மகாராஜாவின் மகத்தான வெற்றி.. இயக்குநருக்கு தயாரிப்பாளர் கொடுத்த காஸ்ட்லி கிஃப்ட்
சென்னை: குரங்கு பொம்மை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி கவனம் ஈர்த்தவர் நித்திலன் சுவாமிநாதன். அவர் தனது இரண்டாவது படமாக மகாராஜா படத்தை இயக்கினார். விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், அபிராமி உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் தமிழ்நாட்டில் மெகா ஹிட்டடித்தது. மேலும் சீனாவிலும் அந்தப் படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு ரிலீஸானது. அங்கும் படம் அதிரிபுதிரி ஹிட். எனவே இயக்குநர் நித்திலன் சுவாமிநாதனுக்கு தயாரிப்பாளர் பரிசு ஒன்றை கொடுத்திருக்கிறார்.
விஜய் சேதுபதி நடிப்பில் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் உருவான படம் மகாராஜா. அந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் அபிராமி, அனுராக் காஷ்யப், பிக்பாஸில் கலந்துகொண்ட சாச்சனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இது விஜய் சேதுபதிக்கு 50ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே குரங்கு பொம்மை படத்தை இயக்கி கவனம் ஈர்த்த இயக்குநரின் இயக்கம் என்பதாலும், விஜய் சேதுபதி பல நாட்கள் கழித்து ஹீரோவாக நடிக்கிறார் என்பதாலும் படத்தின் மீது எதிர்பார்ப்பு உச்சக்கட்டமாக இருந்தது.

மெகா ஹிட்: அந்த எதிர்பார்ப்போடு வெளியான திரைப்படத்துக்கு ரசிகர்கள் தங்களது உச்சக்கட்ட ஆதரவை கொடுத்தார்கள். தந்தைக்கும், மகளுக்கும் உள்ள உறவு, சிறு குழந்தைகளுக்கு நடத்தப்படும் பாலியல் வன்கொடுமை உள்ளிட்டவைகளை இந்தப் படத்தை இயக்கியிருந்தார் நித்திலன். படத்தின் மேக்கிங், வசனங்கள் என அனைத்து ஏரியாவிலுமே படம் பக்காவாக இருந்ததன் காரணமாக படமானது மெகா ஹிட்டானது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்டது.
திரைக்கதை செம: படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் என்றால் அது திரைக்கதைதான். நான் லீனியர் பாணியில் திரைக்கதையை உருவாக்கியிருந்தார் நித்திலன். கொஞ்சம் சொதப்பினாலும் இந்த வகையான ஸ்க்ரீன் ப்ளே ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்திவிடும். அதனை சரியாக புரிந்துகொண்டு அவ்வளவு நுட்பமாகவும், புத்திசாலித்தனத்தோடும், ரசிகர்களுக்கு புரியும்படியும் நித்திலன் திரைக்கதையை அமைத்திருந்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது என்பதுதான் எதார்த்தம்.
ஓடிடியிலும் செம: திரையரங்குகளில் படத்துக்கு செமயான ரெஸ்பான்ஸ் கிடைத்தது. அதனையடுத்து நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் படம் வெளியானது. தியேட்டரில் கிடைத்த ரெஸ்பான்ஸைவிடவும் ஓடிடியில் மேலும் கொண்டாடப்பட்டது படம். முக்கியமாக உலகம் முழுவதுமிருந்து பல நாட்டினர் இந்தப் படத்தை நெட்ஃப்ளிக்ஸில் பார்த்துவிட்டு ஏகத்துக்கும் புகழ்ந்தார்கள். இதனால் மகாராஜா உலகளவில் புகழடைந்தது.தொடர்ந்து சீனாவிலும் இந்தப் படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டது.
பரிசு கொடுத்த தயாரிப்பாளர்: சீனாவிலும் அந்தப் படம் கிட்டத்தட்ட 80 கோடி ரூபாய்வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வெளிநாட்டிலும் படம் மெகா வெற்றியை பெற்றதன் காரணமாக இயக்குநர் நித்திலன் சுவாமிநாதனுக்கு 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிஎம் டபிள்யூ கார் ஒன்றினை பரிசாக கொடுத்திருக்கிறார்.நித்திலனுக்கு காரை தயாரிப்பாளர் பரிசாக கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறது. ரசிகர்களும் இயக்குநருக்கு தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











