Vidamuyarchi: மகிழ் திருமேனி பிறந்தநாள்.. மனசாட்சியே இல்லையா லைகாவுக்கு.. புலம்பும் அஜித் ரசிகர்கள்!
சென்னை: இயக்குநர் மகிழ் திருமேனி தனது 46வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். மகிழ் திருமேனியின் பிறந்தநாளை முன்னிட்டு அஜித்தின் விடாமுயற்சி படத்தின் டீசர் அல்லது ஃபர்ஸ்ட் சிங்கிள் உள்ளிட்ட ஏதாவது ஒரு அப்டேட் வரும் என ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், லைகா நிறுவனம் ஒரு போட்டோ வாழ்த்து கார்டை மட்டுமே மகிழ் திருமேனிக்காக போட்டுள்ளது.
இதனால், அஜித் ரசிகர்கள் கடுப்பாகி லைகா நிறுவனத்தை கமெண்ட் பக்கத்தில் திட்டியும் கோரிக்கைகளை வைத்தும் வருகின்றனர். கடைசியாக எச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்த துணிவு திரைப்படம் கடந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியானது.

துணிவு படத்தைத் தொடர்ந்து விடாமுயற்சி படத்தை இயக்கும் வாய்ப்பு இயக்குநர் மகிழ் திருமேனிக்கு கிடைத்த நிலையில், கடந்த ஒன்றரை வருடங்களாக அந்த படத்திற்காக தொடர்ந்து உழைத்து வருகிறார்.
மகிழ் திருமேனி பிறந்தநாள்: 1978ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி சென்னையில் பிறந்தவர் இயக்குநர் மகிழ் திருமேனி. 2010ம் ஆண்டு வெளியான முன் தினம் பார்த்தேனே படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். அதன் அருண் விஜய்யை வைத்து தடையற தாக்க படத்தை இயக்கினார். ஆர்யாவின் மீகாமன், மீண்டும் அருண் விஜய்யின் தடம் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ் திருமேனி கடைசியாக உதயநிதி ஸ்டாலின் நடித்த கலகத் தலைவன் படத்தையும் இயக்கினார்.
மிகப்பெரிய வெற்றி: அருண் விஜய்யுடன் மகிழ் திருமேனி இணைந்து உருவான தடையற தாக்க படம் ரசிகர்களை கவர்ந்த நிலையில், தடம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. மகிழ் திருமேனி ஆர்யா நடித்த டெடி படத்தில் வில்லனாகவும் நடித்து ரசிகர்களை மிரட்டினார். அஜித் படத்தை விக்னேஷ் சிவன் தவற விட்ட நிலையில், அந்த வாய்ப்பு மகிழ் திருமேனிக்கு கிடைத்தது.

அஜித் ரசிகர்கள் அப்செட்: சமீபத்தில் விடாமுயற்சி படத்தின் அப்டேட் கேட்டு டிரம்ப் வரை அலப்பறை செய்து விட்டனர் அஜித் ரசிகர்கள். மகிழ் திருமேனியின் பிறந்தநாளை முன்னிட்டு நிச்சயம் விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் அல்லது டீசர் என ஏதாவது ஒன்று வெளியாகும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இப்போதைக்கு வாய்ப்பே இல்லை ராஜா என்பது போல லைகா கை விரிக்க ரசிகர்கள் அப்செட் ஆகி திட்டித் தீர்க்கத் தொடங்கி விட்டனர்.
வேட்டையன் படத்துடன் விடாமுயற்சி டீசர்: லைகா தயாரிப்பில் உருவாகி உள்ள ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், வேட்டையன் படத்துடன் விடாமுயற்சி டீசரை வெளியிட லைகா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், அது எந்தளவுக்கு உண்மை என்பது குறித்த எந்தவொரு அப்டேட்டையும் லைகா நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டபுள் ஹிட் கிடைக்குமா?: லைகா நிறுவனத்துக்கு ரஜினிகாந்தின் வேட்டையன் மற்றும் அஜித்தின் விடாமுயற்சி என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகவுள்ள நிலையில், டபுள் ஹிட் கிடைத்தால் மீண்டும் லைகா நிறுவனம் வெற்றி நிறுவனமாக மாறிவிடும் என்கின்றனர். அதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவே சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. இயக்குநர் மகிழ் திருமேனியின் இயக்கத்தின் மீது அஜித் ரசிகர்களுக்கு பெரும் நம்பிக்கை உள்ள நிலையில், விடாமுயற்சி திரைப்படம் எப்போ வந்தாலும் பந்தயம் அடிக்கும் என ரசிகர்கள் இயக்குநருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











