Maaveeran: மீம் போட சுதந்திரம் இல்லையா... மாவீரன் தயாரிப்பாளரை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்
சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படம் வரும் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
மடோன் அஸ்வின் இயக்கியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.
மாவீரனை கலாய்த்து டிவீட் செய்திருந்த ப்ளூ சட்டை மாறனிடம் தனது வேதனையை பதிவு செய்திருந்தார் படத்தின் தயாரிப்பாளர்.
அதற்கு ப்ளூ சட்டை மாறன் அதிரடியாக கமெண்ட்ஸ் அடித்து மாவீரன் பட தயாரிப்பாளரை கலாய்த்துள்ளார்.

மீம் போட கருத்துச் சுதந்திரம் வேண்டும்:சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படம் அடுத்த வாரம் 14ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகிறது. தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை மடோன் அஸ்வின் இயக்கியுள்ளார். சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் அருண் விஸ்வா என்பவர் மாவீரன் படத்தை தயாரித்துள்ளார்.
மாவீரன் படத்தின் ட்ரெய்லர் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. சிவகார்த்திகேயனுக்கு கம்பேக் கொடுக்கும் படமாக மாவீரன் இருக்கும் என சினிமா விமர்சகர்களும் கூறி வருகின்றனர். சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கரும், வில்லனாக இயக்குநர் மிஷ்கினும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இத்திரைப்படத்தை கலாய்த்து டிவீட் செய்திருந்தார் ப்ளு சட்டை மாறன்.
அதில், "மாவீரன் இம்மாதம் 14 அன்று வெளியாகும் நிலையில், 12ம் தேதி டாம் க்ரூஸ் நடித்த Mission Impossible வெளியாகிறது. முதல் நாளுக்கான IMAX முன்பதிவு நிரம்பி வருகிறது. 'குறுக்க இந்த கௌஷிக் வந்தா?' மொமன்ட்" என தனது டிவிட்டரில் மாவீரன் படத்தை கலாய்த்து போஸ்ட் போட்டிருந்தார். இதனை பார்த்த மாவீரன் தயாரிப்பாளர் அருண் விஸ்வா, டிவிட்டரில் ப்ளூ சட்டை மாறனிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
அருண் விஸ்வா தனது டிவிட்டரில், "நான் தான் மாவீரன் படத்தின் தயாரிப்பாளர். எனக்கு என் படம் தான் மிஷன் இம்பாசிபிள், அவதார், ஆர்.ஆர்.ஆர் எல்லாமே. உங்க வயசுக்கு இப்படி ஒரு டிவிட்டர் போஸ்ட் பண்ணிருக்க வேண்டாம் சார்" என மிக தன்மையாக பதிவிட்டிருந்தார். இதன் மூலம் படம் வெளியாகும் நேரத்தில் நெகட்டிவான ட்ரோல் வேண்டாம் என்பதை தயாரிப்பாளர் வேண்டுகோளாக வைத்திருந்தார்.
மாவீரன் தயாரிப்பாளர் அருண் விஸ்வாவுக்கு தற்போது பதிலடி கொடுத்து டிவீட் செய்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். அதில், "சாதாரண மீம் போடக்கூட கருத்து சுதந்திரம் இல்லையா?" என கேட்டுள்ளார். எல்லா படங்களையும் கலாய்த்து வரும் ப்ளூ சட்டை மாறனுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதேபோல் அவரால் நிம்மதியிழந்த பல சினிமா பிரபலங்களும் உண்டு. அந்த லிஸ்ட்டில் மாவீரன் பட தயாரிப்பாளரும் தற்போது இணைந்துள்ளார்.

இதனிடையே ப்ளூ சட்டை மாறன் டிவிட்டரில் கமெண்ட் செய்துள்ள ரசிகர் ஒருவர், "அதான் புரொடியூசரே கொஞ்சம் கெஞ்சி கேட்கிறார் இல்ல கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க. ஒரு வாரம் கழிச்சு உங்க விமர்சனம் எல்லாம் போடுங்க. அட்லீஸ்ட் ஒரு ரெண்டு நாள் கழிச்சு உங்க விமர்சனத்தை போடுங்க" என பதிவிட்டுள்ளார். அதற்கும் பதிலடி கொடுத்துள்ள ப்ளூ சட்டை மாறன், "ஹோட்டல்ல சோறு நல்லா இல்லன்னா மூணு நாள் கழிச்சி கேள்வி கேப்பீங்களா? உடனே கேப்பீங்களா?" என ட்வீட் செய்துள்ளார்.
ப்ளூ சட்டை மாறனின் இந்த டிவிட்டர் பதிவின் கீழ், ஏராளமான சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அவருக்கு எதிராக கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். இன்னொரு பக்கம் மாவீரன் படத்தில் வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ள அந்த டாப் ஹீரோ யார் என்பது ரசிகர்கள் மத்தியில் விவாதமாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











