Maamannan: மாமன்னன் தான் கடைசி படம்ன்னு சொல்லி காரியம் சாதித்த உதயநிதி... கடைசில இப்படி ஆயிடுச்சே!
சென்னை: உதயநிதியின் கடைசிப் படமாக உருவாகியுள்ள மாமன்னன் வரும் 29ம் தேதி வெளியாகிறது.
மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
உதயநிதியுடன் வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் மாமன்னன் தான் தனது கடைசி படம் என சொல்லியே உதயநிதி காரியம் சாதித்த சம்பவம் குறித்து தற்போது தெரியவந்துள்ளது.

காரியம் சாதித்த உதயநிதி: மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி, ஃபஹத் பாசில், லால், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் மாமன்னன். உதயநிதியின் கடைசிப் படமாக உருவாகியுள்ள மாமன்னன் வரும் 29ம் தேதி வெளியாகிறது. ரெட் ஜெயன்ட் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். முற்றிலும் புதிய கூட்டணியில் உருவாகியுள்ள மாமன்னன் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை பார்த்துவிட்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம் பண்ண வேண்டும் என உதயநிதிக்கு விருப்பம் இருந்துள்ளது. அதனால், அவரே மாரி செல்வராஜிடம் தனக்கு கதை இருந்தால் கூறவும் எனக் கேட்டுள்ளார். இதனால் தன்னிடம் இருந்த மாமன்னன் படத்தின் ஒன்லைன்-ஐ கூறியுள்ளார் மாரி செல்வராஜ். அதற்கு உதயநிதியும் ஓக்கே சொல்ல அப்படி உருவானது தான் மாமன்னன் படமாம்.
இந்தப் படத்தில் வடிவேலு நடித்தால் நன்றாக இருக்கும் என மாரி செல்வராஜ் கூறியுள்ளார். அதன்பின்னர் வடிவேலுவிடம் பேசிய உதயநிதி, மாமன்னன் தான் தனது கடைசி படம் எனக் கூறி கால்ஷீட் கேட்டுள்ளார். வடிவேலும் கதை கேட்டு பிடித்துவிட்டதால் உடனடியாக ஓக்கே சொல்லிவிட்டாராம். ஆனால், அங்கேயும் ஒரு பஞ்சாயத்து இருந்துள்ளது. அதாவது ரெட் கார்டு பஞ்சாயத்து முடிந்து மீண்டும் கம்பேக் கொடுத்த வடிவேலு, அப்போது லைகா தயாரிப்பில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், சந்திரமுகி 2 படங்களில் கமிட்டாகியிருந்தாராம்.
இந்தப் படங்கள் முடியும் வரை வேறு நிறுவனத்தின் படத்தில் கமிட்டாகக் கூடாது என லைகா கண்டிஷன் போட்டுள்ளது. இதுகுறித்து வடிவேலு உதயநிதியிடம் கூற, அவரோ நேராக லைகா சுபாஸ்கரனிடம் மாமன்னன் தான் தனது கடைசி படம் என பேசி வடிவேலுவின் கால்ஷீட்டை வாங்கியுள்ளார். அதேபோல், வழக்கமாக சந்தோஷ் நாராயணனிடம் போகும் மாரி செல்வராஜை, மாமன்னன் படத்திற்காக ஏஆர் ரஹ்மானிடம் கேட்கலாம் என்றுள்ளார்.
அதற்கும் மாரி செல்வராஜ் தயக்கம் காட்ட, இறுதியாக உதயநிதியே ஏஆர் ரஹ்மானிடம் பேசியுள்ளார். அவரிடமும் மாமன்னன் தான் தனது கடைசிப் படம் என பாடிய அதே பல்லவியை திருப்பிப் பாட, இறுதியாக ஏஆர் ரஹ்மானும் இதில் கமிட்டாகியுள்ளார். இவர்கள் மட்டும் இல்லாமல் ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் என மற்ற நடிகர்களையும் இப்படியே வளைத்துப் போட்டுள்ளாராம் உதயநிதி.
முக்கியமாக கர்ணனுக்குப் பிறகு துருவ் விக்ரம் படத்தை இயக்கவிருந்தார் மாரி செல்வராஜ். அதனைத் தொடர்ந்து மீண்டும் தனுஷுடன் இணைய முடிவு செய்திருந்தார். அவர்களும் மாரி செல்வராஜ் படத்திற்காக கால்ஷீட் கொடுத்து ரெடியாக இருந்ததால் அதுவும் சிக்கலாகியுள்ளது. இதனை கேள்விப்பட்ட உதயநிதி, விக்ரம், தனுஷ் இருவரிடமும் மாமன்னன் தான் தனது கடைசி படம் என்றுள்ளார். அதனால், அவர்களும் பெருந்தன்மையாக விட்டுக்கொடுத்துள்ளனர்.
ஆகமொத்தம் மாரி செல்வராஜ் முதல் மாமன்னன் படத்தின் மொத்த டீமையும் இப்படியே சம்மதிக்க வைத்துள்ளார் உதயநிதி. ஆனால், மாமன்னன் ஆடியோ வெளியீட்டில் கமல்ஹாசனை வைத்துக்கொண்டே மாரி செல்வராஜ் பேசியது கடும் சர்ச்சையாகியுள்ளது. இதனால், மாமன்னன் படத்திற்கு ஏதும் பின்னடைவு ஏற்பட்டுவிடுமோ என உதயநிதி அஞ்சுகிறாராம். மாமன்னன் தான் கடைசிப் படம் என சொன்னதுக்காக இப்படியொரு நிலையா என உள்ளுக்குள் புலம்பி வருவதாகவும் சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











