ஃப்ரோஸன் 2 படத்தில் மகேஷ் பாபுவுக்கு இப்படியொரு சம்மந்தம் இருக்கா?
ஐதராபாத்: ஃப்ரோஸன் 2 திரைப்படம் உலகம் முழுவதும் வரும் நவம்பர் 22ம் தேதி வெளியாகிறது.
டிஸ்னி தயாரிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த படம் 2013ம் ஆண்டு வெளியான ஃப்ரோஸன் படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ளது.
இந்தியாவில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் இந்த படம் டப்பிங் செய்யப்பட்டு வரும் நவம்பர் 22ம் தேதியே ரிலீஸ் செய்யப்படுகிறது.

குழந்தைகளை கவரும்
பிறவியிலேயே தொட்டதையெல்லாம் பனி சிலையாக உறைய வைக்கும் சக்தி கொண்ட எல்சா மற்றும் அவரது தங்கை ஆன்னாவின் மாயாஜால உலகில் உருவாகியுள்ள ஃப்ரோஸன் 2 கதை பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் கவரும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில்
இந்தியாவில் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் ஃப்ரோஸன் 2 படம் அந்த அந்த மொழியில் உள்ள பிரபல நடிகைகளை கொண்டு டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகவுள்ளது. பாலிவுட்டில் பிரியங்கா சோப்ரா மற்றும் பரிணித்தி சோப்ரா எல்சா மற்றும் ஆன்னாவிற்கு குரல் கொடுக்கின்றனர். தமிழில் ஷ்ருதிஹாசனும் தெலுங்கில் நித்யா மேனனும் நாயகி எல்சா கதாபாத்திரத்திற்கு குரல் கொடுக்கின்றனர்.
குட்டி எல்சா
ஃப்ரோஸன் 2 படத்தின் தெலுங்கு வெர்ஷன் எல்சா கதாபாத்திரத்திற்கு நித்யா மேனன் டப்பிங் பேசியுள்ளார். அதே போல சிறு வயது எல்சாவுக்கு டோலிவுட் சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா குரல் கொடுத்துள்ளார். இதன் மூலம் மகேஷ் பாபுவின் ரசிகர்கள் நிச்சயம் பேபி சித்தாராவின் குரலுக்காகவே ஃப்ரோஸன் 2 படத்தை வெற்றியடைய செய்வார்கள் எனும் மிகப்பெரிய வியாபார யுக்தியும் இதில் அடங்கியுள்ளது.
அதுமட்டுமின்றி, சித்தாரா மற்றும் அவரது தோழி ஆத்யா இணைந்து நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கு 48 ஆயிரம் சப்ஸ்க்ரைபர்கள் ரசிகர்களாக இருக்கின்றனர். அவர்களையும் நிச்சயம் தியேட்டருக்கு கொண்டு வரும் மேஜிக்கை சித்தாரா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்கர் கிடைக்குமா
2013ம் ஆண்டு வெளியான ஃப்ரோஸன் திரைப்படத்துக்கு 2 ஆஸ்கர் விருதுகள் கிடைத்தன. நவம்பர் மாதம் ஃப்ரோஸன் 2 திரைப்படம் வெளியாக இருப்பதால், நிச்சயம் டிஸ்னி சார்பில் ஆஸ்கர் ரேஸுக்கு ஃப்ரோஸன் 2 படம் பரிந்துரைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பாகத்தை போல இரண்டாம் பாகமும் இசைக்காவியமாகவே உருவாகியுள்ளதால், இந்த முறையும் சிறந்த பாடலுக்கான ஆஸ்கரை ஃப்ரோஸன் 2 வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











