மே 13-ல் மதகஜராஜா.... 20-ம் தேதி மருது... விஷாலுக்கு இது ஸ்பெஷல் மாதம்!
சென்னை: மே 13 ம் தேதி விஷாலின் 'மதகஜராஜா'வும், அதற்கு அடுத்த வாரத்திலேயே மருது படம் வெளியாகும் என அறிவித்துள்ளார் விஷால்.
அவரது கேரியரில் அடுத்தடுத்த வாரங்களில் இரு படங்கள் வெளியாவது இதுவே முதல் முறை.
3 வருடங்களுக்கு முன்னால் எடுக்கப்பட்ட படம் 'மதகஜராஜா'. சுந்தர் சி இயக்கத்தில், விஷால், அஞ்சலி, வரலட்சுமி நடித்த இந்தப் படம் பல்வேறு காரணங்களால் இப்போ அப்போ என இழுத்தடித்துக் கொண்டிருந்தது.

ஒரு வழியாக கடந்த 29 ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. வெளியீட்டுத் தேதியை உறுதிபடுத்தும் வகையில் விளம்பரங்களையும் வெளியிட்டனர்.
ஆனால் கடைசி நேரத்தில் 'மதகஜராஜா' மீண்டும் பின்வாங்கியது. இதனால் உதயநிதியின் 'மனிதன்' பெரிய போட்டிகளின்றி வெளியானது.
இந்நிலையில் வருகின்ற மே 13 ல் இப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 6ம் தேதி சூர்யாவின் '24' திரைப்படம் வெளியாவதால் ஒருவாரம் கழித்து 'மதகஜராஜா'வை வெளியிடுகின்றனர்.
இதன்மூலம் ஜி.வி.பிரகாஷின் 'பென்சில்', பாபி சிம்ஹாவின் 'கோ2' ஆகிய படங்களுடன் விஷாலின் 'மதகஜராஜா' மோதுகிறது.
மருது
விஷால் நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகியிருக்கும் இன்னொரு படமான 'மருது' திரைப்படம் மே 20 ல் வெளியாகிறது. ஒரு வார இடைவெளியில் அடுத்தடுத்து 2 படங்கள் விஷால் நடிப்பில் வெளியாகவுள்ளன.
இதனால் பாக்ஸ் ஆபிஸில் 2 படங்களும் மறைமுகமாக மோதிக்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது. விஷால் ஏதாவது ஒரு படத்தை தள்ளி வெளியிடுவாரா? இல்லை சூழ்நிலையைப் பொறுத்து வேறு ஏதேனும் முடிவெடுப்பாரா? என்பது இனிமேல்தான் தெரியும்.


Click it and Unblock the Notifications











