நானும், 96 பிரேமும் கரடுமுரடான மனிதர்கள்..அன்பு சேர்த்தது-மெய்யழகன் கார்த்திக் நேத்தா சிறப்பு பேட்டி
சென்னை: தொட்டி ஜெயா படத்தில் பாடலாசிரியராக அறிமுகமான கார்த்திக் நேத்தா இப்போதைய பாடலாசிரியர்களில் முக்கியமானவரும், தனித்துவமானவரும்கூட. ஏனெனில் தன்னால் முடிந்த அளவு பாடல்களுக்குள் இலக்கிய தன்மையை சேர்த்துக்கொண்டிருப்பவர். 96 படத்தில் எழுதிய லைஃப் ஆஃப் ராம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியதை அடுத்து; தொடர்ந்து இப்போது பல படங்களுக்கு எழுதிவருகிறார். அந்தவகையில் நாளை வெளியாகவிருக்கும் மெய்யழகன் படத்திலும் பாடல்களை எழுதியிருக்கும் அவர் ஃபில்மிபீட் தமிழுக்கு சிறப்பு பேட்டி கொடுத்தார்.
சிம்பு நடித்த தொட்டி ஜெயா படத்திலிருந்து தனது பாடலாசிரியர் பயணத்தை தொடங்கினார் கார்த்திக் நேத்தா. அதனையடுத்து வெண்ணிலா கபடி குழு, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும், வாகை சூடவா, திருமணம் என்னும் நிக்காஹ், சீதக்காதி, நெற்றிக்கண், 96 என ஏராளமான படங்களுக்கு பாடல்கள் எழுதியிருக்கிறார். 96 படத்தில் இடம்பெற்ற லைஃப் ஆஃப் ராம் இன்றுவரை பலராலும் கொண்டாடப்படுகிறது. அதேபோல் நெற்றிக்கண் படத்தில் இடம்பெற்ற சுடரி பாடலை எப்போது கேட்டாலும் அதில் ஒரு தன்னம்பிகை ஊற்றெடுக்கும். பாடல்கள் மட்டுமின்றி கவிதைத் தொகுப்புகளையும் வெளியிட்டிருக்கும் கார்த்திக் நேத்தா பார்ப்பதற்கு எளிமையானவராக இருந்தாலும் தான் எழுதும் எழுத்தில் ரொம்பவே ஆழமாக செல்லக்கூடியவர்.

மெய்யழகன்: அவர் இப்போது இயக்குநர் பிரேமுடன் மீண்டும் இணைந்திருக்கிறார். கார்த்தி, அரவிந்த் சாமி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் மெய்யழகன் திரைப்படத்தில் டெல்டா கல்யாணம், வெறி உள்ளிட்ட பாடல்களை எழுதியிருக்கிறார். இந்த இரண்டு பாடல்களுமே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கின்றன. மெய்யழகன் நாளை ரிலீஸாகவிருக்கும் சூழலில் படத்தில் பாடல்கள் எழுதிய அனுபவம் குறித்து ஃபில்மிபீட் தமிழுக்கு பேசினார் நேத்தா.
கார்த்திக் நேத்தா பேட்டி: மெய்யழகன் படத்தின் பாடல்கள் ஹிட்டானதற்கு வாழ்த்தை சொல்லிவிட்டு அவரிடம் பேச தொடங்கினோம். மெய்யழகன் படம் இப்போதைய சமூகத்துக்கு ஏன் முக்கியம் என்ற கேள்வியோடு உரையாடலை தொடங்கினோம். அப்போது பேசிய அவர், "இந்த நவீன வாழ்க்கை நமக்கு நம்மையே தனிமை ஆக்கிவிட்டது. முன்பெல்லாம் பிற மனிதர்கள் இல்லாத தனிமை இருந்தது. இப்போதோ நமக்குள் நாமே ஒரு வெறுமையை உணர ஆரம்பித்துவிட்டோம். எல்லா காலத்திலும் நமது அற நூல்கள் சொல்வது என்னவென்றால் அறத்தோடும், உறவோடும் இருங்கள் என்பதைத்தான்.
இந்தப் படம் பேசுகிறது: அப்படி ஏன் உறவோடு இருக்க வேண்டுமென்பதை இந்தப் படம் பேசுகிறது. அதனை ஒரு அழகான கதையாக, தஞ்சாவூருக்குள் வைத்து பிரேம் சொல்லியிருக்கிறார். நூற்றாண்டு நூற்றாண்டாக மந்தையாகத்தான் நாம் வளர்ந்திருக்கிறோம். அப்படி இருந்தாலும் நமக்குள் முரண்கள் இருக்கின்றன. அந்த முரண்கள் இருந்தாலும் நம்மை கட்டி கூட்டி செல்வது அன்பும், புரிந்துகொள்ளுதலும்தான். இந்தப் படம் புரிந்துகொள்ளுதலைத்தான் பேசுகிறது. நேற்று நடந்த ஸ்பெஷல் ஷோவில் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தார்கள். ரிலீஸுக்கு பிறகு பரவலான வரவேற்பு கிடைக்கும்" என்றார்.
பிரேமும் நானும்: அடுத்ததாக உங்களுக்கும் பிரேமுக்கும் இருக்கும் புரிதல் குறித்து பகிர்ந்துகொள்ளுங்கள் என்று கேட்டதற்கு, 'மெய்யழகன் படம் ஆரம்பித்தபோதே கோவிந்த் வசந்தா, எடிட்டர் கோவிந்த், உமா தேவி , கார்த்திக் நேத்தா பெயர்களை எழுதியிருப்பார்கள். நாம் சொல்லக்கூடிய வாழ்க்கையை இவன் உள்ளுக்குள்ளிருந்து சொல்கிறான் என்று அவர் நினைக்கிறார்.
கரடு, முரடான மனிதர்கள்: நானும் அவரும் இயக்குநர், பாடலாசிரியர் என்ற உறவை தாண்டித்தான் இருக்கிறோம். இந்த வாழ்வை பற்றிய பார்வை நான் கற்றவைகளிலிருந்து இருக்கிறது. அவருக்கு அவர் பார்த்ததிலிருந்து இந்த வாழ்க்கை இருக்கிறது. நாங்கள் அப்படித்தான் இணைந்தோம். இன்னும் சொல்லப்போனால் எங்கள் இரண்டு பேருக்கும் அன்புதான் முக்கிய புள்ளி. அந்த அன்பை புரிந்துகொள்ள நினைக்கும் கரடு முரடான மனிதர்கள்தான் நாங்கள் இரண்டு பேரும்.
டெல்டா கல்யாணம் அனுபவம்: தொடர்ந்து டெல்டா கல்யாணம் பாடல் எழுதிய அனுபவம் குறித்து பேசிய அவர், "வாகை சூட வா இயக்குநர் சற்குணம் எனக்கு ஒரு நல்ல அண்ணன். அவரது தம்பி திருமணத்துக்கு தஞ்சாவூர் சென்றிருக்கிறேன். அந்த ஒருமுறைதான் தஞ்சைக்கு நான் சென்றிருக்கிறேன். அப்போது அங்கு பேசியவர்களை கவனித்தேன். அவர்களது வட்டார சொற்கள் மிக அழகாக இருந்தன. முக்கியமாக அந்த சொல்லின் ஓசைகள் எல்லாம் சிறப்புதான். அவையெல்லாம் இந்தப் பாடல் எழுதும்போது எனக்கு நினைவுக்கு வந்தன. அதேபோல் பல சொற்கள் நினைவுக்கு வந்தன. அவைகளை மெட்டுக்குள் வைக்க முடியவில்லை. மேலும் நானும் கொஞ்சம் ஆராய்ச்சி செய்தேன்.
பாராட்டிய பிரேம்: இதையெல்லாம் மீறி அந்தப் பாடலிலும் நான் அன்பைத்தான் சொல்லியிருப்பேன். அந்த வட்டார சொல்லோடு அன்பை சொல்லியபோது மேற்கொண்டு அழகாகியிருக்கிறது. டெல்டா பற்றி எழுதும்போது கஷ்டமாக இல்லை. ஏற்கனவே வெவ்வேறு நில பரப்புகளை பற்றி நான் எழுதியிருக்கிறேன். இந்தப் பாடலின் வரிகளை பிரேம் பார்த்ததும், 'டேய் என்னடா நீ.. எனக்கே தெரியாத எங்க ஊர் பாஷை எல்லாம் எழுதிருக்கியே டா' என்று கூறினார். முக்கியமாக அந்தப் பாடலில் இடம்பெற்ற தாயாதிமாரே என்ற சொல்லை பார்த்ததும் நெகிழ்ந்துவிட்டார். கோவிந்த் வசந்தாவும் பாட்டை கேட்டுவிட்டு நேத்தா ஜி என்று பாராட்டினார்' என்று மகிழ்ச்சியோடு கூறினார்.
எல்லா பாட்டுமே அப்படித்தான்: தொடர்ந்து பேசிய அவர், "பொதுவாக எல்லா பாடல்களையுமே நான் அதிகபட்சம் முக்கால் மணி நேரம், ஒரு மணி நேரத்திலேயே முடித்துவிடுவேன். திருத்தங்கள் என்று வரும்போதுதான் கொஞ்சம் நேரம் ஆகும். பிரேம் அண்ணாவுக்கு எழுதிய 96 ஆகட்டும், இந்தப் படம் ஆகட்டும் ஒரே ஆப்ஷன் மட்டும்தான் போகும். அதற்குள்தான் திருத்தங்கள் வரும். பெரும்பாலும் நிறைய ஆப்ஷன்கள் எழுதுவேன். ஆனால் பிரேம் அண்ணா கதைக்குள் நான் முழுதாக சென்றுவிடுவதால் ஒரே ஆப்ஷனாகத்தான் எழுதுவேன். கோவிந்த் வசந்தாவின் மெட்டும் நம்மை விடாது என்றார்.
எல்லோரும் மாறணும்: பிறகு சமீபமாக வரக்கூடிய பாடல்களில் சத்தங்கள் மட்டும்தான் இருக்கிறது வரிகள் கேட்கவே இல்லையே என்ற விமர்சனம் வருகிறது. அதை மாற்ற வேண்டியது இயக்குநரா, இசையமைப்பாளரா, ரசிகர்களா என்ற கேள்விக்கு, 'மூன்று பேர் கைகளிலும் இருக்கிறது.முதல் பங்கு இயக்குநர்களின் கைகளில்தான் இருக்கிறது. ஒரு இசையமைப்பாளரின் புகழ் அதிகமாக இருந்தால் அவரது டாமினேஷன் அந்தப் பாடலில் இருக்கும். மக்கள் மனதை நாம் குறை சொல்ல முடியாது. ஏனெனில் இயக்குநரும், இசையமைப்பாளரும் சமைத்து கொடுப்பதைத்தான் மக்கள் சாப்பிடப்போகிறார்கள்.
இரைச்சலான பாடல்கள் அதிகம் வந்தாலும் இடையில் நல்ல பாடல்கள் வந்துகொண்டிருக்கின்றன. அவைகளை மக்கள் கொண்டாடவும் செய்கிறார்கள்தான். முக்கியமாக இப்போது பாப் இசைதான் நல்ல இசை என்ற நிலை உருவாகிவிட்டது. ஆனால் அது உண்மை இல்லை. மக்களும் மேல் மனது கேட்கும் இன்பத்தைத்தான் தேடி போகிறார்கள். ஆழ் மன இன்பத்தை உணர்வதில்லை. மேலும் உலகமயமாக்கல் ஏற்படுத்திய பிரச்னை இது. அதிலும் இப்போது ரீல்ஸ் எல்லாம் வந்துவிட்டது. அதெல்லாம் மனிதனின் மூளை கிரகிக்கும் தன்மையை குறைக்கக்கூடியது. மனிதனுக்கே ஆபத்து. இப்படியே போனால் நாம் மீண்டும் கற்காலத்துக்குத்தான் செல்ல வேண்டும்.
எனது வேலை அதுதான்: மக்களின் மனதை கலைஞர்கள்தான் மாற்ற வேண்டும். நான் ஆரம்பத்தில் பாடல்கள் எழுதியபோது அந்த மாதிரியான எண்ணத்தில் பெரிதாக இல்லை. ஆனால் இங்கு வந்து எழுத எழுத சிலவற்றை நான் புரிந்துகொண்டேன். ஒரு நல்ல விஷயத்தை கலையும், கலைஞனும் செய்ய வேண்டும் என்று நினைப்பவன் நான். என்னால் முடிந்த அளவு அந்த வேலையை தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறேன் செய்வேன். கலையின் நோக்கம் அறம் சார்ந்து இருக்க வேண்டும். எல்லோருக்குள்ளும் அழுக்கு இருக்கிறது. அந்த அழுக்கை எப்படி சரி செய்யலாம் என்று சொல்லும்
கருவியாக கலை இருக்க வேண்டும் என்றவரிடம், தமிழினத்துக்காக மெய்யழகன் படத்தில் அவர் எழுதிய வெறி பாடல் அனுபவத்தை கேட்டோம்.

வெறி அனுபவம்: மகிழ்ச்சியோடு பேச ஆரம்பித்த கார்த்திக், "வெறி பாடலை எழுதும்போது பாடலில் என்ன மாதிரியான கொந்தளிப்பு இருந்ததோ அந்த கொந்தளிப்புதான் எனக்குள்ளும் இருந்தது. ஆனால் அது பகை உணர்ச்சியோடு வந்த கொந்தளிப்பு இல்லை. அந்தப் பாடலில் நமது வலியை சொல்லும்படியாகத்தான் இருக்கும். 2,000 வருடங்களாக மொழி வளம், பண்பாடுகள், விழுமியங்களை கொண்ட ஒரு இனம் இப்போது எங்கோ போய்க்கொண்டிருக்கிறதை பார்த்து ஒரு ஆதங்கம் இருக்கிறது. அந்தக் கொந்தளிப்புதான் அது. அறம் என்பதை காலங்காலமாக நாம்தான் வலியுறுத்திக்கொண்டிருக்கிறோம்.
வள்ளலார் காலத்திலேயே இன்னொரு உயிர் மீது அன்பு செலுத்து என்ற நிலைக்கு வந்தோம். பொருள் முதல்வாதம் என்பதை முதன்முதலில் பேசியது தமிழினம்தான். ஒவ்வொரு உயிருக்கும் ஒரு உணர்வு இருப்பது உண்மை என்பதை நாம்தான் முதலில் பேசினோம். முதல் பொருள், கருப்பொருள் என்று தொல்காப்பியர் சொல்கிறார். முதல் பொருளில் அவர் நிலத்தையும், பொழுதையும் வைக்கிறார். கருப்பொருளில்தான் கடவுளையே வைக்கிறார். இந்த நிலம் முக்கியம், பொழுது முக்கியம் என்ற தத்துவத்தை சொல்கிறார். இந்த மாபெரும் தத்துவத்தை மேலை நாடுகளே பின்னர்தான் சொல்கின்றன. ஆனால் நாம் மேற்கத்திய கலாசாரத்தில் சிக்கி தனி மனித தத்துவத்தில் மாட்டக்கூடாது. அந்த ஆதங்கம்தான் இருக்கிறது' என்றார் தெளிவாக.
மனைவியின் சொல்: இதற்கிடையே மெய்யழகன் படத்தின் டீசர்; கிளர்வோட்டம் என்ற தமிழ் சொல்லில் வெளியிடப்பட்டது. அந்த வார்த்தை வந்ததற்கும் மிக முக்கிய காரணம் கார்த்திக் நேத்தா. அதுபற்றி அவரிடம் கேட்கையில், 'ஆம் டீசருக்கு தமிழாக்கம் வேண்டும் என்றார்கள். நான் முயற்சி செய்தேன். பிறகு தமிழ் இலக்கிய உலகில் மிகச்சிறந்த மொழிப்பெயர்ப்பாளராக இருக்கும் கமலக்கண்ணனிடம் போனபோது அவர் அழகாக கிளர்வோட்டம் என்று மொழிப்பெயர்த்துக்கொடுத்தார். அதேபோல் வெறி பாடலுக்கு, ஜல்லிக்கட்டுக்கு சமர்ப்பணம் என்பதை தமிழாக்கம் செய்ய முடிவு செய்தோம். ஏறுதழுவுதலுக்கு காணிக்கை என்று முடிவு செய்தேன். ஆனால் எனது மனைவி கீதா தமிழ் படித்தவர். அவர்தான், இல்லை இது பெரிதாக இருக்கிறது என்று சொல்லி ஏறுகோள் காணிக்கை என மாற்றினார் என்றார் காதலோடு கார்த்திக்.
அற்புதம் ஒருமுறைதான் நிகழும்: அந்தக் காதல் மனநிலையோடு 96 படத்தின் இரண்டாம் பாகம் பற்றி பேசிய அவர், '96 படத்தின் இரண்டாம் பாகத்துக்கு நானும் காத்திருக்கிறேன். ஆனாலும் என்னை பொறுத்தவரை அற்புதம் என்பது ஒருமுறைதான் நிகழும். அதை நாம் நிகழ்த்த முடியாது. பிரேம் அண்ணாவிடமும், ’அண்ணா 96 என்ற அற்புதம். அற்புதம் ஒருமுறைதானே நிகழும்’ என்று கூறினேன். அவர் சிரித்தார். பார்ப்போம் 96 இரண்டாம் பாகம் வந்து நன்றாக இருந்தால் சந்தோஷம்தான் என்றவரிடம், இளைஞர்களுக்கு புத்தகங்களை பரிந்துரைத்தால் எதை பரிந்துரைப்பீர்கள் என்றதற்கு, முதலில் திருக்குறளை ஒழுங்காக படிக்க வேண்டும். பத்து மதிப்பெண்ணுக்கோ, ஐந்து மதிப்பெண்ணுக்கோ என்று இல்லாமல் நன்றாக உணர்ந்து படிக்க வேண்டும். ஏனெனில் அதில் இல்லாத விஷயங்களே இல்லை. நமது வாழ்க்கைக்கு எப்போதுமே உதவும்" என்று தீர்க்கமாக சொல்லி பேட்டியை முடித்தார் கார்த்திக் நேத்தா.


Click it and Unblock the Notifications











