பிளாஸ்மா தானம் செய்யுங்க.. ஒரு குடும்பத்தை வாழ வைக்கலாம்.. நடிகர் விஜய் சேதுபதி கோரிக்கை!
சென்னை: வெறும் நடிகராக மட்டுமின்றி, சமூக அக்கறையிலும் அளவு கடந்த ஈடுபாட்டுடன் செயலாற்றி வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி.
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த நோயாளிகள், பிளாஸ்மா சிகிச்சைக்கு உதவி அளிக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், திருச்சியைச் சேர்ந்த "உயிர்த்துளி" ரத்த மையத்துடன் இணைந்து டாக்டர் முகமது ஹக்கிம் தொடங்கியுள்ள பிளாஸ்மா நன்கொடை திட்டத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி ஆதரவு தெரிவித்துள்ளார்.

பிளாஸ்மா தானம் கொடுத்த பிரபலம்
ஆஸ்கர் விருதுகளை அள்ளிக் குவித்த ஹாலிவுட் நடிகர் டாம் ஹேங்க்ஸுக்கு கொரோனா தொற்று பரவியது உலகளவில் சினிமா பிரபலங்கள் மத்தியில் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது. 63 வயதான நடிகர் டாம் ஹேங்க்ஸ் மற்றும் அவரது மனைவி ரிட்டா வில்சன் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த நிலையில், தங்கள் பிளாஸ்மாக்களை தானம் செய்தனர்.

உயிர் காக்கும் பிளாஸ்மா
கொரோனா வைரஸ் பாதிப்பால் தீவிரமாக பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு, இந்த பிளாஸ்மா சிகிச்சை மிகவும் பயன் உள்ளதாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த நபர்களின் பிளாஸ்மா தான் இந்த சிகிச்சைக்கு மிகவும் உதவியாக இருப்பதால், அதற்கான கொடையாளிகள் அதிகரிக்க வேண்டும் என மருத்துவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

விஜய்சேதுபதி கோரிக்கை
மக்கள் செல்வனான விஜய் சேதுபதி தனது டிவிட்டர் பக்கத்தில், ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். திருச்சியைச் சேர்ந்த "உயிர்த்துளி" ரத்த மையத்துடன் இணைந்து டாக்டர் முகமது ஹக்கிம் தொடங்கியுள்ள பிளாஸ்மா நன்கொடை திட்டத்தில் நீங்களும் இணையலாம் என்றும், ஒரு குடும்பத்தின் உயிரை காப்பாற்ற உங்கள் பிளாஸ்மாவினால் முடியும், அதை தயங்காமல் தானம் செய்யுங்கள் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video

அல்லு அர்ஜுன் படம்
தமிழ் சினிமாவை தாண்டி டோலிவுட், மலையாளம் மற்றும் பாலிவுட் என பல்வேறு மொழிகளிலும் நடிக்க தொடங்கி இருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி. அல்லு அர்ஜுன் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள புஷ்பா படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த படத்தில் இருந்து தான் வெளியேறி விட்டதாக அறிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











