Maamannan: மாமன்னன் சாதி படம்... அதில் உதயநிதி நடித்திருக்கக் கூடாது... வெடித்துச் சிதறிய பேரரசு!
சென்னை: உதயநிதி நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் ஜூன் 29ம் தேதி வெளியானது.
வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரும் இப்படத்தில் முக்கியமான பாத்திரங்களில் நடித்திருந்தனர்.
ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற மாமன்னன், இப்போது ஓடிடி தளத்திலும் ட்ரெண்டிங்கில் உள்ளது.
இந்நிலையில், மாமன்னன் சாதி படம் என்றும், அதில் உதயநிதி நடித்திருக்கக் கூடாது எனவும் இயக்குநர் பேரரசு விமர்சனம் செய்துள்ளார்.

மாமன்னன் படத்தில் உதயநிதி நடித்திருக்கக் கூடாது:பரியேறும் பெருமாள், கர்ணனைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கிய மூன்றாவது படம் மாமன்னன். உதயநிதியின் கடைசி படமாகவும், வடிவேலுவுக்கு கம்பேக் கொடுக்கும் வகையிலும் உருவானது மாமன்னன். ரெட் ஜெயன்ட் தயாரிப்பில் ஜூன் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியான மாமன்னன் படத்துக்கு பாசிட்டிவான விமர்சனங்களே கிடைத்தன.
சமூக நீதியை பின்னணியாக வைத்து வழக்கமாக தனது அடையாள அரசியலை அழுத்தமாக பேசியிருந்தார் மாரி செல்வராஜ். சரிக்கு சமமாக உட்காருவதில் கூட இங்கு அரசியலும் அதிகாரமும் எந்தளவுக்கு ஆதிக்கம் செலுத்துகிறது என வெளிப்படையாக காட்சிப்படுத்தியிருந்தார். மாரி செல்வராஜ்ஜின் இந்த அரசியல் மக்களிடம் கவனம் ஈர்த்திருந்தது.
ஆனாலும் ஃபஹத் பாசிலின் ரத்னவேலுவின் கேரக்டர் நேரடியாக குறிப்பிட்ட ஒரு சாதியை அடையாளப்படுத்துவதாக விமர்சனங்கள் எழுந்தன. இன்னொரு பக்கம் கடந்த சில தினங்களாக மாமன்னன் படத்தின் ஃபஹத் பாசில் கேரக்டரை பல சாதிய அடையாளத்தோடு சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வந்தனர் நெட்டிசன்கள். இது தவறான முன்னுதாரணம் என சினிமா ஆர்வலர்கள் விமர்சனம் செய்திருந்தனர்.
இந்நிலையில் மாமன்னன் படத்தில் உதயநிதி நடித்திருக்கக் கூடாது என இயக்குநர் பேரரசு கடுமையாக விமர்சித்துள்ளார். மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில், கமல்ஹாசனை வைத்துக்கொண்டே தேவர் மகன் படத்தை விமர்சித்திருந்தார் மாரி செல்வராஜ். அதனை குறிப்பிட்டுள்ள பேரரசு, தேவர் மகன் படம் பற்றி கமல் முன்பே பேசினார் மாரி செல்வராஜ். அதுமட்டும் இல்லாமல் அந்தச் சமூகத்திற்குள் என் அப்பா இருந்தால் எப்படி இருக்கும் என்பது தான் இந்தப் படம் எனக் கூறினார்.

அதனால் இந்த படத்தில் வில்லனாக காட்டப்பட்டது தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர் தான் என்பதை மாரி செல்வராஜ்ஜே நேரடியாக சொல்லிவிட்டார். அவர் அப்படி பேசாமல் இருந்திருந்தால் ஃபஹத் பாசிலின் ரத்னவேல் கேரக்டர் என்ன ஜாதி என்பதே யாருக்கும் தெரிந்திருக்காது. அதேபோல், உதயநிதி அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால் அவரது கேரக்டர் என்ன ஜாதி என சொல்லி இருக்கலாம். அமைச்சராக இருக்கும் அவருக்கு அனைத்து ஜாதியினரும் ஓட்டுப் போட்டுள்ளனர். அதனால் உதயநிதி இந்த மாதிரி ஜாதி படத்தில் நடித்தது ரொம்பவே தவறானது என பேரரசு விமர்சித்துள்ளார்.
முன்னதாக மாமன்னன் வெளியான போது, உதயநிதி சமூக நீதி அரசியல் பேசும் படங்களில் நடிப்பது வரவேற்புக்குரியது என பலரும் அவருக்கு பாராட்டுத் தெரிவித்து இருந்தனர். ஆனால், இயக்குநர் பேரரசு தற்போது வித்தியாசமாக கருத்துத் தெரிவித்திருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











