Maayavalai: மீண்டும் அமீருக்காக இணையும் பருத்திவீரன் கேங்... மாயவலை டீசர் ரிலீஸில் தரமான சம்பவம்
சென்னை: முன்னணி இயக்குநர்களில் ஒருவரான அமீர், தற்போது மாயவலை படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் ரிலீஸ் குறித்து படக்குழு அப்டேட் வெளியிட்டுள்ளது.

மாயவலை டீசர் ரிலீஸ் அப்டேட்
மெளனம் பேசியதே திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அமீர். சூர்யா, த்ரிஷா நடித்த இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து ராம், பருத்திவீரன், ஆதிபகவன் ஆகிய படங்களை இயக்கினார். இதில் பருத்திவீரன் திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது.
அதேநேரம் பருத்திவீரன் படத்தால் அமீர் - ஞானவேல்ராஜா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. 16 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பருத்திவீரன் பஞ்சாயத்துக்கு இதுவரை முடிவு கிடைக்கவில்லை. கடந்த சில தினங்களாக இந்தப் பிரச்சினை இன்னும் விஸ்வரூபம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல், இந்த விவகாரத்தில் அமீருக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அமீர் குறித்து ஞானவேல்ராஜா ஆணவமாக பேசியதற்கு, சசிகுமார், சமுத்திரகனி, கரு பழனியப்பன், சேரன், சினேகனஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதே பருத்திவீரன் கேங் தற்போது மீண்டும் அமீருக்காக இணைந்துள்ளது. இவர்களுடன் இயக்குநர் வெற்றிமாறனும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. யோகி படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார் அமீர்.
அதன்பின்னர் வெற்றிமாறனின் வடசென்னை படத்தில் நடித்திருந்தார். வடசென்னை ராஜன் கேரக்டர் அமீருக்கு சூப்பரான அடையாளமாகிப் போனது. இதனைத் தொடர்ந்து அமீர் நடித்துள்ள திரைப்படம் மாயவலை. ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஆர்யாவின் தம்பி சத்யா, சஞ்சிதா ஷெட்டி ஆகியோரும் அமீருடன் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் டீசர் வரும் 5ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகிறது. இதனை, வெற்றிமாறன், கரு பழனியப்பன், சேரன், சசிகுமார், சமுத்திரகனி, சினேகன் ஆகியோர் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனால் மாயவலை டீசர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மாயவலையை தொடர்ந்து வாடிவாசல் படத்திலும் நடிக்கவுள்ளார் அமீர்.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்கும் வாடிவாசல் படத்தில், அமீருக்கு மிக முக்கியமான கேரக்டர் என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











