Maamannan: எனது எல்லா படங்களிலும் அரசியல் இருக்கும்... மாமன்னன் விழாவில் மாரி செல்வராஜ் ஓபன்!
சென்னை: மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில் கமல் உட்பட ஏராளமான திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
அப்போது மாமன்னன் படத்தின் பாடல்களை ஏஆர் ரஹ்மான் குழுவினர் லைவாக மேடையில் அரங்கேற்றினர்.
இதனிடையே இயக்குநர் மாரி செல்வராஜ் பேசிய போது, தனது எல்லா படங்களிலும் அரசியல் இருக்கும் என கூறினார்.

எல்லா படங்களிலும் அரசியல் இருக்கும்: உதயநிதி நடித்துள்ள மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஜூன் 1) நடைபெற்றது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதியின் கடைசிப் படமாக மாமன்னன் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால் ஆகியோரும் முக்கியமான பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில், நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில், நடிகர் கமல்ஹாசன் பாடல்களை வெளியிட்டார். ஏஆர் ரஹ்மான் இசையில் மொத்தம் 7 பாடல்கள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளன. அப்போது படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் மாமன்னன் படம் குறித்து பேசினார்.
அதில், "தனது எல்லா படங்களிலும் சமூக நீதிக்கான அரசியல் கண்டிப்பாக இருக்கும்" என மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். எந்த மாதிரியான படம் இயக்கினாலும், அது எந்த ஜானரில் இருந்தாலும் அதில் சமூக நீதி இருக்க வேண்டும் என நினைப்பேன். அப்படியே மாமன்னன் படத்திலும் சமூக நீதி இருக்கும். அதேபோல், மாமன்னன் திரைப்படம் வெளியானதும் நிறைய அதிர்வுகளை ஏற்படுத்தும் எனக் கூறினார்.
மேலும், வடிவேலுவை நீங்கள் எப்படி பார்க்க நினைத்தீர்களோ அதுபோல வேறு ஒரு வித்தியாசமான பாத்திரத்தில் நடிக்கலாம் என மாரி செல்வராஜ் பேசியுள்ளார். ஏற்கனவே மாமன்னன் படத்தில் வடிவேலுவின் கேரக்டர் குறித்து சில பேட்டிகளில் மாரி செல்வராஜ் கூறியிருந்தார். அதன்படி வடிவேலு தான் மாமன்னனாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதனால் மாமன்னன் படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மாமன்னன் மாரி செல்வராஜ்ஜின் 3வது படமாக உருவாகியுள்ளது. முன்னதாக அவர் இயக்கிய பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களும் அரசியல் பின்னணிக் கொண்டபவை தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு படங்களுமே சமூக நீதிக்கான அரசியலை மிக அழுத்தமாக பேசியது. அதனால், தற்போது வெளியாகவுள்ள மாமன்னன் படமும் மாரி செல்வராஜ் சொன்னதை போல சமூக நீதி அரசியல் பேசும் என்றே ரசிகர்களும் எதிர்பார்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











