லாபம் படத்தின் கடனை அடைத்துக் கொண்டு இருக்கிறேன்... அந்த அறிவு இல்ல.. விஜய்சேதுபதி பேட்டி!
சென்னை: ஒரு தயாரிப்பாளர் எப்படி இருக்க வேண்டும் என்ற அறிவு இல்லாதது தான், நான் தயாரித்த அனைத்து படங்களும் தோல்வி அடைய காரணம். லாபம் படத்திற்காக வாங்கிய கடனை இப்போது தான் அடைத்துக்கொண்டு இருக்கிறேன், அந்த கடனை அடைத்த பிறகு தான் அடுத்து படத்தை தயாரிக்கலாமா வேண்டாமா என்று யோசிப்பேன் என்று விஜய்சேதுபதி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் 50வது திரைப்படமான மகாராஜா திரைப்படம் நேற்று தியேட்டரில் வெளியாகி சக்கைப்போடு போட்டு வருகிறது. இந்தப் படம் விஜய் சேதுபதியின் திரைப்பயணத்தில் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்றும் விஜய்சேதுபதி இட்ஸ் பேக் என்று படம் பார்த்த ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். இப்படம் முதல் நாளே உலகளவில் ரூ. 7 கோடிக்கும் மேல் வசூலை பெற்று படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது.

நல்ல ஓப்பனிங்: இப்படத்தில் விஜய் சேதுபதி மட்டுமில்லாமல், பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். "குரங்கு பொம்மை" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முத்திரையை பதித்த இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
விஜய் சேதுபதி பேட்டி: மகாராஜா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி, தயாரிப்பாளராக தான் தோற்றது குறித்து பேசி உள்ளார். அதில், தயாரிப்பாளர் எப்படி படத்தை தயாரிக்க வேண்டும் என்ற அறிவு இல்லாமல் இருந்தது தான் என் முதல் குறை, ஒரு தயாரிப்பாளராக எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று இல்லாமல் இருந்தது தான் என் இரண்டாவது குறை. இதனால் நான் ஒவ்வொரு முறையும் படத்தை தயாரித்து விட்டு கடனாளியாக மாறுகிறேன்.
மோசமான அனுபவம்: மேலும் மேலும் கடனாளியாகக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு படத்தின் கடனை அடைத்துவிட்டு அடுத்த படத்தை தயாரிக்கிறேன். இப்போது லாபம் படத்தின் கடனை அடைத்துக்கொண்டு இருக்கிறேன். இதை அடைத்து முடித்துவிட்டுத்தான் அடுத்து ஒரு படத்தை தயாரிக்கலாமா.. வேண்டாமா.. என்று யோசிக்க வேண்டும். ஒரு தயாரிப்பாளராக அது ஒரு மோசமான அனுபவமாக இருந்தது. ஆனால், நானும் என் மகளும் சேர்ந்து முகில் என்ற படத்தில் நடித்திருந்தோம் அந்த படத்தை தயாரித்தது நான் தான், அந்த படத்தில் தான் நான் சம்பாதித்தேன், மற்ற படங்கள் எல்லாமே நஷ்டம் தான் என்றார்.
அடுத்த கனவு: இதைத்தொடர்ந்து சினிமாவில் தனது அடுத்த கனவு என்ன என்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த விஜய்சேதுபதி, வேறு வேறு மொழிகளில் நடித்தால், அங்கேயும் மக்களிடம் பேரன்பும், வரவேற்பும் கிடைத்ததால், எங்கு சென்றாலும் பிழைத்துக்கொள்வோம் என்கிற தன்னம்பிக்கை வந்துள்ளது. இதனால், அது அடுத்த கனவை நோக்கி நடக்க வழிவகுக்கிறது என்றார்.


Click it and Unblock the Notifications











