல்லது.. ஹீரோக்கள் எழுதலாமா?.. பாடலாசிரியர் ஜெகன் ஓபன் டாக்
சென்னை: தாய் கிழவி படத்தில் இரண்டு பாடல்களை எழுதி சென்சேஷனல் ஆகியிருப்பவர் பாடலாசிரியர் ஜெகன் கவிராஜ். இதற்கு முன்னதாக அவர் சில பாடல்கள் எழுதினாலும் இந்தப் படத்தின் பாடல்களும், ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட்டில் அவர் பேசியதும்; அவருக்கான வெளிச்சத்தை மேற்கொண்டு கொடுத்தது. இந்நிலையில் அவர் ஃபில்மிபீட் தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்தார்.
என்னங்க சார் உங்க சட்டம் படத்தில் இடம்பெற்ற, 'என் ஜீரக பிரியாணி' என்ற பாடலை எழுதி கவனம் ஈர்த்தவர் ஜெகன் கவிராஜ். அடிப்படையில் பத்திரிகையாளரான இவர்; வாழ்க்கையில் பல அனுபவங்களை சந்தித்திருக்கிறார். பத்திரிகையாளர், தயாரிப்பு நிர்வாகி, உதவி இயக்குநர், நடிகர், பாடலாசிரியர், சிறு கதை எழுத்தாளர் என பல முகங்களை கொண்டிருப்பவர் அவர். முதல் பாடலுக்கு பிறகு தொடர்ந்து சில பாடல்களை எழுதினாலும்; தாய் கிழவி திரைப்படத்தில் அவர் எழுதிய இரண்டு பாடல்கள் பெரிய கவனத்தை ஈர்த்திருக்கின்றன.

விழுந்து விழுந்து சிரித்த சிவகார்த்திகேயன்: அதேபோல் அப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட்டில், 'எனக்கும் மூன்று குழந்தைகள் சிவகார்த்திகேயன் அண்ணாவுக்கும் மூன்று குழந்தைகள். அதை நினைத்து எனக்கு பெருமைதான்'என சொல்ல; எல்லோரையும் சிரிக்க வைக்கும் எஸ்கேவே; ஜெகனின் பேச்சை கேட்டு விழுந்து விழுந்து சிரித்தார். அந்த விஷயமும் ஜெகன் மீதான கவனத்தை அதிகப்படுத்தியது. இந்நிலையில் ஜெகன் கவிராஜ் ஃபில்மிபீட் தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்தார்.
ஜெகனின் பேட்டி: கடந்த வாரம் கொடுத்த பேட்டியில் தாய் கிழவி படம் மற்றும் தனது வாழ்க்கை அனுபவங்களை பற்றி பேசிய அவர்; இந்த வாரம் திரைத்துறையில் பாடல்களின் நிலைமை குறித்து விரிவாக பேசினார். அவர் நம்மிடம் பேசுகையில், "நிவாஸ் கே பிரசன்னா என்னிடம் ஒன்று சொன்னார். 'ட்ரெண்டியாக நாலு வார்த்தைகள் போட்டுவிட்டால் போதும் என எல்லோரும் நினைக்கிறார்கள் என்கிற பார்வை இருக்கு ஜெகன். ஆனால் அது உண்மையில்லை. நீங்கள் தரமான தமிழ் சொற்களை கொடுத்தால் ரசிகர்கள் கொண்டாடத்தான் செய்வார்கள். வளமான தமிழ் சொற்களுக்கு இன்னும் தேவை இருக்கத்தான் செய்கிறது என கூறினார். அமரன் படத்தில் இடம்பெற்ற வெண்ணிலவு சாரல் நீ பாடல் அனைத்துமே தமிழ் வார்த்தைகள்தான். அந்தப் பாடல் ஹிட்டாகத்தானே செய்தது.

பாடல்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது: இப்போது வரும் படங்களில் பாடல்களுக்கான எண்ணிக்கை குறைந்துவிட்டது. பாடலாசிரியர்களுக்கான எண்ணிக்கை கூடிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். வைரமுத்து, வாலி போன்றோருக்கு பெரிய டிமாண்ட் இருந்தது. இப்போது அந்த டிமாண்ட் இல்லை. இன்றைய சூழல் அப்படி இருக்கிறது. ஹீரோக்கள் பாடல்கள் எழுதுவதை சிலர் விரும்பாமல் இருக்கிறார்கள். சினிமாவில் பாடலாசிரியர் என்ற ஒரு தொழில் மட்டும் போதும் என இருந்தால் பிழைப்பது கஷ்டம். அதனால்தான் நடிக்க வந்திருக்கிறேன், இயக்குகிறேன் என பாடலாசிரியர் பா.விஜய் அண்ணன் சொல்லியிருந்தார். ஹீரோக்கள் வேறு துறைகளில் இருப்பதாக சொல்கிறீர்கள். பாடலாசிரியர்களும் வேறு வேறு துறைகளில் இருக்கிறார்கள். அதனால் இதையெல்லாம் சினிமாவில் தவிர்க்க முடியாது.
அதில் ஒரு வசதி இருக்கிறது: ஹீரோக்களோ, இயக்குநர்களோ பாடல்கள் எழுதும்போது அவர்களுக்கு ஒரு வசதி இருக்கிறது. அவர்கள் நினைப்பதை கொண்டு வருவதற்கான திறமை அவர்களுக்கு இருக்கிறதென்றால் அவர்கள் அதைத்தானே செய்வார்கள். அதில் தவறு எதுவும் இல்லையே. எனக்கான வார்த்தைகள் இப்படித்தான் வேண்டும் என நினைக்கும் சிவா அண்ணன்; அதை அவராலேயே கொண்டு வரக்கூடிய ஆற்றல் இருந்தால்; அவரே எழுதலாமே அதில் தவறு எதுவும் இல்லையே. அனைவருக்கும் மகிழ்ச்சிதானே.அதேபோல் சிவகார்த்திகேயன் பாடல்கள் எழுதுவதில் ஒரு நல்ல விஷயம் செய்கிறார். ஒரு பாடல் எழுதினாலும் அதில் வரும் சம்பளத்தை நா. முத்துக்குமார் குடும்பத்துக்கு கொடுக்கிறார்" என்றார்.


Click it and Unblock the Notifications















