twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வன்முறை நாயகர்களின் தொடக்கம் - மலையூர் மம்பட்டியான்

    By Shankar
    |

    - கவிஞர் மகுடேசுவரன்

    தமிழ்த் திரையில் முதன்முதலாக அரிவாள், வன்முறை, வெட்டு குத்து என்று தொடங்கி வைத்த படம் எது என்று நண்பர் கேட்டிருந்தார். நல்ல கேள்விதான். இங்கே தோன்றிய பெரும்பான்மையான படங்கள் அன்பையும் பாசத்தையும் மனநெகிழ்ச்சியையும் பெருகச் செய்பவையாகவே இருந்தன. திடீரென்று அப்போக்குக்கு எதிராக 'வெட்டுவேன், குத்துவேன்' வகைமைத் திரைப்படங்கள் தொடர்ச்சியாக வரத் தொடங்கின. அவ்வகைத் திரைப்படங்களின் வெளியீடு தற்காலம்வரை ஓயாமல் தொடர்கிறது.

    ஒரு திரைக்கதையில் கொலை என்பது மிகவும் அதிர்வூட்டக்கூடிய திருப்ப நிகழ்வாகத்தான் பயன்படுத்தப்பட்டது. ஆனால், கொல்வதையும் குருதிச் சிதறலையும் இயல்பாகப் பார்த்துக் கடக்கின்றவர்களாக இன்று மாறிவிட்டோம். இவ்வாறு மாறிவிட்ட மனநிலைக்கு வலிமையான அடித்தளமொன்று இருந்திருக்க வேண்டும். ஏதேனும் ஓரிரண்டு படங்கள் பிள்ளையார் சுழியிட்டிருக்க வேண்டும். அவை எப்படங்கள் என்று எண்ணிப் பார்த்தேன். மலையூர் மம்பட்டியானும் மண்வாசனையும் வன்முறைக் கொலைகளை கதைப்பொருளாகக் கொண்டு வெளியாகி பெருவெற்றி பெற்ற படங்கள் என்று கூறலாம். அவ்விரண்டு படங்களும்தான் அத்தகைய போக்கினை முன்னெடுத்தன.

    Malaiyur Mambattiyan

    எளிய மக்கள் திரளிடையே தோன்றி நிலப்பண்ணை முறைமைகளின் கொடுமைகளை எதிர்த்து வன்முறையாளர்களாக மாறிய இளைஞர்கள் என்று ஒரு வரிசை இருக்கிறது. முப்பதாண்டுகளுக்கு முன்பு வரை பழைமையின் சட்டதிட்டங்கள் நன்றாகவே மக்களை இயக்கின. ஆண்டான் அடிமை என்னும் படிநிலை தமக்குரிய கொடுக்கல் வாங்கல்களோடு நடைமுறையில் இருந்தது. அன்றைக்கு எதையும் பேசிப் பார்ப்பார்கள். இல்லையேல் அரிவாள் கத்தி என்று வன்முறையில் இறங்கிவிடுவார்கள். உறவு எவ்வளவுக்கு எளிதோ அவ்வளவுக்குப் பகையும் எளிது. இன்றைக்குள்ளதுபோல் உள்ளூர் மட்டம் வரை காவல்துறையினரின் கண்காணிப்பு பரவியிருக்கவில்லை. எதற்கெடுத்தாலும் காவல் நிலையத்தின் வாசலில் வந்து நிற்கும் பழக்கமும் தோன்றியிருக்கவில்லை.

    Malaiyur Mambattiyan

    சேலம் மாவட்டம் மேச்சேரிக்கு அருகே மலையூர் என்றொரு சிற்றூர் இருக்கிறது. பெயரிலேயே அது மலைகள் சூழ்ந்த ஊர் என்பது விளங்கும். சேலம் மாவட்டத்து ஊர்ப்புறங்களிடையே ஒரு பழக்கம் வழிவழியாகவே தொடர்ந்து வருகிறது. ஒருவர்க்குக் கண்ணே மணியே என்று என்னதான் புகழ்ச்சியான பெயரைச் சூட்டினாலும் அவர்க்கு இயல்பு நவிற்சியாக ஒரு செல்லப்பெயரிட்டுத்தான் அழைப்பார்கள். எதிர்தரப்பினர் என்றால் அந்த இயல்பு நவிற்சி இழிவு நவிற்சியாக மாறிவிடும். கோணையன், குச்சு வீட்டுக்காரன், செம்பட்டை, ஓட்டை வாயன், ஓலைவாயன் என்று அந்தப் பெயர்களுக்குத் தனி அகராதியே வெளியிடலாம். அதைப்போலத்தான் ஐயாத்துரை என்ற இயற்பெயருடையவர் எந்நேரமும் மண்வெட்டியோடு காணப்பட்டமையால் 'மம்பட்டியான்' எனப்பட்டார்.

    Malaiyur Mambattiyan

    உள்ளூர் நிலப்பண்ணையாளர்களின் ஏவலர்களாக மாறிய மம்பட்டியான் தரப்பினர் வெறிக்கொலைகளைச் செய்து காட்டில் தலைமறைவாக வாழவேண்டியவர்களானார்கள். ஏற்கெனவே இரண்டு மனைவியரும் ஐந்து பிள்ளைகளும் உடையவரான மம்பட்டியானின் காதல்தான் எமனாக வந்து பதம்பார்த்தது. சட்டமன்றம் வரை அல்லோல கல்லோலப்பட்ட மம்பட்டியான் கொல்லப்பட்டது சேலம் மாவட்டத்தின் பதற்றமான பேசுபொருளானது. மம்பட்டியானை உயர்த்தியும் வியந்தும் நாட்டுப்பாடல்கள் பல தோன்றின. அவற்றில் மம்பட்டியான் கொலைச்சிந்து என்னும் பாடல் இணையத்தில் கிடைக்கிறது. இடுப்பில் துப்பாக்கிக் குண்டுகளும், அருகில் சோற்றுப் பாத்திரமும் துப்பாக்கியுமாய் அரைக்கால்சட்டையோடு செத்துச் சரிந்திருக்கும் மம்பட்டியானின் புகைப்படத்தைப் பார்க்கையில் இரக்கமே மிஞ்சுகிறது.

    Malaiyur Mambattiyan

    சின்ன சின்ன எதிர்குணப்பாங்கு வேடங்களில் நடித்துக்கொண்டிருந்த தியாகராஜனுக்கு மலையூர் மம்பட்டியான் வேடம் நன்கு பொருந்தியது. முகத்தில் எவ்வித மெய்ப்பாடுகளையும் காட்ட வேண்டியதில்லை. இறுக்கமாக வைத்திருந்தால் போதும். ஒருபோதும் தாடி வைத்திராதவன் மம்பட்டியான். திரைப்படத்தில் மம்பட்டியான் தாடியோடு வந்தான். தொடக்கத்திலிருந்து தமது சந்தை மதிப்பு சரியும்வரை பெரும்பாலும் எல்லாப் படங்களிலும் தாடியோடு நடித்த நாயக நடிகர் தியாகராஜன்தான். ஏனோ தெரியவில்லை, தாடியானது மீசையைப்போல் தமிழர்களால் விரும்பப்படுவதில்லை.

    Malaiyur Mambattiyan

    இராஜசேகர் என்னும் வணிகப்பட இயக்குநரைப் பற்றி இக்காலத்தினர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. எண்பதுகளின் பெரிய திரைப்படங்கள் பலவற்றை இயக்கிய இராஜசேகரின் புகைப்படத்தைத் தேடினால்கூடக் கிடைக்கவில்லை. காக்கிச் சட்டை, விக்ரம், தம்பிக்கு எந்த ஊரு, படிக்காதவன், மாவீரன், பாட்டி சொல்லைத் தட்டாதே, தர்மதுரை ஆகிய படங்களை இயக்கியவர் அவர். அம்மா என்ற படத்தின் வழியாக அறிமுகமானவரான இராஜசேகர்க்கு மலையூர் மம்பட்டியான் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. வணிகப்படங்கள் அரங்கங்களுக்குள் தடுமாறிக்கொண்டிருந்தபோது வெளிப்புறக் காட்சிகளைச் சிறப்பாக எடுத்துக்கோத்தவர் இராஜசேகர். தம்பிக்கு எந்த ஊரு திரைப்படத்திற்காக ஊர்ப்புறங்களிலும் வயல்வெளிகளிலும் படமாக்கப்பட்ட காட்சிகள் அரங்கிற்குள் எடுக்கப்பட்டதைவிட மேம்பட்டதாக இருக்கின்றன. நடிகர்களின் நல்ல நடிப்புக்கு அரங்கப் படப்பிடிப்பு உதவும் என்பார்கள். வெளிப்புறப் படப்பிடிப்பில் அவர்களுக்கு உரிய இணக்கத்தைத் தோற்றுவித்து நடிக்க வைப்பது சற்றே கடினம்தான். ஆனால், இராஜசேகரின் இயக்கத்தில் வெளிப்புறக் காட்சிகள் நன்றாக அமைந்தன.

    Malaiyur Mambattiyan

    மலையூர் மம்பட்டியான் திரைப்படத்தில் இரவில் எடுக்கப்பட்டதைப் போன்ற துரத்தல் காட்சிகள் அப்போது பரவலாகப் பேசப்பட்டன. மம்பட்டியானின் குதிரை வண்டியைக் காவல்துறைச் சீறுந்து மலைப்பாதையில் நிலவு வெளிச்சத்தில் துரத்திக்கொண்டு செல்லும். பகலிலேயே ஒளி வடிகட்டிகளைப் பயன்படுத்தி அக்காட்சிகள் எடுக்கப்பட்டிருந்தன. பல கொலைகளைச் செய்த எதிர்மறைக் குணப்பாங்குடையவனை நாயகனாக மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்றால் அங்கேதான் ஓர் இயக்குநர் தம் திரைமொழியால் வெற்றியடைகிறார். தனியறையில் தலைகீழாகக் கட்டித் தொங்கப்போடப்பட்ட மம்பட்டியான் ஊசலாட்டம் நிகழ்த்தி ஒரு மெழுகுவத்தியை வாயால் கவ்விக் கயிற்றைப் பொசுக்கி விடுபடும் காட்சியில் அன்று மெய் சிலிர்க்காதவர்களே இல்லை எனலாம்.

    Malaiyur Mambattiyan

    'காட்டுவழி போற பொன்னே... கவலைப்படாத... காட்டுப்புலி வழிமறிக்கும் கலங்கி நிற்காத...' என்று இளையராஜாவின் தலைப்புப் பாடலோடு தொடங்கிய அப்படம் இரண்டாவது மூன்றாவது வெளியீடுகளிலும் மக்களைத் தொடர்ந்து ஈர்த்தது. பதினாறு வயதினிலே தொடங்கி பல படங்களில் எழுத்துருக்கள் காட்டப்படும்போது பின்னணியில் இளையராஜாவின் குரலில் தலைப்பாடல் ஒலித்தது என்றாலும் மலையூர் மம்பட்டியானுக்குப் பிறகு அவர் பாடிய பாடல் இடம்பெறுவது கட்டாயமானது. தலைப்பில் அவர் குரல் ஒலிக்க வேண்டும் என்று பட முதலாளிகள் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொண்டனர்.

    Malaiyur Mambattiyan

    மலையூர் மம்பட்டியான் திரைப்படத்தைத் தியாகராஜனே மீளாக்கம் செய்து அண்மையில் வெளியிட்டார். படத்தின் ஆக்கத்திலும் சண்டைக்காட்சியிலும் இன்றைய தொழில்நுட்பத்தால் இயல்கின்ற அனைத்தையும் பயன்படுத்தியிருந்தார்தான். ஆனால், பழைய மம்பட்டியானைப் பதைபதைப்போடு கண்ட மக்கள் புதிய மம்பட்டியானை ஏனோ புறக்கணித்துவிட்டனர்.

    English summary
    Magedeswaran remembers Thiagarajan starrer Rajasekar's cult classic Malaiyur Mambattiyan
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X