‘ஆகடு’ பட கட் அவுட்டை அகற்ற போலீஸ் முயற்சி : 100 அடி உயரத்தில் இருந்து ஆற்றில் குதித்த ரசிகர்
விஜயவாடா: நடிகர் மகேஷ்பாபு நடித்த ஆகடு படத்தின் 100 அடி கட் அவுட்டை அகற்ற போலீஸ் முயற்சித்ததை அடுத்து, கட் அவுட் மீதிருந்த ரசிகர் ஒருவர் திடீரென ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் விஜயவாடாவில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
பிரபல நடிகர் மகேஷ்பாபு நடித்த ‘ஆகடு' என்ற படம் இன்று ரிலீசாகிறது. இதையொட்டி விஜயவாடாவில் அவரது ரசிகர்கள் மிகப்பெரிய கட் அவுட்களை வைத்துள்ளனர்.

இந்நிலையில், அலங்கார் சென்டரில் வைக்கப்பட்டுள்ள மகேஷ்பாபுவின் 100 அடி உயர கட்-அவுட்டிற்கு அவரது ரசிகர்கள் முறையான அனுமதி பெறவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, அதனை அகற்ற போலீசார் முயற்சித்தனர். ஆனால், அதற்கு ரசிகர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதனால், போலீசாருக்கும், ரசிகர்களுக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது. அப்போது யாரும் எதிர்பாராத நேரத்தில் கட் அவுட்டின் மீது ஏறிய ரசிகர் ஒருவர் சுமார் 100 அடி உயரத்தில் இருந்து அருகில் இருந்த ஆற்றில் குதித்தார். விரைந்து செயல்பட்ட போலீசார் அந்த ரசிகரை உயிருடன் மீட்டனர்.


Click it and Unblock the Notifications











