என் படத்துக்கு தலைப்பை இளையராஜாதான் வைப்பார்! - மகேந்திரன்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தான் இயக்கும் புதிய படத்தின் தலைப்பை இளையராஜாதான் வைப்பார் என்று இயக்குநர் மகேந்திரன் தெரிவித்தார்.
முள்ளும் மலரும், ஜானி, நெஞ்சத்தைக் கிள்ளாதே, உதிரிப்பூக்கள் என தமிழ் சினிமாவில் காவியங்கள் படைத்த இயக்குநர் மகேந்திரன். அவர் படங்களுக்கு இளையராஜா அமைத்த இசை தனித்துவம் மிக்கது.
மகேந்திரன் படைப்புகளுக்கு ஜீவனாய் அமைந்த இசை. மகேந்திரன் எழுதாத வசனங்களை வாத்தியங்களால் எழுதியவர் இளையராஜா. இதை மகேந்திரனே பல முறை சொல்லியிருப்பது நினைவிருக்கலாம்.

இந்த இருவரும் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் புதிய படத்தில் இணைகிறார்கள். அந்தப் படத்தின் அறிமுக விழா இன்று சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் நடந்தது.
நிகழ்ச்சியில் இளையராஜாவும் மகேந்திரனும் பங்கேற்றனர்.
இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டவில்லை. இதுகுறித்து செய்தியாளர்களிடம் மகேந்திரன் கூறுகையில், "நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படம் பண்ணுகிறேன். புதுமைப்பித்தன் எழுதிய ஒரு கதையை மையப்படுத்திதான் இந்தப் படத்தை உருவாக்குகிறேன்.
இந்த இடைப்பட்ட நாட்களில் எனக்கு நிறைய படங்கள் பண்ண வாய்ப்புகள் வந்தன. ஆனால் எனக்கே உரிய சில கிறுக்குத்தனங்களை சமரசம் செய்து கொள்ள முடியாததால் அவற்றை நான் ஒப்புக் கொள்ளவில்லை. இந்தப் படம் ஒரு குடும்பத்துக்குள் நடக்கும் கதை. நீங்கள் எல்லாம் அறிந்த கதைதான்.
இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டவில்லை. என் படங்கள் சிலவற்றுக்கு இளையராஜாதான் தலைப்பு வைத்தார். உதிரிப் பூக்கள் என்ற தலைப்பே அவர் வைத்ததுதான் (உடனே இளையராஜா யோசித்துவிட்டு... 'ஆமாம்' என்கிறார்!).
இந்தப் படத்துக்கும் அவர்தான் தலைப்பு வைப்பார்.
என் படங்களில் பெரும்பாலான வசனங்களை நான் எழுதவில்லை. இளையராஜாதான் எழுதியிருப்பார். குழப்பமா இருக்கா... நான் எடுத்த காட்சிகள் பெரும்பாலானவை மவுனமாகத்தான் இருக்கும். அந்த காட்சிகளுக்கெல்லாம் தன் இசையால் அர்த்தமுள்ள வசனங்கள் எழுதியவர் இளையராஜாதான். அவர் இல்லாமல் என் படங்கள் இல்லை," என்றார்.


Click it and Unblock the Notifications











