ஒரு நாயை அழிக்க.. அதுக்கு வெறிநாயின்னு பட்டம் கொடுத்தா போதும்.. தெறிக்கும் ராக்கெட்ரி டிரைலர்!
சென்னை: இயக்குநராக அவதாரமெடுத்துள்ள மாதவன் இயக்கி நடித்துள்ள ராக்கெட்ரி படத்தின் அட்டகாசமான டிரைலர் வெளியாகி உள்ளது.
இந்திய விஞ்ஞானியான நம்பி நாராயணனை தேச துரோகி என பட்டம் சுமத்தி அவரது வாழ்க்கையையே அழித்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகி உள்ளதாக நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார்.
நம்பி நாராயணனாக நடித்துள்ள மாதவனை பேட்டி எடுக்கும் நபராக ஸ்பெஷல் கேமியோ கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார்.
இயக்குநர் மாதவன்
மேடி என சாக்லெட் பாயாக அழைக்கப்பட்ட வந்த நடிகர் மாதவன் இயக்குநர் சீமானின் தம்பி படத்தின் மூலம் அதிரடியான ஆக்ஷன் ஹீரோவாக மாறினார். இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதிச்சுற்று திரைப்படம் மாதவனை வெர்ஷன் 2.0 நடிகராக மாற்றியது. இந்நிலையில், அடுத்ததாக ராக்கெட்ரி படத்தின் மூலம் இயக்குநர் அவதாரமெடுத்துள்ளார் மாதவன்.

ராக்கெட்ரி டிரைலர்
இயக்குநர் மாதவன் இயக்கி நடித்துள்ள ராக்கெட்ரி படத்தின் அட்டகாசமான டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. நடிகர்கள் சூர்யா, சிவகார்த்திகேயன் என ஏகப்பட்ட பிரபலங்கள் அந்த டிரைலரை தங்கள் ட்விட்டர் பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர். நடிகர் சூர்யா ராக்கெட்ரி டிரைலரை பார்த்து விட்டு வெகுவாக பாராட்டி உள்ளார். டிரைலரின் ஆரம்ப காட்சியிலே சூர்யா இடம்பெற்றுள்ள நிலையில், அவரது ரசிகர்கள் டிரைலரை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

மீண்டும் சிம்ரன்
நடிகர் மாதவன் உடன் பார்த்தாலே பரவசம், கன்னத்தில் முத்தமிட்டாள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை சிம்ரன் இந்த படத்தில் மீண்டும் மாதவனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். டிரைலரில் பார்ப்பதற்கு அப்படியே வாரணம் ஆயிரம் படத்தில் வந்த சிம்ரனையே நினைவு படுத்துகிறார். படத்தில் அவரது பர்ஃபார்மன்ஸ் எப்படி இருக்கு என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

தேச துரோகம்
இந்தியாவின் தலை சிறந்த விஞ்ஞானியான நம்பி நாராயணனை அழிக்க அவருக்கு தேச துரோகி என பட்டம் கட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்ற உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு எழுதப் பட்ட நாவலை தழுவி இந்த படத்தை நடிகர் மாதவன் இயக்கி நம்பி நாராயணனாகவே வாழ்ந்துள்ளார்.

ஒரு காட்சியில் அப்துல் கலாம்
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று படத்தில் மறைந்த குடியரசுத் தலைவரும் இந்திய தேசத்தின் சிறந்த விஞ்ஞானியுமான அப்துல் கலாம் சம்பந்தப்பட்ட ஒரு காட்சி இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், இந்த ராக்கெட்ரி டிரைலரிலும் அப்துல் கலாம் கதாபாத்திரம் ஒன்று இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு நாயை அழிக்க
டிரைலரில் வரும் ஒவ்வொரு வசனங்களும் காட்சிகளும் ஏகப்பட்ட சர்ச்சைகளை கிளப்பும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு நாயை அழிக்க அதற்கு வெறிநாய் என பட்டம் கட்டினாலே போதும் என்றும், அது போல ஒரு மனுஷனை தலை தூக்க முடியாத அளவுக்கு அடிச்சி கொல்லணும்னா அவனுக்கு தேச துரோகின்னு பட்டம் கொடுத்தா போதும் என சூர்யா பேசும் வசனங்கள் வெறித்தனத்தின் உச்சம். இந்த கோடையில் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











