Exclusive - நா. முத்துக்குமார் இப்படித்தான் பாடல் எழுதுவார்.. பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பிரத்யேக பேட்டி

சென்னை: கவிஞர் நா. முத்துக்குமார் பிறந்தநாளை முன்னிட்டு 96 படத்தின் மூலம் பிரபலம் அடைந்த பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா தமிழ் பில்மிபீட்டுக்கு பிரத்யேக பேட்டி அளித்தார்.

நா. முத்துக்குமார் தமிழ் சினிமா பாடல்களில் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது. ஒரு பாடலை எப்படி எளிமையாக எழுத வேண்டும் என மற்றவர்களுக்கு தனது எழுத்தின் மூலம் பாடம் எடுத்தவர். கண்ணதாசன், வாலி எப்படி காலங்கடந்து நிற்கிறார்களோ அப்படி நா. முத்துக்குமார் நின்றுகொண்டிருக்கிறார். அதற்கு ஒரே காரணம் கவிஞருக்கான மிடுக்கோ, தோரணையோ அவரது தோற்றத்திலும் இல்லை எழுத்திலும் இல்லை.

Lyricist Karthik netha Special Interview For Na.Muthukumar Birthday

நா. முத்துக்குமார் பிறந்தநாள்: இன்று அவருக்கு 48ஆவது பிறந்தநாள். இதனையொட்டி சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் முத்துக்குமாரின் கவிதைகளையும் பாடல்களையும் பகிர்ந்து தங்களது காதலை வெளிப்படுத்திவருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் பிரபல பாடலாசிரியரும் நா.முத்துக்குமாரின் பாராட்டை பெற்று அவரிடம் நெருங்கி பழகியவருமான கார்த்திக் நேத்தாவை தமிழ் பில்மிபீட் சார்பாக தொடர்புகொண்டோம்.

கார்த்திக் நேத்தா: பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா தொட்டி ஜெயாவில் முதல் பாடலை எழுதியவர். தொடர்ந்து வெண்ணிலா கபடி குழு, 96, உள்ளிட்ட பல படங்களுக்கு பாடல்களை எழுதியிருக்கிறார். அதுமட்டுமின்றி தேனை ஊற்றி தீயை அணைக்கிறான் திகம்பரன் போன்ற கவிதை தொகுப்புகளையும் வெளியிட்டிருக்கிறார்.

96 படத்தில் இடம்பெற்ற லைஃப் ஆஃப் ராம் பாடலில் வாழா என் வாழ்வை வாழவே தாழாமல் மேலே போகிறேன், திமிலேறி காளை மேல் தூங்கும் காகமாய் பூமி மீது இருப்பேன் என எழுதி அட்டகாசம் செய்தவர். அதேபோல் ஒரு விழா மேடையில் நான் சாகுற வரைக்கும் என்னோட பேனாவுக்குள் நா. முத்துக்குமாரின் ஆன்மா இருக்கும் என சொன்னவர். வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் அநீதி படத்திலும் பாடல் எழுதியிருக்கிறார் கார்த்திக்.

கார்த்திக் நேத்தாவின் பேட்டி: நா. முத்துக்குமார் குறித்து பேச தொடங்கியதும் உற்சாகமாகி, "இன்றைய சமூக சூழலில் தனக்கு ஒரு புகழ் கிடைத்தால் போதும் என நினைப்பவர்கள்தான் அதிகம். ஆனால் எங்கேயோ யாரோ ஒருவர் பாடல் எழுதினால் அவருடைய அலைபேசி எண்ணை வாங்கி நான். நா. முத்துக்குமார் பேசுகிறேன். உங்கள் பாடலை நான் கேட்டேன். நல்லா இருக்கு. தொடர்ந்து நல்லா எழுதுங்க, நிறைய புத்தகங்கள் படிங்க என சொல்லி பல புத்தகங்களை பரிந்துரைக்கவும் செய்வார்.

சினிமாவில் நான் 20 வருடங்களாக இருக்கிறேன். இப்படி ஒரு மனிதனை நான் பார்த்ததே கிடையாது. அவரை பார்த்து பார்த்தே வளர்ந்தவன் நான். எனது பேனா எப்போதும் நா. முத்துக்குமாரின் மனது போல்தான் இருக்க வேண்டும். அதனை மனதில் வைத்துதான் அந்த விழா மேடையில் எனது பேனாவுக்குள் நா. முத்துக்குமாரின் ஆன்மா இருக்கும் என சொன்னேன். அதை ப்ளான் பண்ணி சொல்லவில்லை. உணர்வுவயப்பட்டுத்தான் அப்படி சொன்னேன்.

அவரின் தம்பி நான்: நான் நா. முத்துக்குமாரிடம் முறைப்படியான அசிஸ்டெண்ட்டாக இல்லை. ஆனால் தம்பி என்ற ஸ்தானத்தில் இருந்தேன். வெண்ணிலா கபடி குழுவில் நான் எழுதிய படபடவென பறந்திட பாடல் ரேடியோ மிர்ச்சி விருது வாங்கியபோதுதான் அவரை மீட் பண்ணினேன். அப்போது ஃப்ரீயா இருக்கும்போது ஆஃபிஸுக்கு வா என சொன்னார்.

பிறகு ஆஃபிஸ் சென்று அவருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. பாடல் எழுதும்போது அருகில் அமர சொல்வார். அதனையடுத்து பயணம் எங்காவது சென்றால் என்னை உடன் அழைத்து செல்வார். கடைசியாக அவருடன் சென்ற பயணம் இன்னும் எனக்கு நியாபகம் இருக்கு. Big FM நிகழ்ச்சி ஒன்றுக்கு சீமான் அண்ணன் காரில் நான், முத்து அண்ணன், சீமான் அண்ணன் சென்றோம். அவரிடம் நான் நிறைய கற்றுக்கொண்டேன். அதனால் அவரை நான் ஆசிரியராக ஏற்றுக்கொண்டேன்.

முத்து அண்ணன் இப்படித்தான் பாடல் எழுதுவார்: நா.முத்துக்குமார் ஆரம்பத்தில் தனியாக அமர்ந்துதான் பாடல்கள் எழுதினார். ஒருகட்டத்தில் அவர் நிறைய பாடல்கள் எழுதும் சூழல் உருவானபோது அவரது கிரியேட்டிவிட்டி வேகம் அதிகமாகிவிட்டது. அதனையடுத்து பேனா பிடித்து பாடல் எழுதுவதற்கான நேரம் அவரிடம் இல்லை. எனவே வரும் இயக்குநர்களிடம் பேனா, பேப்பரை கொடுத்து சொல்ல ஆரம்பித்துவிடுவார்.

அந்த ஸ்டைலில் அவர் சொல்லும்போது எதற்காக ஒரே இடத்தில் அமர்ந்துகொண்டு என்று நினைத்து பெரும்பாலும் திண்டிவனம் ஹைவேஸில் வண்டியை விட சொல்வார். காரில் ட்யூன் ஓடிக்கொண்டு இருக்கும் இவர் உடனுக்குடன் வரிகளை சொல்ல ஆரம்பித்துவிடுவார். நான் கேள்விப்பட்டவரை கண்ணதாசனுக்கு அந்த தன்மை இருந்தது. பிறகு நா. முத்துக்குமாருக்குத்தான் இருந்தது. வரகவி என அதை சொல்வார்கள்" என்றவரிடம் இப்போது நீங்கள் வசந்தபாலன் இயக்கியிருக்கும் அநீதி படத்தில் பாடல் எழுதியிருக்கிறீர்கள். அவரும் நா. முத்துக்குமாரும் நெருங்கிய நண்பர்கள். முத்துக்குமார் பற்றி உங்களிடம் அவர் ஏதேனும் சொல்லியிருக்கிறாரா என கேட்டதற்கு,

வசந்தபாலன் இதைத்தான் சொன்னார்: எனது ஸ்டைலில் பாடலை எழுத சொன்னார். ஆனால் முத்துக்குமாரின் வேகம் உனக்கு வேண்டும் கார்த்தி என சொன்னார். ஏனென்றால், வசந்தபாலன் அரவான் படத்தை ஆரம்பித்தபோது நா. முத்துக்குமாரை அழைத்து அரவான் என்ற படத்தை ஆரம்பிக்க இருக்கிறேன் என சொல்லியிருக்கிறார். உடனே முத்துக்குமார் அண்ணன் அரவான் என்றால் என்ன என்பது குறித்தும் சில பாடல்களையும் சில மணி நேரங்களில் எழுதிக்கொடுத்துவிட்டு சென்றுவிட்டாராம். அதனால் அந்த வேகம் உன்னிடம் இருக்க வேண்டும் என கூறினார்.

வெற்றிடம் இல்லை: நா. முத்துக்குமார் பௌதீகமாக நம்மிடம் இல்லை. ஆனால் அவரது பாடல்களும், படைப்புக்களும் நம்முடன் இருக்கின்றன. இப்போதைய பாடல்கள் புரியாமல் வருவதற்கு தற்போதைய சூழலும் ஒரு காரணம். சிவாஜி படத்தில் நா. முத்துக்குமார் பல்லேலக்கா பாடலில் அவ்வளவு கருத்துக்கள் சொல்லியிருக்கிறார் என்றால் அதற்கு ஷங்கர் சாரும் ஒரு முக்கிய காரணம். ஏனெனில் அவரிடம் ஒரு விசால கவிதை அறிவும்,பார்வையும் இருந்தது.

யாராலும் தொட முடியாது: நான் பாடல் எழுதும்போதெல்லாம் இரண்டு பேரின் ரெஃபர்ன்ஸ் ஆட்டோமேட்டிக்காக வந்து என் மண்டையில் விழும். ஒன்று கண்ணதாசன், இன்னொன்று நா. முத்துக்குமார். எனவே முத்துக்குமார் அண்ணின் வெற்றிடத்தை நான் உணரவில்லை. நா. முத்துக்குமாரின் இடத்தை யாராலும் தொட முடியாது. அவரின் அருகில் வேண்டுமானால் அமர்ந்துகொள்ளலாம். நான் அவர் இடத்தை அடைய முடியாது. ஆனால் அவருக்கு அருகில் முக்காலி போட்டாவது அமர்ந்துகொள்வேன்.

சாதனை செய்தவர்: நா.முத்துக்குமார் பாடல்களுக்குள் பெரிய சாதனை செய்தவர். ஜென் தத்துவங்கள் ஆகட்டும், மரபாகட்டும், உவமை, உருவகங்கள் என இலக்கியத்தில் இருக்கும் அத்தனையையும் பாடல்களுக்குள் வைத்த ஒரே பாடலாசிரியர் நா. முத்துக்குமார் மட்டும்தான். அவர் அவ்வாறு எழுதிக்கொண்டிருந்தபோது நான் சினிமாவில் வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தேன். அப்போதும் முத்துக்குமார் எழுதிய பாடல்களை கேட்கும்போதெல்லாம் யார்யா இந்தாளு இப்படி எழுதிட்டு இருக்காரு என அவ்வளவு வியப்பாக இருக்கும்.

Lyricist Karthik netha Special Interview For Na.Muthukumar Birthday

முன்னரே கணித்தார்: 96 படத்தின் பாடல்கள் மூலம் நான் பிரபலம் ஆனேன். ஆனால் நா. முத்துக்குமார் இருந்திருந்தால் இந்த உலகம் என்னை கொண்டாடுவதற்கு முன்னதாகவே அவர் என்னை கொண்டாடியிருப்பார். வெண்ணிலா கபடி குழு படத்தில் எழுதிய பாடலை வைத்து எதிர்காலத்தில் இவன் பெரிய ஆளாக வருவான் என என்னைப் பற்றி முன்னரே கணித்திருந்தார். ஆனால் அப்போது அவரிடம் நான் பழகியதுகூட கிடையாது. அந்த மனதுதான் நா. முத்துக்குமார். ஆற்றுப்படுத்துதல் குணம் அவரிடம் நிறையவே இருந்தது. அதுதான் அவரது எழுத்தி வெளிப்பட்டது.

முத்துக்குமார் நியாபகம்தான்: சமீபத்தில் அநீதி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு சென்றவிட்டு வந்தபிறகு அன்றைய இரவு முழுக்க முழுக்க நா. முத்துக்குமார் அண்ணன் நியாபகம்தான். அவரது கவிதைகளை தொகுத்து பாடலாய் அநீதி படத்தில் வைத்ததற்கு வசந்தபாலன் சாருக்கு நன்றி சொல்ல வேண்டும்.

உச்சம் காணுவேன்: நான் சினிமாவில் இன்னும் உச்சம் செல்வேன். எந்த உச்சம் சென்றாலும் அதனை இரண்டு பேருக்கு மட்டும்தான் அர்ப்பணிப்பேன். ஒருவர் நா. முத்துக்குமார். மற்றொருவர் அறிவுமதி. நா. முத்துக்குமார் யாரையும் வாடா போடா என்றுகூட சொல்லமாட்டார். எல்லோரையும் மரியாதையுடன்தான் அழைப்பார். அந்த குணத்தை நாம் அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்" என்று கார்த்திக் நேத்தா முடித்தார்.

Read more about: happy birthday na muthukumar
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X