அளவுக்கு அதிகமான சிகரெட்.. 30தே வயசு தான்.. மாமன்னன் உதவி இயக்குநர் உயிரிழப்பு!
சென்னை: அளவுக்கு அதிகமாக புகைப்பிடிக்கும் பழக்கத்தால் மூச்சு திணறல் ஏற்பட்டு மாமன்னன் உதவி இயக்குநர் உயிரிழந்துள்ளார்.
மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவான கர்ணன் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர் மாரிமுத்து. அந்த படத்திலும் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.

கதை எழுதுவதில் ஆர்வம் கொண்ட இவர், இயக்குநராக வேண்டும் என்ற ஆசையில் தூத்துக்குடியில் இருந்து சென்னையில் சினிமா வாய்ப்பு தேடி அலைந்துள்ளார்.
சினிமா ஆசை: சினிமா என்பது ஒரு மாயவலை இதில் வெற்றி பெற வேண்டும் என்றால், திறமையைவிட அதிர்ஷ்டமும் சேர்ந்து கைகொடுத்தால்தான் வெற்றி கனியை பறிக்க முடியும். அப்படி சினிமா ஆசையோடு சென்னைக்கு பல நடிகர்கள், பல இயக்குநர்கள் படையெடுத்த போதும் ஒரு சிலர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.
மாமன்னன் படத்தில்: சினிமாவில் வெற்றி பெற வேண்டும் என்ற கனவோடு சென்னை வந்தவர்களில் மாரிமுத்துவும் ஒருவர். இவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த கர்ணன் படத்தில் உதவி இயக்குநராக இருந்ததோடு, அந்த படத்தில் ஒரு சில காட்சியிலும் நடித்துள்ளார். அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது.
கர்ணன் படத்தைத் தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் நடித்து, தியேட்டரில் வெளியாகி சக்கைப்போடு போட்ட மாமன்னன் படத்திலும் உதவி இயக்குநராக பணியாற்றி உள்ளார்.
திடீர் மாரடைப்பு: இந்நிலையில், உதவி இயக்குநர் மாரிமுத்து தனது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் திருப்புளியங்குடி கிராமத்தில் இருந்த போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதை அடுத்து ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அளவுக்கு அதிகமான புகைப்பழக்கம்: இதையடுத்து, நெல்லை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது வழியிலேயே மாரிமுத்து உயிரிழந்துள்ளார். அவருக்கு அளவுக்கு அதிகமான சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதுதான் மாரிமுத்துவுக்கு மூச்சித்திணறல் ஏற்படவும் மாரடைப்பு ஏற்படவும் காரணம் என்று ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சினிமாவில் எப்படியாவது ஜெயித்துவிடவேண்டும் என்ற கனவுடன் இருந்த 30 வயதான மாரிமுத்து இறந்தது திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











