சாஹோ வெற்றி... மாற்றி யோசித்த மகேஷ்பாபு...இனி மெகாபட்ஜெட் படம்தானாம்
சென்னை: நடிகர் பிரபாஸின் சாஹோ திரைப்படம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய வசூலை அள்ளிக் கொடுத்துள்ளது. இதனால் மகேஷ் பாபு மாற்றி யோசிக்க ஆரம்பித்திருக்கிறாராம். தனது மார்க்கெட்டையும் இந்திய அளவில் விரிவுபடுத்தும் வேலைகளில் இறங்கியுள்ள அவர், 2020 ஜனவரியில் மிகப்பெரிய பட்ஜெட்டில் நான்கு மொழிகளில் உருவாகும் திரைப்படத்தில் நடிக்கப்போவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் மகேஷ் பாபு சிறுவயதில் இருந்தே தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர். ஆந்திரா மற்றும் தமிழகத்தில் இவருக்கென்று குறிப்பிட்ட ரசிகர் பட்டாளம் உள்ளன. அதனால் தான் இவருடைய திரைப்படங்கள் தமிழில் டப்செய்யப்பட்டு வெளியானால் தமிழ் நாட்டிலும் நல்ல வசூலைத் தருகின்றன.

ஆனால், கடந்த 2017ஆம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் நடித்து வெளியான ஸ்பைடர் படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.
ஆனால், அடுத்ததாக கடந்த ஆண்டு இவர் அரசியல்வாதியாக நடித்து வெளியான பாரத் அனே நேனு திரைப்படம் தெலுங்கு சினிமாவை அன்னாந்து பார்க்கவைத்துள்ளது. கூடவே ரசிகர்கள் மத்தியிலும் ஏகப்பட்ட பாராட்டுகளையும் வசூலையும் வாரி வழங்கியுள்ளது.
உலகம் முழுவதும் வெளியிடப்பட்ட பாரத் அனே நேனு திரைப்படம், வெளியான முதல் மூன்று நாட்களிலேயே பிரமாண்ட வசூல் சாதனை படைத்தது. பாகுபலி படத்திற்கு பிறகு, மகேஷ் பாபுவின் பாரத் அனே நேனு திரைப்படம் மட்டுமே இப்படி ஒரு வசூல் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் நடிகர் பிரபாஸின் சாஹோ திரைப்படம், இந்தியா முழுவதும் மிகப்பெரிய வசூலை அள்ளிக் கொடுத்துள்ளது. அதனால் நடிகர் மகேஷ் பாபு திடீரென புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
மகேஷ் பாபு தனது மார்க்கெட்டையும் இந்திய அளவில் விரிவுபடுத்தும் வேலைகளில் இறங்கியிருக்கிறார். அதன் காரணமாக ஜனவரியில் அவர் மிகப்பெரிய திரைப்படத்தில் நடிக்கிறார். அந்த திரைப்படம் பிரபாஸ் நடித்த பாகுபலி, சாஹோ திரைப்படங்களை விட மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிறது.
அதுமட்டுமின்றி இந்த திரைப்படம் இந்தியாவிலுள்ள பல முக்கிய மொழிகளில் தயாராகிறது. இந்த திரைப்படத்தின் பெயர் மற்றும் படக்குழுவினர்கள் குறித்து தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது மகேஷ் பாபு நடித்து வரும் சரிலேரு நீகேவரு திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியாகிறது என்ற தகவல் வந்துள்ளது. இந்த திரைப்படம் வெளியாகும் அதே ஜனவரியில் தான் அவர் நடிப்பில் இந்திய அளவில் உருவாகும் திரைப்படமும் தொடங்க போகிறது.


Click it and Unblock the Notifications











