திரையுலகை காக்க வேண்டும்.. மாநாடு தயாரிப்பாளர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் !
சென்னை : சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் மாநாடு. இத்திரைப்படம் 25ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.
தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் தான் திரையரங்கில் அனுமதி என்ற தமிழக அரசின் உத்தரவால் , திரைத்துறை பெரிதும் பாதிக்கப்படும் என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

திரைத்துறை நலிந்துவிட்டது
திரைத்துறை வெகுநாட்களாக நலிந்துவிட்டது. படங்களை வீட்டிலிருந்தே பார்க்கும் முறை பிறந்ததிலிருந்து திரையரங்கங்கள் வெறிச்சோடத் துவங்கிவிட்டன. அதிலிருந்து மீண்டுவர பெரிய படங்களே உதவுகின்றன. அண்ணாத்த மக்களை திரையரங்கிற்கு வரவைத்தது. 50 விழுக்காடு இருக்கை ஆக்ரமிப்பு என்ற நிலையை மாற்றி 100 சதவீத இருக்கை ஆக்ரமிப்பை தந்தது திரைத் துறையினருக்கு நெஞ்சில் பால் வார்த்தது. அனைவரும் தங்களின் அனுமதியை தொழில் செய்யும் வெகுமதியாகப் பார்த்தோம் நன்றியோடு!

திரைத்துறை அதிர்ச்சி
ஆனால், இப்போது வேக்சினேசன் செலுத்தினால் மட்டுமே திரையரங்கிற்குள் அனுமதி என்பது அத்தனை திரைத்துறையினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுக்க தடுப்பூசி இன்னும் கட்டாயமாக்கப்படவில்லை. பதினெட்டு வயதிற்கு கீழே உள்ளவர்களுக்கு இன்னும் தடுப்பூசியே கண்டுபிடிக்கவில்லை. அவர்கள் பள்ளிகளிலும் பொது இடங்களிலும் சென்று வர அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

வெகுவாக பாதிக்கும்
உங்கள் ஆட்சியில் வேக்சின் சிறப்பாகவே நடைபெற்று வருகிறது. நோய் தொற்றும் கட்டுக்குள் வந்துள்ளது முகக்கவசம் சானிடைசர் போன்றவற்றால் தங்களை பாதுகாத்து வருகின்றனர் மக்கள். தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே திரையரங்குகளில் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவு திரைத்துறையை வெகுவாக பாதிக்கும்.

மீண்டும் வரமாட்டார்கள்
ஆண்ட்ராய்டு போன் இல்லாதவர்கள் கூட படத்திற்கு வருவார்கள் அவர்களை சர்டிபிகேட் எடுத்து வரச்சொன்னால் திரையரங்கம் வருவதை அவர்கள் தவிர்ப்பார்கள், அதுவும் திரையரங்கம் வந்து திருப்பி அனுப்பினால், அவர்கள் மீண்டும் திரையரங்கு பக்கமே வரமாட்டார்கள்.

திரையுலகை காக்க வேண்டும்
தயவுகூர்ந்து 18 வயதுக்கு கீழே உள்ளவர்கள் அனுமதிக்கப்படுவது போல விரைவில் தடுப்பூசி போட இருப்பவர்களையும் அனுமதித்து திரைத்துறையை வாழ வைக்க வேண்டுகிறோம். விரைந்து முடிவெடுத்து நம் திரையுலகையும் திரையரங்க அதிபர்களையும் காக்க வேண்டும் என அந்த கடிதத்தில் சுரேஷ் காமாட்சி எழுதி உள்ளார்.


Click it and Unblock the Notifications