Maamannan: அவரு இல்லைன்னா மாமன்னன் கிடையாது... ரிலீஸ் தேதியுடன் மாரி செல்வராஜ் கொடுத்த அப்டேட்!
சென்னை: பரியேறும் பெருமாள், கர்ணனை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் மாமன்னன்.
உதயநிதி, ஃபஹத் பாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
உதயநிதியின் கடைசிப் படமாக உருவாகியுள்ள மாமன்னன் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்னர் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

மாமன்னன் ரிலீஸ் அப்டேட்:பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். முதல் படத்திலேயே அழுத்தமாக தடம் பதித்த மாரி செல்வராஜ், அடுத்து தனுஷுடன் இணைந்து கர்ணன் படம் கொடுத்தார். இந்தப் படமும் மாரி செல்வராஜ் கேரியரில் தரமான சம்பவமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து அவர் இயக்கியுள்ள திரைப்படம் மாமன்னன்.
உதயநிதி, ஃபஹத் பாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தொடங்கிய மாமன்னன், தற்போது படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷனில் பிஸியாக உள்ளது. இது தான் தனது இறுதிப் படம் என உதயநிதி அறிவித்துவிட்டதால், ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது மாமன்னன். இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைப்பதும் குறிப்பிடத்தக்கது.
மாரி செல்வராஜ், ஏஆர் ரஹ்மான், உதயநிதி, ஃபஹத் பாசில், வடிவேலு என தரமான கூட்டணியில் உருவாகும் மாமன்னன், தமிழ் சினிமாவில் அரிதான படைப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ஒரு பட விழாவில் பேசிய மாரி செல்வராஜ், வடிவேலு இல்லையென்றால் மாமன்னன் படத்தை எடுத்திருக்க மாட்டேன் என்றார்.
இந்தப் படத்தின் கதையை எழுதும் போதே, மாமன்னன் கேரக்டரில் வடிவேலுவை நினைத்து தான் எழுதினேன். மேலும், உதயநிதியிடமும் இதுகுறித்து சொன்னபிறகே மாமன்னன் உருவானது எனக் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே மாமன்னன் குறித்து பேசியிருந்த உதயநிதியும், வடிவேலு தான் இப்படத்தின் நாயகன் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் பிஸியாக இருக்கும் மாரி செல்வராஜ், விரைவில் மாமன்னன் ஃபர்ஸ்ட் சிங்கிள், டீசரை வெளியிட திட்டமிட்டுள்ளாராம். அதேபோல், போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை முடித்துவிட்டு ரிலீஸ் தேதியையும் அறிவிக்கவுள்ளாராம். அதன்படி, மாமன்னன் திரைப்படம் ஜூன் 29ம் தேதி வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.
இதனிடையே மாமன்னன் படத்தின் ஓடிடி ரைட்ஸை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாம். அதன்படி மாமன்னன் ஓடிடி ரைட்ஸ் மொத்தம் ரூ. 23 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுதான் உதயநிதியின் கேரியரில் அதிக விலைக்கு விற்பனையான படம் எனக் கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் ஜூன் 29ம் தேதி சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படமும் வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











