Kamal haasan: பெண் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு காரை பரிசளித்த கமல்ஹாசன்!
சென்னை: கோவையை சேர்ந்த பெண் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் காரை பரிசாக அளித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக சோஷியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காக இருந்தவர் கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் ஷர்மிளா.
கோவையின் முதல் பெண் ஓட்டுநரான ஷர்மிளா பொதுமக்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமானார்.
பணி நீக்கம்: ஓட்டுநர் ஷர்மிளாவை பாராட்டும் விதமாக தி.மு.க.வை சேர்ந்த கனிமொழி எம்.பி கடந்த 24ம் தேதி, ஷர்மிளா ஓட்டிவந்த பேருந்தில் காந்திபுரத்தில் இருந்து பீளமேடு வரை பயணம் செய்தார். பயணத்தின்போது ஷர்மிளாவுக்கு கனிமொழி எம்.பி. தனது வாழ்த்துகளை தெரிவித்தார். இதையடுத்து, பேருந்தின் உரிமையாளர் விளம்பரத்திற்காக பயணிகளை ஏற்றுவதாக கூறி ஷர்மிளாவை பணி நீக்கம் செய்துவிட்டார்.

கனிமொழி உறுதி: ஷர்மிளா பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, கனிமொழி எம்பி அவரை தொலைபேசியில் அழைத்து ஆறுதல் கூறி, பேருந்து உரிமையாளரிடம் பேசி வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். அதற்கு ஷர்மிளா மறுப்பு தெரிவித்ததை அடுத்து, தான் ஆட்டோ ஓட்டப் போவதாக கூறினார். அதற்கு தேவையான பண உதவி மற்றும் வங்கிக் கடன் வாங்கித் தருவதாக கூறியிருந்தார்.
கார் பரிசு: இந்தநிலையில், பெண் ஓட்டுநர் ஷர்மிளா மற்றும் அவரது பெற்றோரை நேரில் அழைத்து, Maruti Suzuki Ertiga காருக்கான முன்பணத்தை பரிசாக கொடுத்துள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன். இது குறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் முதல் பெண் ஓட்டுநர் வசந்தகுமாரி முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வீரலட்சுமி போல கோயம்புத்தூரில் முதன்முறையாக தனியார் பேருந்து ஓட்டுநராக இருந்தவர் ஷர்மிளா.
பல பெண்களுக்கு முன்உதாரணம்: பேருந்து ஓட்டுநராக வர வேண்டும் எனும் தன்னுடைய கனவிற்காக உழைத்து சவாலான பணியை திறம்பட செய்து வந்தார். அதற்காக பல்வேறு தரப்பின் பாராட்டுகளை பெற்றுள்ளார். தன் வயதையொத்த பெண்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக திகழ்ந்த ஷர்மிளா குறித்த சமீபத்திய விவாதம் என் கவனத்திற்கு வந்தது. மிகுந்த வேதனை அடைந்தேன்.
கார் பரிசு: ஷர்மிளா ஓர் ஓட்டுநராக மட்டுமே இருந்துவிட வேண்டியவர் அல்ல. பல்லாயிரம் ஷர்மிளாக்களை உருவாக்க வேண்டியவரென்பதே என் நம்பிக்கை. கமல் பண்பாட்டு மையம் தனது பங்களிப்பாக ஒரு புதிய காரை ஷர்மிளாவுக்கு வழங்குகிறது. வாடகை கார் ஓட்டும் தொழில்முனைவராக தனது பயணத்தை ஷர்மிளா மீண்டும் தொடரவிருக்கிறார். ஆண்டாண்டு காலமாய் அடக்கி வைக்கப்பட்ட பெண்கள் தங்கள் தடைகளை உடைத்து தரணி ஆள வருகையில் ஒரு பண்பட்ட சமூகமாக நாம் அவர்களின் பக்கம் நிற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மகள் ஷர்மிளாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் என்று கமல்ஹாசன் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











