வளர்த்தா இப்படி புள்ளைய வளர்க்கணும்.. ஒன்னு இல்லை.. 5 தங்கப் பதக்கங்களை தட்டித்தூக்கிய மாதவன் மகன்!
மும்பை: பல முன்னணி நடிகர்களின் மகன்கள் அப்படியே திரைத்துறையில் வாரிசு நடிகர்களாக மாறி வரும் நிலையில், நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் மாதவன் நீச்சல் விளையாட்டில் தொடர்ந்து சாம்பியனாக வலம் வருகிறார்.
சமீபத்தில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் மகாராஷ்ட்ரா அணிக்காக விளையாடிய மாதவன் மகன் வேதாந்த் 5 பிரிவுகளில் தங்க பதக்கங்களையும் இரு பிரிவுகளில் வெள்ளிப் பதக்கங்களையும் வென்று அசத்தி உள்ளார்.
அதன் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து நடிகர் மாதவன் பூரிப்படைந்துள்ளார்.

நடிப்பும் இயக்கமும்
சின்னத்திரை நடிகராக இந்தி சீரியல்களில் நடித்து வந்த மாதவன் அலைபாயுதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழ், இந்தி மொழிகளில் பல படங்களில் நடித்த மாதவன் இன்னமும் ஹீரோவாக அசத்தி வருகிறார். கடந்த ஆண்டு ராக்கெட்ரி: நம்பி விளைவு படத்தை இயக்கி நடித்து தனது அபார திறமையை வெளிப்படுத்தி இருந்தார் மாதவன்.

விளையாட்டுத்துறையில் மகன்
மாதவன் மகன் வேதாந்துக்கு இருக்கும் அழகுக்கு அவரை பாலிவுட்டிலேயே அறிமுகப்படுத்தி இருக்க முடியும். ஆனால், மகனின் விருப்பத்தை அறிந்து செயல்படும் தந்தையான மாதவன் விளையாட்டுத்துறையில் மகனை வெற்றியாளராக பார்க்க ரொம்பவே ஹேப்பி ஆகி உள்ளார். சர்வதேச நீச்சல் போட்டிகள், இந்தியளவிலான நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு தொடர்ந்து பதக்கங்களை மாதவன் மகன் வேதாந்த் குவித்து வருகிறார்.

5 தங்கப் பதக்கங்கள்
5 ஆவது கேலோ இந்தியா யூத் விளையாட்டு (22 வயதுக்குட்பட்ட) போட்டிகள் மத்திய பிரதேசத்தில் சமீபத்தில் நடைபெற்றது. அதில், நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் கலந்து கொண்டு 5 தங்கப் பதக்கங்கள் வென்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார். மகாராஷ்ட்ரா மாநில அணிக்காக விளையாடிய வேதாந்த் 100, 200, 1500 மீ., பிரிவுகளில் தங்கம் வென்றுள்ளார்.

2 வெள்ளி
6000 பேருக்கு மேல் விளையாடிய இந்த நீச்சல் போட்டிகளில் 5 தங்கப் பதக்கங்கள் வென்றது மட்டுமின்றி 400மீ., மற்றும் 800மீ., பிரிவுகளில் வெள்ளிப் பதக்கங்களையும் வேதாந்த் வென்று சாதனை படைத்துள்ளார். பதக்கங்களுடன் தனது மகன் வேதாந்த் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து நடிகர் மாதவன் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

கங்கனா ரனாவத் பாராட்டு
மாதவன் மகன் வெற்றிப் பதக்கங்களை வென்றுள்ள நிலையில், நடிகை கங்கனா ரனாவத் "Congratulations, great role model for everyone" என பாராட்டி உள்ளார். மேலும், பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மாதவன் மகனையும் நடிகர் மாதவனையும் வாழ்த்தி கமெண்ட் போட்டு வருகின்றனர். நல்லா பையனை வளர்த்து இருக்கீங்க மேடி என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில்
கடந்த ஆண்டு ராக்கெட்ரி மற்றும் தோக்கா ரவுண்ட் தி கார்னர் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் மாதவன் அடுத்ததாக திருச்சிற்றம்பலம் படத்தை இயக்கிய இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின. யாரடி நீ மோகினி, திருச்சிற்றம்பலம் என தனுஷுக்கு ஹிட் படங்களை கொடுத்த மித்ரன் ஜவஹர் அடுத்ததாக மாதவனுக்கு ஒரு ஹிட் படத்தை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











