Maamannan: வடிவேலு போஸ்டரில் ஒளிந்திருக்கும் மர்மம்... மாமன்னன் மாரி செல்வராஜ் யூனிவர்ஸா?
சென்னை: மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மாமன்னன் உதயநிதியின் கடைசிப் படமாக உருவாகியுள்ளது.
இந்தப் படத்தில் வடிவேலு தான் மாமன்னன் என்ற முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
ஜூன் மாதம் வெளியாகும் மாமன்னன் படத்தில் இருந்து அடுத்தடுத்து புதிய போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு வருகிறது.
இதில் வடிவேலுவின் போஸ்டரில் மாரி செல்வராஜ் கொடுத்துள்ள லீட், ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாமன்னன் வடிவேலு போஸ்டரில் மர்மம்:மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மாமன்னன் திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகவுள்ளது. கர்ணன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து உதயநிதியுடன் இணைந்த மாரி செல்வராஜ், மாமன்னன் படப்பிடிப்பை தொடங்கினார். உதயநிதி ஹீரோ என்றாலும் வடிவேலு தான் மாமன்னன் படத்தில் லீடிங் கேரக்டரில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.'

உதயநிதி, வடிவேலு ஆகியோருடன் ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல், ஏஆர் ரஹ்மான் மாமன்னன் படத்திற்கு இசையமைத்துள்ளார். தற்போது அமைச்சர் பொறுப்பில் இருக்கும் உதயநிதி, மாமன்னன் தான் தனது கடைசிப் படம் என ஏற்கனவே அறிவித்துவிட்டார். இதனால், இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் மாமன்னன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. அதில், உதயநிதியும் வடிவேலுவும் துப்பாக்கி, அரிவாளுடன் ஒன்றாக அமர்ந்திருக்கும் போஸ்டர் ரசிகர்களிடம் அதிக கவனம் பெற்றுள்ளது. அதேபோல், கீர்த்தி சுரேஷ், ஃபஹத் பாசில் ஆகியோரின் போஸ்டர்களும் நேற்று வெளியாகின.

இந்நிலையில், வடிவேலு மட்டும் தனியாக ஒரு ஜன்னல் அருகே நிற்கும் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில், வடிவேலுவின் கையில் ஒரு டாட்டூ வரையப்பட்டுள்ளது. அது கர்ணன் படத்தில் எமனாக நடித்த லால் புகைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணியில் வெளியான கர்ணன் திரைப்படத்தில், மலையாள நடிகர் லால் எமராஜா என்ற முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். படத்தின் இறுதியில் லால் இறந்துவிடுவதோடு அவரின் போட்டோ சுவரில் வரையப்பட்டிருக்கும்.

இந்தப் போட்டோ தான் மாமன்னன் வடிவேலுவின் கையில் டாட்டூவாக வரையப்பட்டுள்ளது. இதனால், கர்ணன் படத்தின் சீக்வெல்லாக மாமன்னன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அல்லது மாரி செல்வராஜின் யுனிவர்ஸ் கான்செப்ட்டில் இந்தப் படம் உருவாகியிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. லோகேஷ் கனகராஜ் தனக்கான யுனிவர்ஸ் கான்செப்ட்டை கையில் எடுத்துள்ள நிலையில், தற்போது மாரி செல்வராஜும் அதே ரூட்டில் களமிறங்கிவிட்டார் எனத் தெரிகிறது.
கடந்த வாரம் இசைப்புயல் ஏஆர் ரஹ்மானும் வைகைப் புயல் வடிவேலுவும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகின. ஏஆர் ரஹ்மான், வடிவேலுவுடன் இயக்குநர் மாரி செல்வராஜ், ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், பாடலாசிரியர் யுகபாரதி ஆகியோரும் உடன் இருந்தனர். தற்போது இன்னொரு புகைப்படமும் வெளியாகியுள்ளது. அதில், ஏஆர் ரஹ்மான், வடிவேலு, மாரி செல்வராஜ் உள்ளிட்டோர் ஸ்டூடியோவில் அரட்டை அடித்துக்கொண்டிருக்கின்றனர். இதனிடையே ஏஆர் ரஹ்மான் இசையில் வடிவேலு பாடியுள்ள பாடல், மாமன்னன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளாக விரைவில் வெளியாகிறது.


Click it and Unblock the Notifications











