நடோடிகள் - 2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சென்னை: நாளை வெளியாகவுள்ள நடோடிகள் - 2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் சசிகுமார், நடிகை அஞ்சலி ஆகியோர் நடிப்பில், இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் நாடோடிகள் -2 திரைப்படத்தை தயாரிப்பாளர் நந்தகுமார் தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது.

இந்த படத்திற்கு தடை விதிக்க கோரி எப்.எம். பைனான்ஸ் நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அந்த மனுவில், நாடோடிகள் படத்தின் தயாரிப்பாளர் நந்தகுமார், பட தயாரிப்பு செலவுகளுக்காக தன்னை அணுகியபோது, படத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உரிமையை அளிப்பதாக 5 கோடியே 25 லட்சம் ஒப்பந்தம் மேற்கொள்ளபட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது. பல தவணைகளாக, 3 கோடியே 50 லட்சம் பணம் தயாரிப்பாளர்க்கு வழங்கிய நிலையில்
வேறு நிறுவனம் மூலமாக படத்தை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில்
வெளியிட தயாரிப்பாளர் நந்தகுமார் நடவடிக்கைகள் எடுத்து வருவதால் தனக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறியுள்ளார்.
ஒப்பந்தத்தை மீறி படத்தை வெளியிட முயற்சிப்பது குறித்து தயாரிப்பாளரிடம் கேட்டதற்கு அவர் மழுப்பலான பதில் அளித்ததாகவும், ஒப்பந்தபடி மீதமுள்ள 1 கோடியே 75 லட்சம் ரூபாயை அளிக்க தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளார்.
படத்தின் உரிமை தனக்கே சொந்தமானது என அறிவிக்க வேண்டும் அதுவரை படத்தை வெளியிடுவதற்கான "கீ டெலிவரி மெசேஜ்" திரையரங்குகளுக்கு தர "கியூப்" க்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, திரையரங்குகளில் படத்தை வெளியிடுவதற்காக "கீ டெலிவரி மெசேஜ்" தர கியூப் நிறுவனத்திக்கு தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் மனு தொடர்பாக பதில் அளிக்க பட தயாரிப்பாளருக்கு உத்தரவிட்டு விசாரணை இரண்டு வாரத்திற்கு தள்ளிவைத்தார்.
இதனால், சசிகுமாரின் நாடோடிகள் 2 படம் நாளை திட்டமிட்டபடி வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











