அதுல கொஞ்சம் கூட உண்மையில்லை.. அந்த நடிகர் படத்துல நான் நடிக்கவே இல்லை.. மாளவிகா மோகனன் அதிரடி!
சென்னை: மாளவிகா மோகனன் அடுத்ததாக சல்மான் கான் உடன் ஜோடி போட்டு நடிப்பதாக வந்த செய்தியை முற்றிலுமாக மறுத்து ட்வீட் போட்டிருப்பது பரபரப்பை கிளப்பி உள்ளது.
மலையாள ஒளிப்பதிவாளர் கே.யூ. மோகனனின் மகளான மாளவிகா மோகனன் துல்கர் சல்மானின் பட்டம் போலே படத்தின் மூலம் கடந்த 2013ம் ஆண்டு ஹீரோயினாக அறிமுகமானார்.
நானு மாட்டு வரலக்ஷ்மி எனும் கன்னட படத்தில் நடித்த அவருக்கு அடுத்ததாக சர்வதேச இயக்குநர் மஜித் மஜிதி இயக்கத்தில் பாலிவுட்டில் வெளியான பியாண்ட் தி கிளவுட்ஸ் எனும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ரஜினி படத்தில் அறிமுகம்
மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து வந்த மாளவிகா மோகனன் தமிழில் நடிகர் ரஜினிகாந்த், விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானார். சசிகுமாருக்கு ஜோடியாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பேட்ட படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மாஸ்டர்
பேட்ட படத்தில் அறிமுகம் ஆனாலும், ஹீரோயினாக நடிக்கவில்லையே என்கிற குறையை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தின் மூலம் தீர்த்து வைத்தார். விஜய்க்கு ஜோடியாக நடித்து ரசிகர்களை 'அந்த கண்ண பார்த்தாக்க' என கொஞ்சி பாட வைத்திருந்தார். மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய்யை திட்டி பேசி நடித்த காட்சிகள் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டன.

தனுஷ் படத்தில்
மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் நேரடியாக ரிலீசான மாறன் படத்திலும் இவர் தான் ஹீரோயின். இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அந்த படம் வந்ததே தெரியாமல் படு தோல்வியை சந்தித்த நிலையில், மாளவிகா மோகனன் அடுத்து என்ன படத்தில் யாருக்கு ஜோடியாக நடிக்க போகிறார் என்கிற கேள்வி எழுந்தது.

பாலிவுட்டில் பிசி
யுத்ரா எனும் பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார் மாளவிகா மோகனன், அடுத்ததாக அந்த படம் தான் வெளியாக போகிறது. இந்நிலையில், சல்மான் கான் படத்தில் மாளவிகா மோகனன் அவருக்கு ஜோடியாக இணைந்து நடிக்கப் போவதாக சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு பரபரப்பை கிளப்பின.

சல்மான் கான் கூட நடிக்கல
ஆனால், அந்த செய்தியை அவ்வளவு எளிதாக கடந்து போகாமல், அதன் ஸ்க்ரீன் ஷாட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டு இது முற்றிலும் பொய்யான செய்தி என அதிரடி காட்டி உள்ளார் மாளவிகா மோகனன். இதை ஏன் இங்கே போடுகிறேன் என்றால், பலரும் எனக்கு போன் செய்து தொல்லை செய்கிறார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இப்படி பதிவிட்டு இருக்கிறேன் என விளக்கமும் கொடுத்துள்ளார்.

எதிர்காலத்தில்
பாலிவுட் நடிகர் சல்மான் கானுடன் அடுத்ததாக பூஜா ஹெக்டே நடிக்கப் போகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகை மாளவிகா மோகனனும் எதிர்காலத்தில் சல்மான் கான் உடன் இணைந்து நடிக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். முன்னதாக பிரபாஸ் படத்தில் மாளவிகா மோகனன் நடிக்கப் போவதாகவும் வதந்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











