AK 62: மகிழ் திருமேனியும் இல்லையா? அப்போ அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்கப் போறது யாரு?
சென்னை: தளபதி 67 படத்துக்கு லியோ என டைட்டிலே அறிவித்து படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. அக்டோபர் மாதம் படம் வெளியாகும் என தேதியும் அறிவிக்கப்பட்டு விட்டது.
ஆனால், இன்னமும் நடிகர் அஜித்தின் ஏகே 62 படத்தின் இயக்குநர் இறுதி செய்யப்படவில்லை என்கிற ஷாக்கிங் தகவல்கள் அஜித் ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளது.
இயக்குநர் விக்னேஷ் சிவன் ஏகே 62 படத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட நிலையில், மகிழ் திருமேனி இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், தற்போது அதிலும் ட்விஸ்ட் என்கின்றனர்.

துணிவு தூள் கிளப்பல
நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு என இயக்குநர் எச். வினோத்தை நம்பி நடிகர் அஜித் மூன்று படங்கள் நடித்தார். ஆனால், ஒரு படத்துக்கு இன்னொரு படம் கொஞ்சம் பரவாயில்லை என்கிற ரகத்தில் தான் இருந்ததே தவிர, நடிகர் அஜித்துக்கு மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படமாக துணிவு அமையவில்லை என்கின்றனர்.

அடுத்த படத்தில் கவனம்
நடிகர் விஜய்யுடன் போட்டிப் போட்ட நிலையில், அஜித்தின் துணிவு படம் அந்த போட்டியில் வெற்றி பெறவில்லை. இந்நிலையில், அஜித்தின் அடுத்த படத்தை செம ஸ்ட்ராங்காக கொடுத்தாக வேண்டும் என்கிற பிரஷர் கிளம்பி உள்ளது. அதன் காரணமாகவே ஏற்கனவே ஒப்பந்தம் செய்த இயக்குநரையே அதிரடியாக மாற்றி விட்டனர்.

விக்னேஷ் சிவன் அவுட்
அடுத்து அஜித் படம் பண்ணப் போகிறோம் என ஆசையாக இருந்த இயக்குநர் விக்னேஷ் சிவன் அஜித்தின் போட்டோக்களை எல்லாம் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வந்த நிலையில், விக்னேஷ் சிவன் ஏகே 62 படத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், தனது சமூக வலைதள பக்கத்தில் இருந்து அஜித் புகைப்படத்தையும் ஏகே 62 அறிவிப்பையும் நீக்கினார்.

லண்டனுக்கு சென்ற மகிழ் திருமேனி
மீகாமன், தடம், கலகத் தலைவன் படங்களை இயக்கிய இயக்குநர் மகிழ் திருமேனி அடுத்து அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்கப் போவதாக பேச்சுக்கள் அடிபட்டு வந்த நிலையில், லைகா தயாரிப்பாளர் சுபாஷ்கரனை சந்திக்க லண்டன் சென்றதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், மகிழ் திருமேனியும் தற்போது இந்த படத்தை இயக்கப் போவதில்லை என்கிற பரபரப்பு பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

கலகத் தலைவன் ரிப்போர்ட்
இயக்குநர் மகிழ் திருமேனி கடந்த 2010ல் முன் தினம் பார்த்தேனே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன் பின்னர் அருண் விஜய்யின் தடையறத் தாக்க, தடம் படங்களை இயக்கினார். ஆர்யாவை வைத்து மீகாமன் மற்றும் உதயநிதி ஸ்டாலினை வைத்து கடைசியாக கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். இதில், தடம் படம் மட்டுமே வெற்றியை ருசித்தது. மேலும், கடைசியாக வெளியான கலகத் தலைவன் படத்தின் ரிப்போர்ட் லைகா நிறுவனத்துக்கு திருப்தியளிக்கவில்லை என்றும் மகிழ் திருமேனி அஜித்துக்கு சொன்ன கதையிலும் திருப்தியடையவில்லை எனக் கூறுகின்றனர்.

மகிழ் திருமேனி இல்லையா
கடைசி நேரத்தில் மகிழ் திருமேனி சொன்ன கதை கூட லைகா தரப்பை திருப்திப்படுத்தவில்லை என்றும் அவரும் ஏகே 62 படத்தை இயக்கப் போவதில்லை என்கிற தகவல்கள் கசிந்துள்ளன. அப்போ யாருதான் ஏகே 62 படத்தை இயக்கப் போறது என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

ஏஆர் முருகதாஸா? வெங்கட் பிரபுவா?
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்ட பெயர்கள் அடிபட்டு வருவதாகவும் விரைவில் ஏகே 62 படத்தின் இயக்குநரை லைகா நிறுவனம் வரும் வாரத்தில் அறிவிக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. சீக்கிரம் இயக்குநரை அறிவித்து படத்தின் ஷூட்டிங்கை ஆரம்பிங்க என அஜித் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











