மலையாள திரையுலகை மிரட்டும் கொரோனா... ஜெயராமுக்கும் கோவிட் பாசிட்டிவ்
திருவனந்தபுரம் : கோலிவுட்டை போல் மலையாள திரையுலகை சேர்ந்த பலருக்கும் அடுத்தடுத்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருவது அனைவரையும் கவலை அடைய வைத்துள்ளது. அதிலும் முன்னணி நடிகர்கள் ஒருவர் பின் ஒருவராக பாதிக்கப்படுவதால் ரசிகர்கள் அவர்களுக்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக கோலிவுட்டை சேர்ந்த கமலஹாசன், வடிவேலு, சத்யராஜ், அருண்விஜய், த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் கமலஹாசன், வடிவேலு போன்றோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, குணமடைந்தனர்.

மம்முட்டிக்கு கொரோனா
கோலிவுட்டை தொடர்ந்து தற்போது மலையாள திரையுலகை சேர்ந்த முன்னணி ஹீரோக்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. கடந்த வாரம் மம்முட்டிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாகவும், நலமுடன் இருப்பதாகவும் ட்விட்டரில் அறிவித்தார். இவர் தற்போது சிபிஐ படத்தில் படு பிஸியாக நடித்து வந்தார். தொடர்ந்து ஓய்வில்லாமல் ஷுட்டிங்கில் பங்கேற்று வந்த மம்முட்டிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இவங்களுக்கும் கொரோனா
அவரைத் தொடர்ந்து சுரேஷ் கோபிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்நிலையில் மம்முட்டியை தொடர்ந்து அவரது மகனும் நடிகருமான துல்கர் சல்மானுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் ஆகியோர் தொடர்ந்து சோஷியல் மீடியாவில் வாழ்த்தி வருகின்றனர்.

ஜெயராமுக்கும் கொரோனா
இந்நிலையில் இன்று மற்றொரு மலையாள முன்னணி நடிகரான ஜெயராமுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பற்றி இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டுள்ள அவர், இன்று எனக்கு கொரோனா பாசிட்டிவ் கண்டறியப்பட்டது. அந்த வைரஸ் இன்னும் நம்மிடம் தான் உள்ளது என்பதை இது நினைவுபடுத்துகிறது. என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் உடனடியாக தனிப்படுத்திக் கொண்டு, அறிகுறிகள் இருந்தால் சோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். நானும் அதே வழியில் சிகிச்சையை துவங்கி உள்ளேன். விரைவில் உங்கள் அனைவரையும் சந்திப்பேன் என நம்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

மலையாள சினிமாவிற்கு திரும்பிய ஜெயராம்
கவலைப்பட வேண்டாம். விரைவில் குணமடைய வாழ்த்துக்கள். கவனமாக இருங்கள் என ரசிகர்கள் பலரும் ஜெயராமுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் பிரபல நடிகரான ஜெயராம் நன்கு மிமிக்ரி செய்யக் கூடியவர். சில படங்களில் பின்னணியும் பாடி உள்ளார். செண்டை மேள இசைக் கலைஞரும் கூட. இவர் தற்போது மக்கள், ஆடுபுலியாட்டம் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 2019 ம் ஆண்டு பட்டாபிராமன் படத்திற்கு பிறகு, மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க சென்று விட்ட ஜெயராம், தற்போது மீண்டும் மலையாள படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.


Click it and Unblock the Notifications











