பாட்டு மட்டுமில்லை.. இளையராஜா புகைப்படத்தை பயன்படுத்தவும் தடை.. நீதிமன்றம் அதிரடி
சென்னை: இசைஞானி இளையராஜா தனது பாடல்களை தனது அனுமதியில்லாமல் பயன்படுத்துவதற்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்த நிலையில்; தன்னுடைய புகைப்படம் உள்ளிட்டவைகளையும் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார். இந்நிலையில் அவரது புகைப்படங்களை பயன்படுத்துவதற்கு தடை விதித்து கோர்ட் உத்தரவிட்டிருக்கிறது.
இளையராஜா இசையமைத்த ஏராளமான பாடல்களை தற்போது மற்ற இயக்குநர்கள் தங்களது திரைப்படங்களின் இடையே பயன்படுத்துவது அதிகரித்திருக்கிறது. தன்னிடம் அனுமதி வாங்கி பயன்படுத்தப்பட்டிருந்தால் அதை ராஜா கண்டுகொள்வதில்லை. அதேசமயம் அனுமதி வாங்காமல் பயன்படுத்தினால் உடனடியாக ராயல்டி தொகை கேட்டுவிடுகிறார். அவரது இந்த செயலுக்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துவருகின்றன.
இளையராஜாவின் புதிய வழக்கு: அவர் பாடல்களை பயன்படுத்த அவரிடம் அனுமதி வாங்குவதுதானே முறை என்பது அவரது ரசிகர்களின் நிலைப்பாடு. இது ஒருபக்கம் இருக்க சமீபத்தில் இன்னொரு வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார் இளையராஜா. அதாவது தனது புகைப்படம், பெயர், இசைஞானி என்ற பட்டப்பெயர் ஆகியவைகளை யூடியூப் சேனல்கள் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். தன்னுடைய அனுமதியில்லாமல் தனது புகைப்படத்தை பயன்படுத்தி வந்த வருமான விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்.

இன்று நடந்த விசாரணை: சமூக வலைதளங்களில் ஏற்கனவே பதிவிட்ட தன்னுடைய புகைப்படங்கள் அனைத்தையும் நீக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். அவர் தொடர்ந்த இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பெயரையும் புகைப்படங்களையும் பயன்படுத்துவதால் இளையராஜாவுக்கு என்ன பாதிப்பு என்று நீதிபதி கேள்வி எழுப்பினர்.
ராஜா தரப்பு வாதம்: அதற்கு பதிலளித்த இளையராஜாவின் வழக்கறிஞர், 'இளையராஜாவின் பெயரையும், புகைப்படத்தையும் வணிக ரீதியாக பயன்படுத்தி வருவாய் ஈட்டுகிறார்கள் இது தனது தனிப்பட்ட உரிமையை பாதிக்கும் செயல் என்பதால் யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிரம் போன்ற சமூக வலைதளங்களில் ரீல்ஸ், மீம்ஸ்களில் அனுமதியின்றி புகைப்படத்தை பயன்படுத்துகிறார்கள். சில நேரங்களில் அவதூறான கருத்துக்களும் பதிவிடப்படுகின்றன' என்று குறிப்பிட்டார்.
நீதிமன்றத்தின் உத்தரவு: ராஜா தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி சமூக வலைதளங்கள், யூடியூப் சேனல்களில் இளையராஜாவின் புகைப்படத்தை அவரது அனுமதியின்றி பயன்படுத்த இடைக்கால தடை விதித்தும்; இம்மனு தொடர்பாக யூடியூப் சேனல்கள் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











