twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நாடோடி மன்னன் உருவான கதை!

    By Shankar
    |

    - கவிஞர் மகுடேசுவரன்

    எம்ஜிஆரின் திரைப்பட வாழ்க்கை ஏறு வரிசையில் நகரத் தொடங்கியிருந்தது. அவர் நடித்த படங்கள் மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்டிருக்கும். அருமையான பாடல்கள், விறுவிறுப்பான திரைக்கதை, நல்ல நகைச்சுவை, எண்ணற்ற நடிகர்கள், நாகரிகமான கருத்துகள் என்று அவற்றின் உள்ளடக்கம் மக்களுக்குப் பிடிக்கத் தொடங்கிவிட்டது.

    Making of Nadodi Mannan

    ஐந்தாறு ஆண்டுகளுக்குள் எம்ஜிஆரின் பட வணிகம் சூடு பிடித்தது. அந்த ஏற்றத்தைத் தக்கவைத்துக்கொள்ள மேலும் மேலும் பெரும்பொருட்செலவுப் படங்களில் அவர் நடித்தாக வேண்டிய தேவையும் ஏற்பட்டது. அந்நிலையில் கண்ணதாசன் கதை எழுதிய 'மகாதேவி' என்ற திரைப்படம் வெளியானது. மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட அப்படம் சிறிய வெற்றியைத்தான் பெற்றது. இந்த மொழியை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். படம் தோற்றது, இழப்பு என்பதைச் சொல்லாமல் 'சிறிய வெற்றி, சுமாராகப் போனது, அவ்வளவாகப் போகவில்லை, ஓரளவுக்குத்தான் ஓடிற்று, எதிர்பார்த்த அளவுக்கு இல்லை...' என்றெல்லாம் சொல்வார்கள். நாம் படம் ஊற்றிக்கொண்டது என்று விளங்கிக்கொள்ள வேண்டும். இதற்கிடையில் ராஜா தேசிங்கு, விக்கிரமாதித்யன் ஆகிய படங்களும் கைக்கடங்காத பொருட்செலவில் தயாராகிக்கொண்டிருந்தன. எல்லாவற்றுக்கும் மேலாக எம்ஜிஆரே ஒரு பெரும்பொருட்செலவுப் படத்தைத் தயாரித்து இயக்கத் தொடங்கியிருந்தார். அப்படம்தான் நாடோடி மன்னன். அத்தறுவாயில் மேற்சொன்ன மூன்று படங்களுமே செலவு காரணமாக அரைகுறையாய்த் தொடர்ந்து இழுத்துக்கொண்டிருந்தன என்றால் மிகையில்லை.

    Making of Nadodi Mannan

    எம்ஜிஆர் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் சக்கரபாணியையும் எம்ஜிஆரையும் பங்குதாரர்களாகக் கொண்ட நிறுவனம். அது பிற்பாடு எம்ஜிஆர் பிக்சர்ஸ் (பி) லிமிடெட் என்று மாற்றப்பட்டது. இதற்குப் பல்வேறு வருமான வரிக் காரணங்களும் இருந்தன. இவ்விரு நிறுவனத்திற்கும் ஆர் எம் வீரப்பனே நிர்வாகி. இரண்டாவது நிறுவனத்தில் வீரப்பனுக்குப் பத்துப் பங்குகளையும் கொடுத்திருந்தார். இதனால் நிறுவனத்தின் ஆவணங்களில் அவரும் கையெழுத்திடும் உரிமை பெறுகிறார். நாடோடி மன்னனுக்கு வேண்டிய பணத்திற்கான ஏற்பாடுகளை வீரப்பனே முழுமையாய்ச் செய்தார் என்று சொல்லலாம். பணத்திற்கான ஏற்பாடுகளைக் குறித்த எத்தகைய கவலையும் எம்ஜிஆருக்கு ஏற்படாதபடி அவர் பார்த்துக்கொண்டார். அதனால்தான் எம்ஜிஆரால் முழு மூச்சுடன் படவேலைகளில் ஈடுபட முடிந்தது.

    நாடோடி மன்னனுக்குப் பல்வேறு வெளியீட்டு நாள்கள் அறிவிக்கப்பட்டன. அறிவிக்கப்பட்ட நாள்களில் அப்படத்தை வெளியிடவே முடியவில்லை. எதைப் பற்றியும் கவலைப்படாமல் தமக்குத் தோன்றியவாறெல்லாம் காட்சிகளை மாற்றி மாற்றி எடுத்துக்கொண்டிருந்தார் எம்ஜிஆர். வேறு படங்கள் அனைத்தையும் எம்ஜிஆர் ஒத்தி வைத்திருந்தார். அப்போது படச்சுருளுக்கும் கடுமையான தட்டுப்பாடு நிலவியது. ஒரு சுருளின் உண்மை விலை எழுபத்தைந்து உரூபாய் என்றாலும் அது கறுப்புச் சந்தையில் நானூற்றைம்பது வரை விற்பனையாயிற்றாம். இப்படிப் பல்வேறு முனைகளில் செலவு கூடிக்கொண்டே போனது. அதனால் படத்தயாரிப்புக்குப் போதிய பணத்தைப் புரட்டவே முடியவில்லை. படச்சேர்ப்பனை முறைகளில் பல்வேறு வணிக உத்திகளைக் கையாண்டு நிலைமையை ஓரளவுக்குச் சமாளித்தார் வீரப்பன். ஒரு கட்டத்திற்கு மேல் ஏவியெம் மெய்யப்பச் செட்டியாரிடமே சென்று கடன்வாங்க வேண்டிய சூழ்நிலை. நாடோடி மன்னனைப் போன்ற கதையமைப்பிலேயே அங்கே 'உத்தமபுத்திரன்' தயாராகிக்கொண்டிருந்தது. ஆனாலும், வீரப்பனால் தம் படத்திற்குப் பணம் கேட்க அங்கே செல்ல இயல்கிறது என்றால் அப்போது திரை வணிகத்தில் நிலவிய நலமான போக்கை எண்ணி வியக்கலாம். இன்று தமது படத்தைப் போன்றே ஒரு படம் உருவாகிறது என்றால் அதற்கு என்னென்ன முட்டுக்கட்டைகளைப் போட இயலுமோ அத்தனையையும் போடுவார்கள்.

    Making of Nadodi Mannan

    தலைமைக் கணக்காளர் எம்.கே. சீனிவாசன் என்பவர் தலையசைத்தால் மட்டுமே மெய்யப்பன் பணம் கொடுப்பார். சீனிவாசனோ எம்ஜிஆரின் கையெழுத்து வேண்டுமென்கின்றார். படத்தயாரிப்பு நிறுவனத்தின் எல்லாக் கடிதங்களும் வீரப்பனின் கையொப்பத்திலேயே நடந்திருக்கின்றன என்று அவற்றை வீரப்பன் காண்பிக்க அவர் வீரப்பனின் மதிநுட்பத்தை வியந்து பாராட்டிவிட்டார். அப்போது வீரப்பனுக்கு வயது முப்பத்தொ+ன்று. அடுத்த அறையில் இந்த உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த மெய்யப்பன் எழுந்து வந்தார். இளம் அகவையிலேயே இவ்வளவு மதிநுட்பத்தோடு தம் முதலாளிக்கு உண்மையாய் இருக்கும் அவரைப் பார்த்து மெய்யப்பன் பாராட்டினாராம். பிறகு ஏவியெம்மின் கடனுதவி பெறப்படுகிறது.

    நாடோடி மன்னன் தயாரிப்பில் காலந்தாழ்ந்தபடியே போக, இதற்கிடையில் உத்தமபுத்திரன் வெளியாகிவிட்டது. எம்ஜிஆரும் வீரப்பனும் முதல்நாள் முதற்காட்சியே பார்த்தார்கள். படம் அருமையாக எடுக்கப்பட்டிருந்தது. ஆனால், செலவிட்ட தொகைக்கு நிகரான வரவேற்பு இருக்கவில்லை. இது எம்ஜிஆரைக் கவலை கொள்ளச் செய்துவிட்டது. தம் படத்திற்கும் அவ்வாறு நேர்ந்தால் என்ன செய்வது என்று முதன்முறையாக அஞ்சினார். அதனால் பிறத்தியாரின் ஆலோசனைகளை ஏற்கும் மனநிலைக்கு எம்ஜிஆர் வந்தார். நாடோடி மன்னனில் இரண்டு எம்ஜிஆர்களும் சண்டையிட்டுக் கொள்ளும் காட்சி எடுக்கப்படவிருந்தது. அக்காட்சிக்கு அளவிற் பெரிய அரண்மனை அரங்கு வேண்டும். குதிரையிலமர்ந்தபடி சண்டையிட்டவாறே படிகளில் ஏறி இறங்க வேண்டும். அது சரியாகவும் வராது, தேவையற்ற செலவும்கூட என்று வீரப்பன் கருதினார். ஆனால், எம்ஜிஆர் அக்காட்சியை எடுப்பதில் உறுதியாக இருந்தார். "எம்ஜிஆரும் எம்ஜிஆரும் சண்டையிட்டுக் கொள்வதைப் பார்வையாளர்கள் விரும்பமாட்டார்கள். எம்ஜிஆர் தீயவர்களோடு மோதுவதைத்தான் விரும்புவார்கள்..." என்று வீரப்பன் கூற அதை ஏற்றுக்கொண்டார். அதன்படி நம்பியாரோடு சண்டையிடும் காட்சியாக அது மாற்றப்பட்டது.

    Making of Nadodi Mannan

    பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரத்தை எம்ஜிஆரிடம் அழைத்து வந்தவரும் வீரப்பன்தான். மூத்த இயக்குநர் கே. சுப்பிரமணியத்தின் அலுவலகத்திற்குச் சென்றிருந்தபோது அங்கே தரையிலமர்ந்து பட்டுக்கோட்டையார் ஒரு பாடலைப் பாடிக்காட்டிக் கொண்டிருந்தாராம். "வீரப்பா... இவரை நல்லாப் பார்த்துக்க... அருமையாகப் பாட்டெழுதுகிறார்," என்று அவர் அறிமுகப்படுத்தி வைத்தார். அங்கே பட்டுக்கோட்டையார் பாடிக்காட்டிய "காடு வெளஞ்சென்ன மச்சான்..." என்ற பாடல் வீரப்பனுக்குப் பிடித்துப் போயிற்று. அவரை அழைத்து வந்து எம்ஜிஆரிடம் அறிமுகப்படுத்தி வைக்க, அப்பாடல் நாடோடி மன்னனில் இடம் பெற்றது.

    இப்படிப் பல்வேறு சிக்கல்கள் பிய்த்தல்களுக்கு நடுவே ஒருவழியாக 1958ஆம் ஆண்டு ஆகஸ்டுத் திங்கள் 22ஆம் நாள் நாடோடி மன்னன் வெளியானது. திரையிட்ட இடமெங்கும் கூட்டம் குவிந்தது. படம் வெற்றி பெற்றது. தமிழ்த் திரைப்பட வரலாற்றில் நாடோடி மன்னன் பெற்ற இடத்தை இன்னொரு படம் இதுகாறும் பெறவில்லை என்பதே உண்மை.

    English summary
    Magudeswaran's write on MGR's classic blockbuster Nadodi Mannan making
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X