Maamannan - மாமன்னன் வசூல் எவ்வளவு?.. ஓபனாக சொன்ன உதயநிதி ஸ்டாலின்
சென்னை: Maamannan (மாமன்னன்) மாமன்னன் படத்தில் வசூல் நிலவரம் குறித்த தகவலை உதயநிதி ஸ்டாலின் வெளிப்படையாக மேடையில் தெரிவித்திருக்கிறார்.
பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களை இயக்கி கவனம் ஈர்த்த மாரி செல்வராஜ் வடிவேலு,ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரை வைத்து மாமன்னன் படத்தை இயக்கியிருக்கிறார். இப்படம்தான் உதயநிதிக்கு கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது. படமானது கடந்த ஜூன் 29ஆம் தேதி ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் திரையரங்குகளில் வெளியானது.

சூப்பர் விமர்சனம்: பெரும் எதிர்பார்ப்போடு சென்ற ரசிகர்களை படம் பூர்த்தி செய்துவிட்டது. தனித்தொகுதி எம்.எல்.ஏ ஒருவர் சாதி வெறி பிடித்தவர்களால் என்ன பாடு படுகிறார் என்பதை மாரி செல்வராஜ் எந்த சமரசமுமின்றி படத்தில் பேசியிருந்தார். ஒவ்வொரு காட்சியிலுமே வீரியம் குறையாமல் காத்திரம் இழக்காமல் மாரி செல்வராஜ் பேசியிருந்த அரசியல் நிச்சயம் தமிழ் சினிமாவுக்கு புதிது.
வசூல் ரீதியாக ஹிட்: விமர்சன ரீதியாக படம் ஒருபக்கம் கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்க வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்டது. படம் வெளியாகி ஒரு வாரம் முடிவடைந்த சூழலில் படம் 40 கோடி ரூபாய் வசூலை தாண்டிவிட்டதாக கூறப்பட்டது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. இந்தச் சூழலில் உதயநிதி ஸ்டாலின் மாமன்னனின் வசூல் குறித்து ஓபனாக பேசியிருக்கிறார்.
மாமன்னன் வெற்றி விழா: மாமன்னன் படம் வெளியாகி மெகா ஹிட்டானதை அடுத்து படத்தின் வெற்றி விழா நேற்று சென்னையில் நடந்தது. இதில் மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், லால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.அந்த விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், "மாமன்னன் படம் தமிழ்நாட்டில் 510 திரையரங்குகளில் திரையிடப்பட்டது. இரண்டாவது வாரத்திலும் 470 திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது.ஒன்பது நாட்களில் 52 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது.
கடைசி மேடை: இந்த மேடைதான் கடைசி மேடை என நினைத்தேன். ஆனால் மாமன்னன் படத்தின் 50ஆவது நாள் அன்று விழா நடத்தப்பட்டு படத்தில் பணியாற்றியவர்களுக்கு கேடயம் வழங்கப்படும்.அதுதான் எனது கடைசி சினிமா மேடையாக இருக்கும். மாமன்னன் படத்தின் இந்த வெற்றிக்கு அனைவரது உழைப்பும்தான் காரணம். படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ரொம்பவே ஜாலியாகத்தான் இருக்கும்.
பண்ணமாட்டேன் என்று நினைத்தார்: இந்தப் படத்தின் கதையை நான் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்றுதான் மாரி செல்வராஜ் இக்கதையை சொன்னார். ஆனால் நான் ஒத்துக்கொண்டேன். படத்தின் பிளாஷ் பேக்கில் வடிவேலு மலை மீது நின்று அழும் காட்சியை பார்த்து அழாதவர்கள் யாருமே இல்லை. அந்த அளவுக்கு மாரி செல்வராஜ் அவரிடம் நடிப்பை வாங்கியிருந்தார். வடிவேலு இந்தப் படத்தில் நடிப்பாரா மாட்டாரா என்று சந்தேகம் இருந்தது. பிறகு வடிவேலு ஒத்துக்கொண்டார். இந்தப் படத்தின் உண்மையான மாமன்னன் வடிவேலுதான்"என்றார்.


Click it and Unblock the Notifications











