பிரபல பாடலாசிரியர் கவிஞர் காமகோடியன் காலமானார்...பிரபலங்கள் இரங்கல்
சென்னை : பிரபல சினிமா பாடலாசிரியர் கவிஞர் காமகோடியன் காலமானார். வயது முதிர்வின் காரணமாக காலமான காமகோடியனுக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

1980 களின் பிற்பகுதி துவங்கி தமிழ் சினிமாவில் பல படங்களில் பிரபலமான பாடல்களை இவர் எழுதி உள்ளார். சில படங்களுக்கு வசனங்களையும் எழுதி உள்ளார் காமகோடியன். 1990 ல் வாழ்க்கை சக்கரம் படத்திற்காக இவர் எழுதிய பாடல்கள் பிரபலமானதால், பல படங்களில் பாட்டெழுதும் வாய்ப்பை பெற்றன.
கண்ணாத்தாள், தொடரும், மெளனம் பேசியதே, மதுமதி, உளியின் ஓசை, மாப்பிள்ளை உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு பாட்டெழுதி உள்ளார். இதில் சூர்யா நடித்த மெளனம் பேசியதே படத்தில் இடம்பெற்ற அன்பே என் அன்பே என் பாடல் மிகவும் பிரபலம். இளைஞர்களின் மனதை கவரும் வகையில் காதல் பாடல்களை எழுதுவதில் கைதேர்ந்தவர் கவிஞர் காமகோடியன்.
இளையராஜா, தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார், பரத்வாஜ், யுவன்சங்கர் ராஜா போன்ற முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பல சூப்பர் ஹிட் பாடல்களை இவர் எழுதி உள்ளார்.
2015 ம் ஆண்டு திருட்டு ரயில் என்ற படத்திற்கு ஒரே ஒரு பாட்டெழுதுவதற்காக அழைக்கப்பட்ட காமகோடியன், அந்த பாடல் எதிர்பார்த்ததை விட நன்றாக அமைந்ததால், அந்த படத்தில் வரும் அனைத்து பாடல்களையும் எழுதும் வாய்ப்பை பெற்றார்.
இவரின் மறைவிற்காக சோஷியல் மீடியாக்களிலும், நேரிலும் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திரை பிரபலங்கள் பலர் தங்களின் வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











