நிலையற்ற வாழ்க்கை.. மாயி பட இயக்குனர் மரணம்.. சரத்குமார் வேதனை!
சென்னை: மாயி, திவான் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குநர் சூர்ய பிரகாஷ் இன்று மாரடைப்பு காரணமாக காலமானார். இந்த மரணச் செய்திதிரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், நடிகர் சரத்குமார் தனது இரங்கலை எக்ஸ் தள பக்கத்தில், நிலையற்ற வாழ்வில் அவரது எதிர்பாராத மறைவு என்னை பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது என பதிவிட்டுள்ளார்.
இயக்குநரான சூர்ய பிரகாஷ் ராஜ்கிரண், வனிதா விஜயகுமார் நடித்த மாணிக்கம் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகம் ஆனார். அந்த படம் சுமாரான வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, சரத்குமார், மீனா, வடிவேலு நடித்த மாயி படத்தை இயக்கினார். இந்த படம் திரையரங்கில் பல நாட்கள் ஓடி வசூலை குவிந்தது. மாயி படத்திற்கு வரவேற்பு இருந்த போதும், மூன்று ஆண்டுகள் தமிழில் படம் எதுவும் இயக்காமல் இருந்த சூர்ய பிரகாஷ், மீண்டும் சரத்குமாரை வைத்து திவான் படத்தை இயக்கினார்.இந்த படம் தோல்வித் திரைப்படமாக அமைந்தது.

வருசநாடு: தமிழில் பட வாய்ப்பு இல்லாததால், டோலிவுட் சென்ற இவர், பரத சிம்ஹா ரெட்டி என்ற தெலுங்கு படத்தில் பணியாற்றினார். பின், கிராமத்தை மையமாகக் கொண்ட காதல் திரைப்படமான வருசநாடு படத்தை இயக்கிநார் பணியாற்றினார். இந்த படம் தனது உறவினரின் நிஜ வாழ்க்கை காதலை அடிப்படையாகக் கொண்டது என்றும், படத்தில் புதுமுகங்களான குமரன் மற்றும் ஸ்ருஷ்டி டாங்கே நடித்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார் . படம் இன்னும் திரையரங்குகளில் வெளியாகவில்லை.
நிலையற்ற வாழ்க்கை: 2015க்கு பிறகு திட்டத்தட்ட பத்து ஆண்டுக்கும் மேலாக படங்களை இயக்காமல் சினிமாவை விட்டு விலகி இருந்த இயக்குநர் சூர்ய பிரகாஷ் இன்று மாரடைப்பு காரணமாக காலமானார். இவரது மறைவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ள நிலையில், நடிகர் சரத்குமார் தனது எக்ஸ் தள பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், எனது நடிப்பில் வெளியான மாயி, திவான் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய எனது அருமை நண்பர் சூர்யபிரகாஷ் அவர்கள் இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
ஆழ்ந்த இரங்கல்: நேற்றைய தினம் கூட அவருடன் பேசிக் கொண்டிருந்த நிலையில், நிலையற்ற வாழ்வில் அவரது எதிர்பாராத மறைவு என்னை பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது. அவரைப் பிரிந்து வேதனையில் வாடும் அவரது குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார். மேலும் பல திரைப்பிரபலங்களும் இவரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











