twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    யார் இந்த 'கிட்டு'?.. ஏன் அவன் 'மாவீரன்'?

    By Shankar
    |

    சாதிப் படம் என்பது வேறு, சாதிய வேறுபாடுகளைப் பற்றி பேசும் படம் என்பது வேறு. இரண்டுக்குமான வேறுபாடுகளைப் புரிந்துகொள்வதும், ஏற்றுக் கொள்வதும் அவ்வளவு எளிதானதல்ல. சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளை, பண்பாடு மற்றும் கலாச்சார பரிமாணங்களை, வரலாற்று உண்மைகளை, கலை மட்டுமே, அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்த முடியும்.

    மாவீரன் கிட்டு, இவை அனைத்தும் கலந்த ஒரு யதார்த்தமான படமாக இருக்கிறது, இயக்குநர் சுசீந்திரன், மற்றும் தயாரிப்பாளர்கள் ஐஸ்வியர் சந்திராசாமி, டி.என்.தாய்சரவணன் மற்றும் ராஜிவன் ஆகியோருக்கு சிறப்பு வாழ்த்துகள். அதோடு பார்த்தீபன், விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா, ஹரீஷ் உத்தமன், நாகி நீடு, கயல் பெரேரா உள்ளிட்ட நடிகர், நடிகையர்... ஒளிப்பதிவாளர் ஏ.ஆர்.சூர்யா, எடிட்டர் காசி விஸ்வநாதன், இசையமைப்பாளர் டி.இமான், வசன ஆசிரியர் மற்றும் பாடலாசிரியர் யுகபாரதி... உள்ளிட்டதொழில்நுட்ப கலைஞர்கள் அத்தனை பேருக்கும் வாழ்த்துகள். இன்னும் பல காலத்திற்கு பேசப்படப்போகிற ஒரு படத்தில் அங்கமாக இருந்தமைக்காக இந்த வாழ்த்துகள்.

    Maaveeran Kittu.. On a reader's view

    1980களில் நடக்கிற ஒரு கதை. இரண்டு சாதிகள். வழக்கம்போல ஒன்று உயர்ந்ததென்றும் ஒன்று தாழ்ந்ததென்றும் சொல்லிக்கொள்ளப்படும் இரண்டு சாதிகள். மேலானதென எண்ணும் சாதியினர் தொடர்ந்து தங்கள் ஆதிக்கத்தை தக்கவைத்துக்கொள்ள செய்யும் செயல்களும், ஆதிக்கத்தை கேள்வி கேட்கிற, எதிர்த்து நிற்கிற, திருப்பி அடிக்கத் தயாராகிற தாழ்த்தப்பட்டவர்களின் எதிர்வினைகளும்... கொஞ்சமாய் அதற்குள் காதலும்.... சேர்ந்ததே மாவீரன் கிட்டு.

    சாதிப் படங்களை விட்டு விடுவோம். சாதிய வேறுபாடுகளை பற்றி பேசிய படங்களில் சினிமாத்தனம் இல்லாமல், உண்மைக்கு மிக அருகில் நிற்கிற படமாக மாவீரன் கிட்டு, கவனத்தை ஈர்க்கிறது.

    படத்தின் கதை கொஞ்சம் கொஞ்சமாக நகர்கையில், சமீபத்திய தமிழகத்தின் சாதிய நிகழ்வுகள் அத்தனையும் உங்கள் நினைவுகளுக்குள் வந்து போகுமாறு திரைக்கதை அமைத்திருப்பது, சசீந்திரனின் புத்திசாலித்தனம். பொறுப்பும் கூட.

    காவல் துறையினரே, தாழ்த்தப்பட்டவர்களின் பிணத்தை தூக்கிச் சென்ற நிகழ்வு முதல், தண்டவாளத்திலும் கோயிலிலும் சாதியின் பெயரால் கொலை செய்யப்பட்டவர்களின் நினைவும், கலவரத்தைப் பயன்படுத்தி என்கவுண்டர் செய்யப்பட்டவர்களின் நிலையும்... இன்னும் பலப்பல உங்கள் நினைவுகளுக்குள் வந்து போகும்.

    மாவீரன் கிட்டு, படத்திற்குள் கிட்டுவின் முன்னோடியாகவும் தலைவனாகவும் இருக்கிற மாவீரன், சின்ராசு (இராதாகிருஷ்ணன் பார்த்திபன்) வாயில் இருந்து புறப்படும் அத்தனை வார்த்தைகளும் ஆயுதங்களைக் கூர் மழுங்கச்செய்கிற வலிமை படைத்தவை.

    மாவீரன் கிட்டு, படத்தின் வசனம் கவிஞர் யுகபாரதி. வசனங்கள் ஒவ்வொன்றிலும் தீப்பொறி பறக்கிறது.

    "காலங்காலமா அடிவாங்கிட்டிருந்தவன், திமிறி திருப்பி அடிச்சான்னா திமிருங்கிறாங்க", இந்த ஒரு வசனம் போதும், பிற வசனங்கள் மீதான உங்கள் எதிர்பார்ப்பை அதிகப்படுத்த இந்த ஒரு வசனம் போதும்...

    உயர்சாதி மனநிலையில் இருப்பவர்கள், என்ன வார்த்தை பேசுவார்கள் என்பதையும், காலங்காலமாக கோபத்தோடு இருப்பவர்கள் என்ன பேசுவார்கள் என்பதையும் அவரவர் உளவியலோடு கலந்து சமரசமில்லாமல் எழுதி இருக்கிறது, யுகபாரதியின் பேனா.

    பார்த்திபனிடம், தெருவில் இறங்கி கூட்டமாக போராடுவது சட்டவிரோதம் என எச்சரிக்கையில், "இதை சட்ட விரோதம்னு சொல்றீங்க, ஆனா, சட்டமே எங்களுக்கு விரோதமா இருந்தா, நாங்க என்ன செய்யமுடியும்", "ஓட்டுப்போடுறதைத் தவிர நமக்கென்ன உரிமை இருக்கு", "விட்டுக்கொடுத்து போகச் சொல்றீங்க. விட்டுகிட்டேதான் இருக்கோம், அவங்க எப்போ கொடுப்பாங்கனு தெரியலை" என கருப்புச்சட்டை பார்த்தீபன் ஒவ்வொரு முறை கொந்தளிக்கும்போதும், யுகபாரதியின் எழுத்து வீச்சு வாள் வீச்சை பின் தள்ளுகிறது.

    கல்வி, பொருளாதாரம், அதிகாரம்... எதிலும் தாழ்த்தப்பட்டவர்கள் மேலே வந்துவிடக்கூடாது என்பதற்காக காலங்காலமாக நடக்கிற, உயர்சாதி வர்க்கத்தின் அரசியலை, அதற்காக தன் சொந்த சாதியின் உயிர்களைக்கூட துச்சமாக எண்ணுகிற, மனோபாவத்தை, எந்த வீதமான பூச்சும் இல்லாமல் போகிற போக்கில் சொல்லிப்போகிறார், சுசீந்திரன்.

    "அதிகாரம் என்பதே தவறென்கிறோம், நாங்கள்" என்ற பார்த்தீபனின் வசனம், "சோத்துக்கு இல்லாதவனெல்லாம் சோசியலிஸம் பேசுறானுங்க" என்கிற சாதித் தலைவர் நாகி நீடுவின் வசனம்...

    "உங்க அப்பாவும் அம்மாவும் எங்க வீட்டுல கூலிக்கு வேலை செஞ்சவங்க, நாங்க போட்ட சோத்துல தான், நீ இப்போ உயிரோட என் முன்னாடி நின்னு பேசிட்டிருக்க", இது உயர்சாதி மனநிலையோடு பேசும் உள்ளூர் சாதி தலைவர் நாகி நீடுவின் மகனாகவும் அதே பகுதியில் இன்ஸ்பெக்டராகவும் இருக்கும், செல்வராஜ் என்கிற ஹரீஷ் உத்தமனின் வசனம்.

    "நீ இப்போ நாங்க கொடுக்கிற கூலில தான் சோறு சாப்பிட்டிட்ருக்க, அதாவது எங்களுக்கு சேவை செய்ய தான் கவர்ன்மெண்ட் உனக்கு சம்பளம் கொடுக்குது. பப்ளிக் சர்வன்ட்.. எப்டி தெரியுமா? எங்க கூலியில இருந்து நாங்க கொடுக்கிற வரிப் பணத்துல"... இது போராளியாக சித்தரிக்கப்பட்டிருக்கும் சின்ராசு பார்த்தீபனின் பதில் வசனம்.

    இப்படி படம் நெடுகிலும் வசனங்கள் வாள் வீசுகின்றன.

    சாதிய வேறுபாடுகள் பற்றி பேசுகிற படம் என்கிற வகையிலும், யுகபாரதியின் அனல் பறக்கும் வசனங்கள்... படம் நெடுகிலும் நெருப்பாய் கொதிப்பதாலும், "மாவீரன் கிட்டு" படத்தை "கபாலி" படத்தோடு ஒப்பிட்டு பேசுவதும், இணைத்து பேசுவதும் சில இடங்களில் நிகழலாம். அதோடு பா.இரஞ்சித்தோடு சுசீந்திரனை ஒப்பிட்டு அல்லது இணைத்துப் பேசுவதும் கூட நிகழலாம்.

    கதாநாயகர்கள் என்றால் படத்தின் இறுதியில், நெஞ்சு நிமிர்த்தி, கம்பீரமாக ஜெயிக்க வேண்டும்... அவன்தான் வீரன், அதுவே வீரம் என்ற இலக்கணங்களை உடைக்க முற்படுகிறது, மாவீரன் கிட்டு. ஏனெனில் தன் மக்களுக்காக தன்னையே தியாகம் செய்வதும் வீரம்தான் என்பதை முன்னிலைப்படுத்துகிறது, மாவீரன் கிட்டு. தன் மக்களுக்காக, கல்வி கற்று கலெக்டராக வேண்டும் கனவோடு இருக்கிற, சராசரி இளைஞன் கிருஷ்ணகுமார்... அதே மக்களுக்காக தன்னை தியாகம் செய்வதின் மூலமாக மாவீரன் ஆகிறான் என்கிறது கதை.

    நீண்ட நெடுங்காலமாக சினிமாவை சினிமாத்தனமாகவே பார்த்து பழக்கப்பட்ட நமக்கு, யதார்த்தங்களை ஏற்றுக்கொள்வது சிரமமாகவே இருக்கும். படம் பார்க்கும் ரசனையை மாற்ற முயற்சி செய்யும் படங்களின் பட்டியலில், கண்டிப்பாக மாவீரன் கிட்டு, படத்திற்கும் ஒரு சிறப்பிடம் உண்டு.

    வசனத்தில் மட்டுமல்லாது, பாடல்களிலும் அதிர வைக்கிறார், யுகபாரதி. அதிலும், "ஒன்ன... ஒன்ன..." பாடலின் வரிகளுக்குள் மகிழ்ச்சியும் அதிர்ச்சியும் கலந்து கிடக்கிறது.

    அரசியலையும் சட்டங்களையும் அதன் வழியில் சென்றுதான் வழிக்கு கொண்டு வரவேண்டும், என்கிற கற்பித்தலை நிகழ்த்தி, அதற்கு ஒன்று சேர்ந்து போராட வேண்டும்.. என்கிற யதார்த்தத்தை மிக எளிமையாக மாவீரன் கிட்டு போல எந்த படமும் பதிவு செய்யவில்லை.

    சசீந்திரனின் திரைக்கதைகள், எப்போதுமே அதிவேக பாய்ச்சலின் மீது அவ்வளவாக விருப்பமற்றவையாகவே இருக்கும். அவ்வப்போது வந்து போகும் பரபரப்புகள் படபடப்புகள் தாண்டி... படம் முடிகையில் நிதர்சனமாக அல்லது.... மித வேகத்தில் யதார்த்தமாகத்தான் முடியும். மாவீரன் கிட்டு படமும் அப்படியே... திரைக்கதையோடு தீவிரமாக ஒன்றிப் பயணிப்பவர்களுக்கு, அடுத்தடுத்து வரும் காதல் பாடல்கள் கொஞ்சம் கடுப்பேத்தும் விசயமாகவே இருக்கும். அதோடு குறைகளையோ நிறைகளையோ பெரிதுபடுத்துவது இந்தக்கட்டுரையின் நோக்கம் அல்ல. ஏனெனில், இப்போதுதான் விளிம்பு நிலை மக்கள், ஆதித் தமிழர்களின் கதைகளை, உள்ளது உள்ளபடியே சினிமாத்தனம் இல்லாமல் உண்மையாக படமாக்கும் நிலைக்கு தமிழ் சினிமா வந்திருக்கிறது என்கிற உண்மைக் காரணம்.

    சாதிய வேறுபாடுகள் சமூக ஊடகங்களுக்கு தன்னை அப்டேட் செய்து கொண்டிருக்கிற காலத்தில் வாழ்பவர்களுக்கு... சாதிய வேறுபாடுகள் எங்கும் இல்லை என்பதான பொதுப்புரிதல் இருக்கிறது. அது அப்படியே உண்மையல்ல என்று இந்த தலைமுறைக்கு சொல்லித்தான் ஆக வேண்டும். குறைந்தபட்சம்... தீண்டாமை என்றால் என்ன என்பதையாவது.

    சமீபகாலமாக இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கரை அவ்வப்போது தங்கள் வசதிக்காக அரசியல்வாதிகள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அதுபோலவே, அவர் இயற்றிய சட்டங்களில் தங்களுக்கு சாதகமானவற்றை முன்னிறுத்தி, நாங்கள் அம்பேத்கர் சொல்வதையே பின்பற்றுகிறோம் என்று நாடகமாடுகிறார்கள். அம்பேத்கர் சொன்னதை பின்பற்றுவதென்றால், அவர் சொன்னதை முழுமையாக பின்பற்றவேண்டும், செயல்படுத்தவேண்டும். அப்படி ஒன்று நடக்காமல், இந்த நாடகங்கள் நீடிக்கும் வரை... மாவீரன் கிட்டுகள் சமூகத்திற்கு அவசியமே. கலைத்துறைக்கும் அவசியமே.

    ஏன் எனில்... கிருஷ்ணகுமார் என்கிற மாணவன், மாவீரன் கிட்டுவாக மாறவேண்டிய அவசியத்தின் காரணங்கள்...

    பொது வழியில் பிணம் எடுத்துச்செல்லும் உரிமை...

    பேருந்துகள் தங்கள் ஊரில் நின்று செல்ல வேண்டும் என்ற வேண்டுகோள்...
    பள்ளிக்கூட வசதி...

    இப்படி மிக மிக எளிமையானவை... அதைவிட நியாயமானவை.

    சாதிய வேறுபாடுகள் பற்றி பேசுகிற படம் என்பதற்காக ஆவணப்படம் போல இல்லாமல், பொழுதுபோக்கு படமாகவும் திருப்தி தருகிறது, மாவீரன் கிட்டு. சூரியை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை, விஷ்ணு விஷாலின் கதாபாத்திரம்... மென்மையாக இருக்கிறது, இடைவேளைக்கு பின் வரும் கதையின் பரபரப்பை குறைப்பது போல, அடுத்தடுத்து வரும் காதல் பாடல்கள் இருக்கிறது என்பது போன்ற குறைகளைத் தவிர்த்து... மிக இயல்பான பொழுதுபோக்கு படமாக இருக்கிறது, மாவீரன் கிட்டு.

    எளிமையாகவும் நேர்த்தியாகவும் நடுநிலையாகவும் கதை சொன்ன வகையில், சுசீந்திரனும் மாவீரன் கிட்டு படக் குழுவினரும், நிமிர்ந்து நிற்கிறார்கள். தமிழ் சினிமா வரலாற்றில், "மாவீரன் கிட்டு" நிமிர்ந்து நிற்பான்.

    - முருகன் மந்திரம்

    English summary
    Lyricist Murugan Manthiram's review on Suseenthiran's Maaveeran Kittu movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X