என்ன கொடுமை சார்.. பாடல் திருட்டு சர்ச்சையில் சிக்கிய இயக்குநர்.. ஏற்கனவே ஏடாகூடம்.. இதுவேறயா?
சென்னை: இயக்குநர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா, மடோனா செபாஸ்டியன் நடித்துள்ள படம் ஜாலியோ ஜிம்கானா. காமெடி திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் இருந்து இன்று பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. அஸ்வின் விநாயகமூர்த்தி இசையில் உருவாகியுள்ள "ஒரு போலீஸ்காரன கட்டிக்கிட்டா" என்ற பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பாடல் வரிகள் முழுக்க டபுள் மீனிங்காக உள்ளதாக சர்ச்சைகளும் வெடித்துள்ளன.
இந்நிலையில், அந்த பாடல் வரிகள் குறித்து திருட்டு சர்ச்சை ஒன்றும் கிளம்பியிருப்பது தான் தற்போது கோலிவுட்டில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த பாடலை இயக்குநர் சக்தி சிதம்பரம் எழுதியுள்ளதாக கூறப்படும் நிலையில் அதன் உண்மையான பாடலாசிரியர் ஜெகன் கவிராஜ் என்பவர் தான் எனக் கூறுகின்றனர். பாடலாசிரியரை ஏமாற்றி பாடலை வாங்கிவிட்டு கடைசியில் இயக்குநர் தனது பெயரை போட்டுக்கொண்டார் என குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளன.
இயக்குநர் சக்தி சிதம்பரம்: ராம்கி, வினிதா நடிப்பில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான சாம்ராட் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சக்தி சிதம்பரம். வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு, என்னம்மா கண்ணு, சார்லி சாப்ளின், இனிது இனிது காதல் இனிது, காதல் கிறுக்கன், மகா நடிகன், இங்கிலீஷ்காரன், கோவை பிரதர்ஸ், வியாபாரி, சண்டை, ராஜாதி ராஜா, குரு சிஷ்யன், சார்லி சாப்ளின் 2 மற்றும் பேய் மாமா உள்ளிட்ட படங்களை இயக்கிய சக்தி சிதம்பரம் தற்போது பிரபுதேவா, மடோனா செபாஸ்டியனை வைத்து ஜாலியோ ஜிம்கானா படத்தை இயக்கி வருகிறார்.

பாடல் திருட்டு சர்ச்சை: பத்திரிகையாளரான ஜெகன் கவிராஜ் ஜீரக பிரியாணி என்ற பாடலின் மூலம் அனைவராலும் ரசிக்கப்பட்ட இவர் தொடர்ந்து பாடல்கள் எழுதி வருகிறார். ஆனால் ஜாலியோ ஜிம்கானா படத்தில் இவர் எழுதிய இந்த பாடலுக்கு இயக்குநர் சக்தி சிதம்பரம் உரிமை கொண்டாடி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு திறமையான கலைஞரின் உழைப்பை திருடுவது என்பது திரையுலகில் புதிதல்ல என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
ஆனால் ஒரு நல்ல கலைஞரின் உழைப்பு திருடப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது என ரசிகர்கள் அந்த பாடல் வெளியான யூடியூப் தளத்தில் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஜெகன் கவிராஜுக்கு ரசிகர்கள் பலரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக சக்தி சிதம்பரம் என்ன விளக்கம் அளிக்கப் போகிறார் என்றும் பிரபுதேவா என்ன சொல்ல காத்திருக்கிறார் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications