புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல இசையமைப்பாளர் திடீர் மரணம்... சோகத்தில் திரையுலகம்!
திருவனந்தபுரம்: புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல மலையாள இசையமைப்பாளர் கைதபிரம் விஸ்வநாதன் நம்பூதிரி காலமானார். அவருக்கு வயது 58.
கேரள மாநிலம் பைய்யனூரை அடுத்த கைதபிரம் கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன் நம்பூதிரி. கைதபிரம் கிராமத்தை பூர்விகமாக கொண்டவர் என்பதால் பெயருக்கு பின்னால் கைதபிரமும் சேர்ந்துக் கொண்டது.
மலையாள சினிமாவில் 1996ஆம் ஆண்டு இசையமைப்பாளராக அறிமுகமான கைதபிரம் விஸ்வநாதன் 20க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

ஜெயராஜ் இயக்கிய கண்ணகி
இவர் எழுத்தாளரும் இசையமைப்பாளருமான கைதபிரம் தாமோதரன் நம்பூதிரியின் சகோதரர் ஆவார். இவர் செம்பை வைத்தியநாத பாகவதரிடம் இசைக் கற்றார். இயக்குனர் ஜெயராஜ் இயக்கிய 'கண்ணகி' மற்றும் திலீப் நடித்த 'திலக்கம்' ஆகிய படங்கள் அவரது இசையில் வெளியான முக்கியமான படங்கள் ஆகும்.

கேரள அரசின் விருது
கண்ணகி படத்திற்காக கேரள அரசின் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதையும் பெற்றார் கைதபிரம் விஸ்வநாதன் நம்பூதிரி. ஜெயராஜின் 'தேசதானம்' படத்தில் அறிமுகமான கைதப்பிரம், தனது சொந்த சகோதரர் கைதப்பிரம் தாமோதரனின் அவார்டு வின்னிங் படத்தில் உதவியாளராகப் பணியாற்றினார்.

மருத்துவமனையில் சிகிச்சை
கைதப்பிரம் விஸ்வநாதன் நம்பூதிரியின் குறிப்பிடத்தக்க படைப்புகளில் 'ஏகாந்தம்' படத்தில் 'கையேதும் தூரே ஒரு குட்டிகாலம்', 'நீயொரு புழையாய்', 'திலக்கம்' படத்தில் வரும் 'எனிக்கொரு பெண்' ஆகிய பாடல்கள் பெரும் வெற்றி பெற்றவை. புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த கைதப்பிரம் விஸ்வநாதன் நம்பூதிரி கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

திரையுலகினர் இரங்கல்
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். கைதப்பிரம் விஸ்வநாதனுக்கு கௌரி அந்திஜனம் என்ற மனைவியும், அதிதி, நர்மதா மற்றும் கேசவன் என்ற மூன்று பிள்ளைகளும் உள்ளனர். கைதபிரம் விஸ்வநாதனின் மறைவுக்கு மலையாள திரையுலகத்தினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











