அமீர் Vs ஞானவேல் ராஜா மோதல்...வார்த்தையை அளந்து பேச வேண்டும்.. பாடலாசிரியர் சினேகன் நச் பதில்!
சென்னை: ஒருவரை விமர்சனம் செய்வதற்கும் அறம் தெரிந்து வார்த்தையை அளந்து பேச வேண்டும் என ஞானவேல் ராஜாவுக்கு பாடலாசிரியர் சினேகன் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
இயக்குநர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இடையே நீண்ட காலமாக பருத்திவீரன் படம் தொடர்பாகப் பிரச்சனை நடந்து வருகிறது.

இது தொடர்பான அண்மையில் பேட்டி அளித்த தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, இயக்குனர் அமீர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி இருந்தார்.
அமீர் விளக்கம்: இந்த விவகாரம் கடும் சர்ச்சைகளை கிளப்பிய நிலையில் இயக்குனர் அமீர் விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், 'பருத்திவீரன் தொடர்பாகவும், என்னுடைய திரைப்பயணம் குறித்தும் ஞானவேல் ராஜா கூறிய கருத்துகளில் ஒன்றுக்கூட உண்மையில்லை. திரைத்துறையில் என்னுடைய பயணத்தை தடை செய்யும் நோக்கத்தோடு திட்டமிட்டு நடத்தப்படும் பொய்.
நான் அமைதியாக இருக்கிறேன்: நடந்த உண்மைகள் அனைத்தையும் சொல்வதற்கு எனக்கு சில மணி நேரங்களே போதுமானது. ஆனால், பலருடைய வாழ்க்கையில் அது புயலை கிளப்பி விடும் என்பதாலும், ஒட்டுமொத்த திரை உலகத்தையும் திசை திருப்பி விடும் என்ற காரணத்தினால், நான் அமைதி காக்கிறேன் என அமீர் கூறியிருந்தார்.
சினேகன் பேட்டி: இதுகுறித்து, பாடலாசிரியர் சினேகன் அளித்துள்ள பேட்டியில், தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் பிரச்சனை நடப்பது இயல்பு தான் என்பதால், நான் இதுவரை இந்த விஷயம் குறித்து வாய் திறக்காமல் இருந்தேன். அமீர் கோவக்காரர் தான், ஆனால், யாரையும் தரக்குறைவாக இதுவரை பேசியது இல்லை.
அறம் தெரிந்திருக்க வேண்டும்: ஆனால், தயாரிப்பாளர் அவரை தரக்குறைவாக பேசுவதை கேட்கும் போது மனதிற்குள் ஒரு போராட்டம் நடக்கிறது. ஒருவரை விமர்சனம் செய்வதற்கும் அறம் தெரிந்து வார்த்தையை அளந்து பேசி இருக்க வேண்டும். பேச்சு உரிமை இருக்கு என்பதற்காக ஒருவரை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்யக்கூடாது.
பெரிய போராட்டம்: பருத்திவீரன் படத்திற்காக அமீர் எவ்வளவு சிரமங்களை சந்தித்தார் என்று, அவருடன் பயணம் செய்த எங்களைப் போன்றவர்களுக்கு நன்றாக தெரியும். படம் வெளியில் வருமா, வராதா என்றெல்லாம் பெரிய போராட்டமே நடந்தது. அமீரின் பல நண்பர்கள் தங்களுடைய உழைப்பை அந்த படம் வெளியில் வரவேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்தார்கள்.
பருத்திவீரன் படத்தின் அத்தனை பாடல்களையும் நான் எழுதியும், அதற்காக சம்பளமே வாங்கவில்லை. என் நண்பனின் போராட்டத்திற்கு என்னால் பணம் கொடுத்து உதவ முடியவில்லை என்பதால் என் உழைப்பை கொடுத்தேன் என்று சினேகன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











