கவிஞர்கள் வாழும்போதே அவர்களுக்கு மரியாதை செய்யுங்கள் - வைரமுத்து வேண்டுகோள்
தேனி: கவிஞர்கள் உயிருடன் இருக்கும்போதே அவர்களுக்கு மரியாதை செய்ய கற்றுக்கொள்ள வேண்டும் என கவிஞர் வைரமுத்து தெரிவித்திருக்கிறார்.
தமிழ் சினிமா பாடல்கள் வரலாற்றில் வைரமுத்து தவிர்க்க முடியாதவர். இளையராஜா எப்படி இசையை மாற்றினாரோ அதேபோல் வைரமுத்து பாடல் வரிகளில் புதுமையை புகுத்தியவர். அவருக்கென்று பலர் ரசிகர்களாக இருக்கின்றனர்.

நிழல்களில் அறிமுகமான வைரமுத்து
பாரதிராஜா இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் உருவான நிழல்கள் படம்தான் வைரமுத்து அறிமுகமான படம். அதில் வரும், 'இது ஒரு பொன்மாலை பொழுது' பாடலை எழுதி முதல் பாடலிலேயே பலரது கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து இளையராஜாவுடன் பணியாற்றிய வைரமுத்து ஆகச்சிறந்த பாடல்களை கொடுத்திருக்கிறார். ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் இந்த கூட்டணி முறிந்தது.

வைரமுத்து - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி
இளையராஜாவுடனான பிரிவுக்கு பிறகு ஏ.ஆர். ரஹ்மானுடன் கூட்டணி அமைத்தார் வைரமுத்து. ரஹ்மான் சினிமாவுக்குள் நுழைந்து புது புது சத்தங்களோடு இசை அமைத்தபோது வைரமுத்துவும் தனது பங்குக்கு ரஹ்மானின் இசையில் புது புது வார்த்தைகளை பாடலுக்குள் வைத்து அதகளப்படுத்தியவர். ரோஜாவில் ஆரம்பித்த அவர்களது கூட்டணி பல வருடங்கள் நீடித்தது. ஆனால் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இந்தக் கூட்டணி இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மகளிர் தின விழாவில் வைரமுத்து
இந்நிலையில் தேனிக்கு அருகில் இருக்கும் பழனிசெட்டிப்பட்டியில் புத்தக திருவிழா நடந்துவருகிறது. இந்தச் சூழலில் மகளிர் தின விழாவை முன்னிட்டு நேற்று பாடலாசிரியர் வைரமுத்து சிறப்பு விருந்தினராக கலந்த்கொண்டார். அப்போது பேசிய அவர், "வேட்டை யுகம், வேளாண்மை யுகம், தொழில் யுகம் ஆகியவற்றை கடந்து தற்போது கல்வி யுகத்தில் இருந்து வருகிறோம்.
இந்த யுகத்தில் தகுதியுள்ளவர்கள் மட்டுமே தப்பி பிழைக்க முடியும். பற்றவன், கல்லாதவன் என்ற நிலையானது தற்போது தொழில்நுட்பம் கற்றவன், தொழில்நுட்பம் கல்லாதவன் என்று மாறியுள்ளது. வயது முதிர்ந்த காலத்தில் நம்மை நாமே பராமரித்து கொள்ளவேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். இதற்கு தயாராக உள்ளவர்கள் மட்டுமே வாழ முடியும். தொழில் நுட்பத்தை மகனிடம் இருந்தும், பேரன் பேத்திகளிடம் இருந்தும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

கவிஞர்கள் வாழும்போதே அவர்களுக்கு மரியாதை செய்யுங்கள்
பாரதியார், புதுமைப்பித்தன் போன்ற எழுத்தாளர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்களுக்கு தகுந்த மரியாதை வழங்கப்படவில்லை. எந்த தேசத்தில் கற்றவர்கள் மதிக்கப்படுகிறார்களோ அங்கு மட்டுமே அறிவுள்ள ஆட்சி நடக்கிறது என்று அர்த்தம். எனவே எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் வாழும் காலத்திலேயே அவர்களுக்கு மரியாதை செய்ய நாம் கற்றுக்கொள்ள வேண்டும்

வைரமுத்து முதலாக படித்த புத்தகம்
நான் முதன்முதலில் வாசித்த புத்தகம், ஏழைபடும் பாடு என்ற பிரெஞ்ச் மொழி பெயர்ப்பு நாவலாகும். தேனி அருகே உள்ள கரட்டுப்பட்டியில் லாந்தர் வெளிச்சத்தில் இரவில் படிக்க தொடங்கிய நான் அதிகாலை சேவல் கூவும் நேரத்தில் வாசித்து முடித்தேன். அன்று என் நெஞ்சில் ஏற்பட்ட புத்தக வாசிப்பு என்ற நெருப்பு எனது 70 வயதிலும் எரிமலையாக எழுந்து நிற்கிறது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு தமிழை வாசிக்கவும், எழுதவும், பேசவும், படிக்கவும், பாரம்பரியத்தை அறிந்து கொள்ளவும் வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும்" என்றார்.


Click it and Unblock the Notifications











