காதல் தோற்பதில்லை.. காதல் குறித்து அடுக்கு மொழியில் பேசிய கவிஞர் சினேகன்!
சென்னை: இயக்குநர் ஆதிராஜா இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் நினைவெல்லாம் நீயடா. இத்திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய கவிஞர் சினேகன், காதல் மரியாதையை எதிர்பார்ப்பது இல்லை, அதை எதிர்பார்த்தால் அது காதல் இல்லை என்று காதல் குறித்து மிகவும் அழகாக அடுக்கு மொழியில் பேசி உள்ளார்.
லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகி உள்ள நினைவெல்லாம் நீயடா படத்தில், பிரஜன் கதாநாயகனாக நடிக்க மனிஷா யாதவ் மற்றும் சினாமிகா கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இளம் நாயகன் நாயகியாக ரோஹித் - யுவலட்சுமி ஜோடி நடிக்க, முக்கிய கதாப்பாத்திரங்களில் ரெட்டின் கிங்ஸ்லி, மனோபாலா, மதுமிதா, டைரக்டர் ஆர்.வி. உதயகுமார், முத்துராமன், பி எல் தேனப்பன், ரஞ்சன் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். சிலந்தி, ரணதந்த்ரா, அருவா சண்ட ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ஆதிராஜன் கதை திரைக்கதை வசனங்களை எழுதி இயக்கியுள்ளார்.

பள்ளி பருவ காதலை மையப்படுத்தி இந்த கதை இயக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஒரு சிறப்பு என்னவென்றால் இசைஞானி இளையராஜா எழுத்தில் அவரது மகன் யுவன் சங்கர் ராஜா முதல் முறையாக பாடியுள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் நடைபெறவிருந்த நிலையில் இளையராஜாவின் மகள் பவதாரிணி உயிரிழந்ததால் ரத்து செய்யப்பட்டது.
கவிஞர் சினேகன்: இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், கே.ராஜன், ஆர்.வி.உதயகுமார், ப்ரஜன், கேயார், சிநேகன், பேரரசு, கோமல் சர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய கவிஞர் சினேகன், இந்த மேடை மிக முக்கியமான மேடை, இசைஞானி இளையராஜா இங்கு வந்து அமர்ந்திருக்க வேண்டும். ஆனால், காலத்தின் கட்டாயத்தால் அவரால் இங்கு வரமுடியவில்லை. அவர் அந்த இழப்பிலிருந்து மீண்டு வர வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன். இந்த படத்தில் நான் 3 பாடல்கள் எழுதியிருக்கிறேன்.
வருத்தம் உண்டு: நான் கதைக்குப் பாடல் எழுதத்தான் சினிமாவுக்கு ஓடி வந்தேன். ஆனால், இந்த சினிமா என்னை சதைக்கு பாடல் எழுத வைத்துக் கொண்டிருக்கிறது. பட்டுக்கோட்டையார் மாதிரி பத்து பாடல் எழுதி விட்டுச் செத்துப் போகலாம் என்று வந்தவனை, சில பாடல்கள் இப்படி வருகிறது. என் முதல் பாடல் பாண்டவர் பூமி பாடலுக்கு அரசு விருது வாங்கிய கவிஞன் என்று பெருமையுடன் கூறியவர். ஏன் ஒரு நல்ல விஷயங்களை இந்த சமூகம் எடுத்து கொண்டாட மறுக்கிறது என்ற வருத்தம் படைப்பாளனாக எனக்கு இருக்கிறது.
சபிக்கப்பட்டவன்: மரியாதை இல்லாத தலைப்பு என்று ராஜன் அவர்கள் பேசி இருந்தார். காதல் மரியாதை எதிர்பார்ப்பது இல்லை. எதிர்பார்த்தால் அது காதலும் இல்லை. காதலுக்கு வெற்றி, தோல்வி எதுவுமே இல்லை. அது வாழ்ந்து கொண்டே இருக்கும். நினைவலைகளில் நீந்தி கொண்டே இருக்கும், காற்று அலைப்போல நீண்டு கொண்டே இருக்கும், அதை கொண்டாடத் தெரியாதவன் சபிக்கப்பட்டவன். காதலை எந்த வயதிலும் கொண்டாடலாம், நிறம்,பேதம், மதம், மோதல் என எதுவுமே இல்லை. காதலை கொண்டாடாமல் கலை வளர்ந்தது இல்லை. இந்த பூமியில், கலை, பண்பாடு, கலாச்சாரம் என அனைத்திற்குள்ளும் காதல் பின்னி பினையப்பட்டு இருக்கிறது.
காதல் கொண்டாடப்பட வேண்டும்: எனவே காதலை கொண்டாடப்படுவதை தவிர வெற்றி தோல்வி என்று நிர்ணயிப்பதற்கு எவனுக்கும் தகுதி இல்லை. ஏன் எனில், காதலை காதலாய் காதலில் காதலித்தவர்கள் காதலில் எவரும் இல்லை. காதல் காதலாகவே இருக்கிறது. இங்கு தோற்பது காதலர்கள் தானே தவிர காதல் ஒரு போதும் தோற்றது இல்லை. தோற்றுக்கொண்டே இருக்கிறார்கள் காதலர்கள், ஆனால் காதல் வென்றுகொண்டே இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், காதலை வெளிப்படுத்தி வென்ற காதலர்களைவிட, காதலை வெளிப்படுத்தாமல் வென்ற காதலர்கள் அதிகம். அனைத்து இடத்திலும் காதல் இருக்கிறது. எல்லா நட்புக்குள்ளும் காதல் இருக்கிறது. மனிதம் காதலைக் கொண்டாட மறுக்கிறது என்று காதல் குறித்து சினேகன் மிகவும் அழகாக பேசினார்.


Click it and Unblock the Notifications











