twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழ் சினிமாவின் பேசு பொருளான மெட்ராஸ், கபாலி, மாவீரன் கிட்டு!

    By Shankar
    |

    ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஆதித் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் படங்கள்... இல்லையில்லை.. அப்படி சில காட்சிகளை வைத்தால் கூட, அந்த இயக்குநரை தீண்டத்தகாத லிஸ்டில் வைத்துவிடும் அபாயம் கொஞ்ச காலத்துக்கு முன்பு வரை தமிழ் சினிமாவில் இருந்தது.

    அந்தப் படங்களை வணிக ரீதியில் ஓட விடாமல் செய்வதற்கென்ற சில வேலைகள் சத்தமில்லாமல் நடப்பது வழக்கம். படம் ஓடாமல் போய்விட்டால், பிறகெப்படி மீண்டும் அப்படி ஒரு படத்தை எடுப்பான்? இந்த நினைப்பே வரக்கூடாது என்று திட்டமிட்டு வேலைப் பார்த்து வந்தார்கள்.

    Madras, Kabali & Maaveeran Kittu

    அந்த ஆதிக்க கட்டுகளை உடைத்தெறிந்துவிட்டு இன்று மெட்ராஸ், கபாலி, மாவீரன் கிட்டு போன்ற படங்கள் தமிழ் சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்துள்ளன.

    ஆணவக் கொலைகள், ஆதிக்க சாதி வெறியாடல்கள் மிகுந்து நிற்கும் இந்த காலகட்டத்தில், இந்தப் படங்கள் ஏற்படுத்தியுள்ள தாக்கம், வணிக ரீதியில் அந்தப் படங்கள் பெறும் வெற்றிகள் இளம் படைப்பாளிகளுக்கு புதிய உத்வேகத்தைத் தந்திருக்கின்றன என்றால் மிகையல்ல.

    யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும்... என் பக்கத்து நியாயத்தை, என் சமூக மக்களின் அவலங்களை, அவற்றிலிருந்து அந்த மக்கள் வெளியேறுவதற்கான வழிகளை சினிமா என்ற மக்கள் ஊடகம் மூலம் நான் சொல்லியே தீருவேன் என்று அட்டகத்தி தொடங்கி கபாலி வரை கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறார் ரஞ்சித். அவர் தந்த ஊக்கம்.. இன்று பல படைப்பாளிகள் சினிமாவை வெறும் பொழுதுபோக்கு ஊடகமாகப் பார்க்காமல் சமூக மாற்றத்துக்கான கருவியாக நினைக்கத் தலைப்பட்டுள்ளனர்.

    ஒடுக்கப்பட்ட மக்களைப் பின்னணியாகக் கொண்டுதான் வெண்ணிலா கபடி குழுவை உருவாக்கினார் சுசீந்திரன். அவரது ஜீவா படம் முக்கியமான படைப்பு. கிரிக்கெட்டில் தலைவிரித்தாடும் சாதி வெறியை அம்பலமாக்கிய படம் அது. தன் மனதின் குமுறல்களை, ஒரு சமூகத்தின் அவலத்தை, தான் கடந்து வந்த, பார்த்துப் பதறிய வலிகளைப் படமாக்க அவருக்கு நான்கைந்து ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது.

    இந்த இருவரின் படைப்புகளும் தமிழ் சினிமாவைத் தாண்டி, பொது வெளியிலும் பேசும் பொருளாகியுள்ளன. படைப்பாளிகள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் விவாதிக்கும் விஷயங்களாக இவர்களின் படங்கள் திகழ்கின்றன.

    காரணம், இந்தப் படைப்புகள் கருத்தியல் ரீதியாக மட்டுமல்ல, வர்த்தக ரீதியாகவும் வெற்றிப் பெறுவதுதான். வர்த்தக வெற்றிகள் சாதியத் தளைகளை தவிடுபொடியாக்கிவிடும்.

    இன்னும் நிறைய ரஞ்சித்கள், சுசீந்திரன்களின் வரவுக்காக காத்திருக்கிறது தமிழ் சினிமா.

    English summary
    Directors Ranjith and Suseenthiran's movies like Kabali, Maaveeran Kittu earning attention from critics and social activists for its contents.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X