’ஒனக்கேதும் ஆனதுன்னா எனக்குவேற தாயிருக்கா?’.. வைரமுத்துவின் தாயார் மரணம்.. நாளை அன்னையர் தினம்

தேனி: தமிழ் சினிமாவின் மூத்த கவிஞர்களில் ஒருவராக இருப்பவர் கவிஞர் வைரமுத்து. அவர் தனது எக்ஸ் பக்கத்தில் அவரது தாயார் மறைவு குறித்து பகிர்ந்துள்ளார். இது பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. அதாவது அவர் தனது பதிவில், என்னைப் பெற்ற அன்னை திருமதி அங்கம்மாள் அவர்கள் இன்று சனிக்கிழமை மாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்தோடு அறிவிக்கிறேன். இறுதிச் சடங்குகள் தேனி மாவட்டம் வடுகபட்டியில் நாளை ஞாயிறு மாலை நடைபெறும்" என்று குறிப்பிட்டுள்ளார். இவரது பதிவு பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. மேலும் பலர் நாளை அதாவது மே 11ஆம் தேதி அன்னையர் தினம், ஆனால் கவிப்பேரரசு வைரமுத்துவின் தாயார் இன்று மறைந்து விட்டாரே என வருத்தத்துடன் பதிவிட்டு வருகிறார்கள். அவரது பதிவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Lyricist Vairamuthu Mother Passed Away he is deeply sad

கவிஞர் வைரமுத்து மற்றும் அவரது அம்மா என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது, தனது அம்மாவுக்காக வைரமுத்து எழுதிய கவிதைதான். அதுவும் அந்த கவிதையை அவரே அரங்கேற்றம் செய்யும்போது அழுதுகொண்டே அரங்கேற்றம் செய்த வீடியோ இப்போதும் இணையத்தில் உலா வருகிறது. தாயார் குறித்து வைரமுத்து எழுதிய கவிதை இதோ,

“ஆயிரந்தான் கவிசொன்னேன்
அழகழகாப் பொய் சொன்னேன்
பெத்தவளே ஒம்பெரும
ஒத்தவரி சொல்லலியே!

காத்தெல்லாம் மகன்பாட்டு
காயிதத்தில் அவன் எழுத்து
ஊரெல்லாம் மகன் பேச்சு
ஓங்கீர்த்தி எழுதலையே!

எழுதவோ படிக்கவோ
ஏலாத தாய்பத்தி
எழுதிஎன்ன லாபமின்னு
எழுதாமப் போனேனோ?

பொன்னையாத் தேவன்
பெத்த பொன்னே! குலமகளே!
என்னைப் புறந்தள்ள
இடுப்புவலி பொறுத்தவளே!

வைரமுத்து பிறப்பான்னு
வயித்தில்நீ சுமந்ததில்ல
வயித்தில்நீ சுமந்த ஒண்ணு
வைரமுத்து ஆயிருச்சு

கண்ணுகாது மூக்கோட
கறுப்பா ஒருபிண்டம்
இடப்பக்கம் கெடக்கையில
என்னென்ன நெனச்சிருப்ப?

கத்தி எடுப்பவனோ?
களவாடப் பிறந்தவனோ?
தரணிஆள வந்திருக்கும்
தாசில்தார் இவந்தானோ?

இந்த வெவரங்க
ஏதொண்ணும் அறியாம
நெஞ்சூட்டி வளத்தஒன்ன
நெனச்சா அழுகவரும்

கதகதன்னு களி(க்) கிண்டி
களிக்குள்ள குழிவெட்டி
கருப்பட்டி நல்லெண்ண
கலந்து தருவாயே

தொண்டையில் அதுஎறங்கும்
சொகமான எளஞ்சூடு
மண்டையில இன்னும்
மசமன்னு நிக்கிதம்மா

கொத்தமல்லி வறுத்துவச்சுக்
குறுமொளகா ரெண்டுவச்சு
சீரகமும் சிறுமொளகும்
சேத்துவச்சு நீர்தெளிச்சு

கும்மி அரச்சு நீ
கொழகொழன்னு வழிக்கையிலே
அம்மி மணக்கும்
அடுத்ததெரு மணமணக்கும்

தித்திக்கச் சமச்சாலும்
திட்டிக்கிட்டே சமச்சாலும்
கத்திரிக்கா நெய்வடியும்
கருவாடு தேனொழுகும்

கோழிக் கொழம்புமேல
குட்டிக்குட்டியா மெதக்கும்
தேங்காச் சில்லுக்கு
தேகமெல்லாம் எச்சிஊறும்

வறுமையில நாமபட்ட
வலிதாங்க மாட்டாம
பேனா எடுத்தேன்
பிரபஞ்சம் பிச்செறிஞ்சேன்!

பாசமுள்ள வேளையில
காசுபணம் கூடலையே!
காசுவந்த வேளையிலே
பாசம்வந்து சேரலையே!

கல்யாணம் நான் செஞ்சு
கதியத்து நிக்கையிலே
பெத்தஅப்பன் சென்னைவந்து
சொத்தெழுதிப் போனபின்னே

அஞ்சாறு வருசம்உன்
ஆசமொகம் பாக்காமப்
பிள்ளைமனம் பித்தாச்சே
பெத்தமனம் கல்லாச்சே

படிப்புப் படிச்சுக்கிட்டே
பணம் அனுப்பி வச்சமகன்
கைவிட மாட்டான்னு
கடைசியில நம்பலையே!

பாசம் கண்ணீரு
பழையகதை எல்லாமே
வெறிச்சோடி போன
வேதாந்த மாயிருச்சே!

வைகையில ஊர்முழுக
வல்லூறும் சேர்ந்தழுக
கைப்பிடியாக் கூட்டிவந்து
கரைசேத்து விட்டவளே!

எனக்கொண்ணு ஆனதுன்னா
ஒனக்குவேற பிள்ளையுண்டு
ஒனக்கேதும் ஆனதுன்னா
எனக்குவேற தாயிருக்கா?” இதுதான் வைரமுத்து தனது தாயார் குறித்து எழுதிய கவிதை. இதில் வைகையில ஊர்முழுக; வல்லூறும் சேர்ந்தழுக
கைப்பிடியாக் கூட்டிவந்து கரைசேத்து விட்டவளே! என்ற வரிகளை பாடும்போது கவிப்பேரரசு அழுதிருப்பார். இந்த கவிதையை அவர் அரங்கேற்றம் செய்த பின்னர் அறையில் கூடியிருந்த அனைவரும் எழுந்து நின்று நீண்ட நேரம் கைதட்டி பாராட்டினார்கள். பலர் கண்ணீர் விட்டு அழுதார்கள்.

இப்படியான அம்மாவை இழந்து நிற்கும் மூத்த கவிஞர் வைரமுத்துவிற்கு ஆறுதல் சொல்ல திரையுலகத்தினர், அரசியல்வாதிகள், அவரது நண்பர்கள் மற்றும் வாசகர்கள் என பலரும் அவரது வீட்டிற்குச் சென்று கொண்டு உள்ளார்கள். வைரமுத்துவின் கருவாச்சி காவியம் என்ற நாவலும் வைரமுத்துவின் பால்யம் மற்றும் அவரது தாயாரை மைய்யப்படுத்தியது என்று கூறும் வாசகர்களும் உள்ளார்கள். நாளை அன்னையர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படும் நிலையில் அதற்கு முன் தினம் அவரது தாயார் மறைந்தது அவருக்கு மேலும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் என பலரும் பேசிவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X