இந்தியாவின் எடிசன்.. ஜிடி நாயுடு பயோபிக் எப்போ ரிலீஸ் தெரியுமா?.. மாதவன் மாஸ் காட்டுறாரே!
சென்னை: புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளர் ஜி.டி. நாயுடுவின் உண்மை வாழ்க்கைக் கதையை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகிறது. நடிகர் ஆர். மாதவன் நடித்துள்ள இத்திரைப்படத்தை வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ், ட்ரைகலர் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. சமீபத்தில் வெளியான இதன் புதிய போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது.
துரந்தர் படத்தில் அஜய் சான்யால் கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்த மாதவன் தற்போது ஜிடி நாயுடு கதாபாத்திரத்தில் மாஸ் காட்டி வருகிறார். பயோபிக் படங்கள் மற்றும் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட படங்களை உருவாக்க நினைக்கும் இயக்குநர்கள் முதல் ஆளாக தேடிச் செல்வது மாதவனைத்தான் என்கின்றனர்.

'இந்தியாவின் எடிசன்', 'கோயம்புத்தூரின் செல்வச் சிற்பி' எனப் போற்றப்படும் ஜி.டி. நாயுடுவின் புரட்சிகர சிந்தனைகள், முன்னோடிப் பங்களிப்புகளை கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கிய இத்திரைப்படம் வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறது. இந்திய ஆளுமைகளின் அறியப்படாத கதைகளை வெளிப்படுத்தும் இம்முயற்சி மூலம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களைச் சென்றடைய இத்திரைப்படம் தயாராகியுள்ளது.
தேசிய விருது பெற்ற 'ராக்கெட்டரி: தி நம்பி எஃபெக்ட்' வெற்றிக்குப் பிறகு, வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ், ட்ரைகலர் பிலிம்ஸ் மீண்டும் இணைந்துள்ளன. இந்தியாவின் பாரம்பரியம், சாதனைகளைப் பேசும் ஊக்கமளிக்கும் கதையாக இத்திரைப்படம் உருவாகி, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வர்கீஸ் மூலன், விஜய் மூலன், ஆர். மாதவன், சரிதா மாதவன் ஆகியோர் இதன் தயாரிப்பாளர்கள்.
ஆர். மாதவன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க, சத்யராஜ், பிரியாமணி, ஜெயராம், துஷாரா விஜயன், தம்பி ராமையா, வினய் ராய், கருணாகரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தமிழகத்தில் ஏஜிஎஸ் சினிமா, ஆந்திரா/தெலங்கானாவில் ஸ்பிரிட் மீடியா, வெளிநாடுகளில் ஏபி இன்டர்நேஷனல், கேரளாவில் ஊர்வசி தியேட்டர்ஸ் ஆகிய முன்னணி நிறுவனங்கள் இதை விநியோகிக்கின்றன.
தயாரிப்பு வட்டாரங்களின்படி, படப்பிடிப்புத் தளத்தில் நேர்மறையான சூழல் நிலவியது. மாதவனின் நடிப்பு அர்ப்பணிப்பும், ஜி.டி. நாயுடுவாக அவரது மாறுபட்ட தோற்றமும் படக்குழுவினரால் வெகுவாகப் பாராட்டப்பட்டன. இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜூலை 17ம் தேதி வெளியாகும் இத்திரைப்படம் பார்வையாளர்களுக்கு உத்வேகம் அளித்து, உணர்வுபூர்வமான அனுபவத்தை வழங்கும். அடுத்தடுத்த தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும்.


Click it and Unblock the Notifications