மத கஜ ராஜா பொங்கல் வேட்டை.. 4 நாட்களில் இத்தனை கோடியா?.. படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?
சென்னை: கடைசியாக விஷாலுக்கு ஆதிக் ரவிச்சந்திரன் தான் பல வருடங்கள் கழித்து பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை மார்க் ஆண்டனி படத்தின் மூலம் கொடுத்தார். அந்த படம் 100 கோடி வரை வசூல் ஈட்டியது. கடந்த ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ரத்னம் படம் படுதோல்வியை சந்திக்க மீண்டும் விஷால் குறித்த ட்ரோல்கள் வலம் வந்தன. பிரியா பவானி சங்கர் ராசி சரியில்லை என்று அவரையும் அசிங்கப்படுத்தினர்.
இந்நிலையில், இந்த ஆண்டு பொங்கலுக்கு விஷால் நடிப்பில் 12 ஆண்டுகள் வெளியாகாமல் காத்திருந்த மத கஜ ராஜா படம் வெளியான நிலையில், பொங்கல் வசூல் வேட்டையை மற்ற புதிய படங்களை விட இந்த பழைய படம் வாரி குவித்துள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பாலாவின் வணங்கான், ஷங்கரின் கேம் சேஞ்சர், கிருத்திகா உதயநிதியின் காதலிக்க நேரமில்லை மற்றும் விஷ்ணுவர்தனின் நேசிப்பாயா உள்ளிட்ட படங்கள் பல கோடி போட்டு எடுக்கப்பட்ட நிலையிலும், மத கஜ ராஜா அந்த படங்களை விட அதிக வசூலை அள்ளி வருகிறது.
மத கஜ ராஜா பட்ஜெட்: 12 ஆண்டுகளுக்கு முன்பே இயக்குநர் சுந்தர். சி ஒரு தரமான பட்ஜெட்டில் நல்ல பிரம்மாண்ட படமாகவே மத கஜ ராஜா படத்தை எடுத்திருக்கிறார். 16 கோடி ரூபாய் செலவு செய்து எடுக்கப்பட்ட இந்த படம் தற்போது மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி வருவதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. மற்ற படங்களை தூக்கி விட்டு தியேட்டர் ஓனர்கள் மத கஜ ராஜா படத்துக்கு மெயின் ஸ்க்ரீன்களையும் அதிக எண்ணிக்கையிலான காட்சிகளையும் ஒதுக்கி வருவதாக கூறுகின்றனர்.

4 நாட்கள் வசூல்: ஜனவரி 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெளியான மத கஜ ராஜா திரைப்படம் முதல் நாளிலேயே 3 கோடி ரூபாய் வசூலுடன் நல்ல ஓபனிங் கொடுத்த நிலையில், திங்கட்கிழமை 3.5 கோடி வசூல் செய்தது. பொங்கல் பண்டிகையன்று 6.2 கோடி ரூபாய் வசூல் செய்த மத கஜ ராஜா மாட்டுப் பொங்கலுக்கும் 6.8 கோடி ரூபாய் வரை வசூல் செய்து ஒட்டுமொத்தமாக 20 கோடி ரூபாய் வரை வசூல் வேட்டையை நான்கு நாட்களில் நடத்தியிருப்பதாக கூறுகின்றனர்.
50 கோடியை கடக்கும்: கண்டிப்பாக இந்த படம் லைஃப் டைம் வசூலாக 50 கோடி ரூபாயை கடக்கும் என்றும் பெரிதாக எந்த படமும் போட்டி இல்லாத நிலையில், விஷாலுக்கு ஜாக்பாட் உறுதி என்கின்றனர். ரவி மோகனின் காதலிக்க நேரமில்லை, நேசிப்பாயா உள்ளிட்ட படங்கள் மக்களை பெரிதாக திருப்திப்படுத்தாத நிலையில், மத கஜ ராஜா பொங்கல் வின்னராக மாறியுள்ளது. சியான் விக்ரமின் வீர தீர சூரன், அஜித்தின் விடாமுயற்சி படங்கள் தள்ளிப் போயுள்ள நிலையில், இந்த மாதம் முழுவதும் மத கஜ ராஜா படம் ஓடி வசூல் வேட்டை நடத்தப் போவது உறுதி என்கின்றனர். சுந்தர். சி, விஷால், சந்தானம், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி மற்றும் ஆர்யா உள்ளிட்ட பலர் இந்த படத்தின் வெற்றியால் ஹேப்பியாகி உள்ளனர். மத கஜ ராஜா 2 படத்தையே சுந்தர். சி இயக்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











