பில்லியன் டாலர் ஸ்டார்ட்அப்களுக்கெல்லாம் முன்னோடி! ஜி.டி. நாயுடுவாக மிரட்ட வரும் மாதவன்!
சென்னை: இந்தியாவின் தலைசிறந்த கண்டுபிடிப்பாளருமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி வருகிறது. நடிகர் மாதவன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜி.டி. நாயுடுவின் பயோபிக் மாதவனுடன் இணைந்து சத்யராஜ், ஜெயராம், பிரியாமணி, துஷாரா விஜயன், வினய் ராய் மற்றும் தம்பி ராமையா உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜி.டி. நாயுடு வாழ்க்கை வரலாறு: கோயம்புத்தூர் கலங்கல் கிராமத்தில் பிறந்த ஜி.டி. நாயுடுவிற்கு உலகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் தயாரிப்புகளை உருவாக்குவதே லட்சியமாக இருந்தது. தென்னிந்தியாவின் மிகச் சிறந்த போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றான 'யுனிவர்சல் மோட்டார் சர்வீஸ்' நிறுவனத்தைத் தொடங்கி அதை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார். அதுமட்டுமின்றி, எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், உற்பத்தித் துறை மற்றும் விவசாயம் எனப் பல துறைகளில் அவர் ஈடுபட்டு சாதனை படைத்தார். முறைப்படியான பள்ளிப் படிப்பு பெரிதாக இல்லை என்றாலும், புதிய தொழில்நுட்பங்களையும் தொழில்துறை நடைமுறைகளையும் கற்றுக்கொள்வதற்காக அவர் உலகம் முழுவதும் பயணம் செய்தார். புதுமை விரும்பியாக இருந்த ஜிடி நாயுடு எதையும் தாங்கும் மனப்பக்குவத்தை கொண்டு இருந்தார்.

சிறப்பான படம்: இவரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் தான் நடிகர் மாதவன் நடிக்க உள்ளார். 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' படத்தில் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனாக வாழ்ந்து காட்டி, தேசிய விருது உள்ளிட்ட பல பாராட்டுகளைப் பெற்ற நடிகர் மாதவன், தற்போது மீண்டும் ஒரு நிஜ நாயகனின் கதையைக் கையில் எடுத்துள்ளார். டிரைகலர் ஃபிலிம்ஸ் மற்றும் வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படத்தை இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்குகிறார். மாதவனுடன் இணைந்து தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகின் நடிகர்களான சத்யராஜ், ஜெயராம் ஆகியோருடன் முன்னணி நடிகைகளான பிரியாமணி மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.
இந்தியாவின் இந்த ஆகச்சிறந்த அடையாளத்திற்குத் தேசிய அளவில் கிடைக்க வேண்டிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும் ஒரு உன்னதமான படைப்பாக 'G.D.N.' திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த படம் வெறும் வரலாற்றுப் பதிவாக மட்டுமில்லாமல், ஆர்வம், மன உறுதி மற்றும் வழக்கமான சிந்தனைகளை உடைத்தெறியும் தைரியம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை உணர்த்தும் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தும் கதையாக இப்படம் இருக்கும் என்பதில் மாற்றம் இல்லை.


Click it and Unblock the Notifications