பிரபல தெலுங்குபட தயாரிப்பாளர் மறைவு... நடிகர் சூர்யா உள்ளிட்ட திரை பிரபலங்கள் அஞ்சலி
ஐதராபாத் : பிரபல தெலுங்குபட தயாரிப்பாளரும் மூத்த பத்திரிகையாளருமான பிஏ ராஜு மாரடைப்பால் காலமானார்.
இதை அவரது மகன் சிவக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இதையடுத்து நடிகர்கள் சூர்யா, மகேஷ்பாபு, சமந்தா, ஜூனியர் என்டிஆர், இயக்குநர் எஸ்எஸ் ராஜமெளலி உள்ளிட்டோர் சமூக வலைதளங்களில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

2002ல் முதல் படம்
தன்னுடைய கேரியரை பத்திரிகையாளராக துவக்கியவர் பிஏ ராஜூ. தொடர்ந்து தெலுங்கு சினிமாவின் தயாரிப்பாளர் மற்றும் பிஆர்ஓ என அடுத்தடுத்த தளங்களில் இவரது முன்னேற்றம் விரிந்தது. பிரேமலோ பவானி கல்யாண் என்ற படத்தை கடந்த 2002ல் முதல்முறையாக தயாரித்தார்.

மகன் அறிவிப்பு
தொடர்ந்து பிரேமிகுலு, சந்திகாதுவாந்த் பிரேமலு பவாணி கல்யாண் என படங்களை தயாரித்தார். இந்நிலையில் மாரடைப்பு காரணமாக நேற்றைய தினம் இவர் உயிரிழந்துள்ளார். இவரது மறைவை அவரது மகன் சிவக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் அவித்துள்ளார். அவருக்கு டயபெட்டிக் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திரையுலகினர் அதிர்ச்சி
மேலும் தங்களது இதயங்களில் எப்போதும் சூப்பர்ஹிட்டாக தனது தந்தை இருப்பார் என்றும் அவர் உருக்கம் தெரிவித்துள்ளார். இதனிடையே ராஜூவின் திடீர் மரணம் தெலுங்கு, தமிழ் திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவர்கள் தங்களது வருத்தம் மற்றும் அஞ்சலியை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
நிபந்தனையற்ற அன்பு
நடிகர் சூர்யாவும் தனது இரங்கலை ட்விட்டர்மூலம் தெரிவித்துள்ளார். நிபந்தனைகளற்ற அன்பு எவ்வாறு அன்பை உருவாக்குகிறது என்பதை அவர் தங்களுக்கு உணர்த்தியதாக தெரிவித்த அவர், அவரது மறைவு அதிர்ச்சியையும் வலியையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ராஜமௌலி இரங்கல்
இதேபோல இயக்குநர் ராஜமௌலியும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். 1500 படங்களுக்கு மேல் பிஆர்ஓவாக பணியாற்றியுள்ள ராஜூவின் இடத்தை யாரும் நிரப்ப முடியாது என்றும் தெரிவித்துள்ளார். இதேபோல இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்தும் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
சமந்தா இரங்கல்
அவர் தனது வாழ்க்கையில் பாசிட்டிவ்வான ஒளி போன்றவர் என்று சமந்தா பாராட்டு தெரிவித்துள்ளார். ஒரு படம் ஜெயித்தாலும் தோற்றாலும் அவரிடம் இருந்து பாசிட்டிவ்வான மற்றும் கனிவான வார்த்தைகள் கிடைக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் அவரை கடுமையாக மிஸ் செய்வேன் என்றும் கூறியுள்ளார்.

இரண்டு மகன்கள்
இதேபோல நடிகர்கள் துல்கர் சல்மான், மகேஷ் பாபு, ஜூனியர் என்டிஆர் நடிகைகள் ரகுல் பிரீத் சிங், காஜல் அகர்வால் ஆகியோரும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். ராஜூவிற்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவரது மனைவியும் டைரக்டருமான பி ஜெயா கடந்த இரு வருடங்களுக்கு முன்பு மறைந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











