குடும்பத்துடன் சந்தித்தார்.. அப்போதே மன்னித்து விட்டேன்.. நடிகை புகாருக்கு இயக்குனர் விளக்கம்!
மும்பை: அந்த நடிகை குடும்பத்துடன் வந்து சந்தித்தார், அப்போதே மன்னித்துவிட்டேன் என்று கூறியுள்ளார் பிரபல இயக்குனர்.
பிரபல இந்தி நடிகை மஹிமா சவுத்ரி. இவர் சுபாஷ் கய் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த பர்தேஸ் இந்தி படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதையடுத்து தில் கியா கரே, கில்லாடி 420, லஜ்ஜா, தேரே நாம் உட்பட பல படங்களில் நடித்தார்.

தொல்லை கொடுத்தார்
இவர் கடந்த சில நாட்களுக்கு முன் அளித்த பேட்டியில், இயக்குனர் சுபாஷ் கய் தன்னைக் கொடுமைப்படுத்தியதாகப் புகார் கூறி இருந்தார். அதில், இயக்குனர் சுபாஷ் கய் என்னை அதிகமாகக் கொடுமைப்படுத்தினார். எனக்குத் தொல்லை கொடுத்தார். என்னை யாரும் ஒப்பந்தம் செய்யக் கூடாது என்று அனைத்துத் தயாரிப்பாளருக்கும் மெசேஜ் அனுப்பினார். 1998 அல்லது 1999 ஆம் ஆண்டில் ஒரு இதழில் விளம்பரம் கூட கொடுத்தார்.

ஊர்மிளா மடோன்கர்
அதில் என்னுடன் யாரும் பணியாற்ற விரும்பினால் தன்னைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார், சுபாஷ் கய். இல்லை என்றால் அது ஒப்பந்த மீறலாக இருக்கும் என்றும் கூறியிருந்தார். ராம் கோபால் வர்மாவின் சத்யா படத்தில் நான் நடித்திருக்க வேண்டும். ஆனால் எனக்கு பதில் ஊர்மிளா மடோன்கரை நடிக்க வைத்தார். இது பற்றி தெரிவிக்கும் நாகரிகம் கூட அவர்களுக்கு இல்லை என்று கூறியிருந்தார். இதுபரபரப்பானது.

முதிர்ச்சி அடைந்தவர்
இந்நிலையில் இயக்குனர் சுபாஷ் கய், அதற்கு விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இந்த செய்தி வேடிக்கையாக இருக்கிறது. நானும் மஹிமாவும் இப்போது வரை நல்ல நண்பர்களாகத்தான் இருக்கிறோம். இப்போது அவர் முதிர்ச்சி அடைந்தவர். அவர் 23 வருடத்துக்கு முன் நடந்த சம்பவம் பற்றி சமீபத்தில் தெரிவித்துள்ளார். அந்தச் செய்தியை படித்து 'மகிழ்கிறேன்'.

சிறந்த நடிகை விருது
1997 ஆம் ஆண்டு பர்தேஸ் பட ரிலீஸுக்குப் பிறகு அவருக்கும் எனக்குப் பிரச்னை ஏற்பட்டது உண்மைதான். ஆனால், படம் பிளாக்பஸ்டர் ஹிட். அதற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுகூட அவருக்கு கிடைத்தது. எங்கள் ஒப்பந்தத்தில் ஒரு பிரிவை அவர் மீறியதாக எனது நிறுவனம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. அவருடனான ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டேன்.

அவரை மன்னித்தேன்
பிறகு மூன்று வருடங்களுக்குப் பிறகு மஹிமா தன் குடும்பத்துடன் என்னை வந்து சந்தித்தார். நான் அவரை மன்னித்தேன். பிறகு நாங்கள் நண்பர்களாகிவிட்டோம். எனது கடைசி படமான, கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான 'காஞ்சி'யில் அவர் கவுரவ வேடத்தில் நடித்தார். அதற்காக அவரைப் பாராட்டுகிறேன். சினிமா வாழ்க்கையில், பழைய பிரச்னையை வைத்து பொழுதுபோக்குவது வாடிக்கையானது என நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











